உரோமில் முதல் உலக குழந்தைகள் தினக் கொண்டாட்டங்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
முதல் உலக குழந்தைகள் நாளானது சிறாரின் அனுபவப்பகிர்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பிக்கும் திருப்பலியுடன் நிறைவு பெற இருக்கின்றது என்றும், இந்நிகழ்வில் பங்கேற்பதற்கான ஏறக்குறைய 57ஆயிரத்திற்கும் அதிகமான மின்னஞ்சல் பதிவுகள் இதுவரை வந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் என்சோ ஃபொர்த்துனோ.
வரும் மே 25, 26 ஆகிய நாள்களில் உரோமில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ள முதல் உலக குழந்தைகள் நாளுக்கான தயாரிப்புப் பணிகள் பற்றி எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினார் முதல் உலக குழந்தைகள் நாளுக்கான ஒருங்கிணைப்பாளர் அருள்பணி என்சோ ஃபொர்த்துனோ.
நாங்களே மகிழ்ச்சி, நாங்களே நம்பிக்கை, உலகின் புதுமை நாங்களே, எங்களது பாடல் வழியாக அமைதியையும் புன்னகையையும் இல்லாதவர்களுக்குக் கொடுப்போம் என்ற குழந்தைகளின் பாடலானது அந்தோனியானோ பாடகர் குழுவினரால் பாடப்பட உள்ளது என்றும், இரண்டு நாள்கள் கொண்ட இக்கொண்டாட்டமானது சிறார் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனுபவப்பகிர்வுகள் கொண்ட முதல் நாளுடன் ஆரம்பமாகி, இரண்டாம் நாள் வத்திக்கான் வளாகத்தில் நடைபெறும் திருத்தந்தை தலைமையேற்று வழிநடத்தும் சிறப்புத் திருப்பலியுடன் நிறைவடையும் என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் ஃபொர்த்துனோ.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் திறக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு ஏறக்குறைய 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் பதிவுகள் வந்துள்ளன என்று கூறிய அருள்பணியாளர் ஃபொர்த்துனோ அவர்கள், "அன்பின் புயலாக, தூய்மை மற்றும் அமைதிக்கான நாள்களாக இவ்விரண்டு நாள்களும் இருக்கும் என்றும் கூறினார்.
ஆப்கானிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, எரித்திரியா, சிரியா, ஜிஹாதிக் குழுக்களால் பாதிக்கப்பட்ட வடக்கு மொசாம்பிக், உக்ரைன், இரஷ்யா மற்றும் புனித பூமியிலிருந்தும் குழந்தைகள் பலர் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார் அருள்பணி ஃபொர்த்துனோ.
முதல் உலக குழந்தைகள் தினம் மே 25 சனிக்கிழமை அன்று உரோமில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில் உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற இருக்கின்றது. முதல் இரண்டு மணி நேரம் உலகெங்கிலும் இருந்து வரும் சிறார் தங்களது அனுபவப் பகிர்வுகளையும் கலைகளையும் வழங்க இருக்கின்றனர்.
மே 26 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் உரோம் உள்ளூர் நேரம் 10.30 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று சிறப்பிக்கும் திருப்பலியுடன் இக்கொண்டாட்டமானது நிறைவு பெற இருக்கின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்