விடை தேடும் வினாக்கள் – சொல்வதை செய்வதே தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
“நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்? (லூக் 6:46) என்ற இயேசுவின் கேள்வியை இன்றைய நம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம்.
இந்த கேள்வியைக் கேட்கும் இயேசு, இதனைத் தொடர்ந்து இருவகை அடித்தளங்கள் பற்றி எடுத்துரைப்பது, இயேசுவின் இந்த கேள்வியைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும்.
“நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்; அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால், அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது. நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தளம் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது.” (லூக் 6:46-49)
“நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்?” என்பது யாருக்கான கேள்வி?. கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் இந்த கேள்வி விடப்படுகிறது. கிறிஸ்தவர்களாக இருப்பது என்றால் என்ன என்று நாம் புரிந்துவைத்திருக்கிறோம் என்பதை கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். கிறிஸ்துவை நம்பி அவரை ஏற்றுகொண்டால் போதும் என்பதாக நம் கிறிஸ்தவம் முடிந்துவிடுகிறது. அவரது போதனைகளை வாழ்வில் செயல்படுத்திக் காட்டுவதிலும்தான் கிறிஸ்தவம் அடங்கியுள்ளது என்பதை நாம் எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கின்றோமா?. இத்தகைய மக்களை நோக்கித்தான் மிகத் தீவிரமாக இந்தக் கேள்வியைக் கேட்கிறார் இயேசு. நம் பதில்மொழி என்ன?
விசுவாசம் என்பது செயல்களை நோக்கி நம்மை வழிநடத்த வேண்டும். வார்த்தைகள் வாழ்க்கையாக வேண்டும். நமது வார்த்தைகளுக்கும், நமது வாழ்க்கைக்கும் இடையே இடைவெளி என்பது ஒரு நாளும் இருக்கக் கூடாது. செயலற்ற விசுவாசம், அல்லது செத்த விசுவாசத்தால் யாருக்கு என்ன இலாபம்?
இறைவனை வாயாரப் புகழ்வது, ஆராதனைச் செய்வது, காணிக்கையளிப்பது என இவை போதும் என நமக்கு நாமே ஓர் எல்லையை வைத்திருக்கிறோம். ஞாயிறு திருப்பலிக்குச் சென்று, மறையுரை கேட்டு, திருநற்கருணை எடுத்துக்கொண்டால் அடுத்த ஒரு வாரத்திற்கான நம் கடமையை நிறைவேற்றிவிட்டோம் என்ற திருப்தியை நமக்கு நாமே ஊட்டிக்கொள்கிறோம். கோவிலில் இருந்து திரும்பிச் செல்லும் வழியில் கிடக்கும் ஏழை குறித்து நமக்கு இரக்கம் வரவில்லை. தன்னைப்போல் பிறரையும் அன்புகூராதவர் விண்ணகத்தில் நுழைய முடியாது என்ற இயேசுவின் வார்த்தைகளும் நினைவுக்கு வருவதில்லை.
ஆண்டவரே, ஆண்டவரே என நாம் அழைப்பது அவரை இறைவன் எனத் தெரிந்துகொண்டதை குறிக்கலாம். ஆனால், அவரை புரிந்து கொண்டோமா என்பதுதான் அடுத்த கேள்வி. அவரைத் தேர்ந்துகொண்ட நாம் அவரைப் புரிந்துகொண்டோமானால், நிச்சயமாக அவர் நம்மிடம் எதிர்பார்க்கும்படி செயல்பட்டிருப்போம், நிச்சயமாக பெயரளவுக்கு கிறிஸ்தவர்களாக இருக்கமாட்டோம். ஏனெனில் இறைவன் பார்ப்பது, நம் புறத்தையல்ல, அகவாழ்வை. வெறும் வார்த்தைகளால் அவரை ஏமாற்றிவிடமுடியாது, ஏனெனில், நம் அகவாழ்வை அணுஅணுவாகத் தெரிந்தவர் அவர். பேசுவதைக் குறைத்து செயல்களால் இறைவனை மகிமைப்படுத்து என்கிறார் இயேசு. நாம் செய்யவேண்டியது எல்லாம், இறைவனின் வார்த்தைகளின்படி வாழ்வதாகும்.
அவர் நம்மை நோக்கிக் கேட்பது என்று பார்க்கும்போது முதலில் வருவது, அவரின் இரண்டு கட்டளைகள்தான். “எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசிப்பது, தன்னைத் தான் நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது” என்பவைதான் அவை. அதற்கு விளக்கம் கூறும் விதமாக, கண்ணில் காணும் சகோதரனை நேசிக்காமல் கடவுளை நேசிக்க முடியாது எனவும் எடுத்துரைக்கிறார் இயேசு. இன்றைய கேள்வியைத் தொடர்ந்து, இறுதி நாளிலும் நம்மை நோக்கி அவர் கேட்கும் கேள்விகள் உள்ளன. நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என கூப்பிடும் நீங்கள், நான் பசியாயிருந்தபோது உணவளித்தீர்களா? ஆடையின்றி இருந்தபோது உடுத்தினீர்களா? அந்நியனாய் இருந்தபோது வரவேற்றீர்களா? நோயுற்றிருந்தபோது பார்க்க வந்தீர்களா? என்ற கேள்விகளை அடுக்கடுக்காக எதிர்நோக்கத் தயாராக இருப்போம்.
நாம் ஒவ்வொருவரும் இறைவார்த்தையைக் கேட்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறோம். ஆனால், அதைக் கடைப்பிடித்து வாழ்கின்றபோது இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்ற உண்மையை உணர்ந்து செயல்படுவதில்லை. இங்குதான் இயேசு, இரண்டு வகையான மனிதர்களைக் குறித்து பேசுகின்றார். அதில் முதலில் வருகின்றவர்கள், இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடக்கூடியவர்கள். இறைவார்த்தையைக் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளக் கூடியவர்கள் இன்றைக்குப் பலர் இருக்கின்றார்கள். ‘இறைவார்த்தையைக் கேட்டுவிட்டோம் அதோடு நம்முடைய சமயக்கடமை முடிந்துவிட்டது’ என்பதாக இருக்கின்றது இவர்களின் எண்ணம்.
இறைவார்த்தையைக் கேட்பதோடு மட்டுமல்லாமல், அதன்படி வாழ்கின்றவர்கள் நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய இரண்டாவது வகையினர். இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்கின்றபோது, எத்தகைய சவால்கள் வந்தாலும் உறுதியாக இருப்பவர்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்களை இயேசு கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பிடுகின்றார். இறைவார்த்தையைக் கேட்டு, அதில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் என இயேசு எதிர்பார்த்திருக்க, நடைமுறையோ வேறொன்றாக இருக்கின்றது.
புனித யாக்கோபு தன் திருமடலில், ‘இறைவார்த்தையைக் கேட்கின்றவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ளவேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்’ (யாக் 1: 22) என்று கூறுவதை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம். இயேசுவின் வாழ்வில் நடந்த பிறிதொரு நிகழ்வையும் இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அவரின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தபோது, மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுகமுடியவில்லை. "உம் தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவிக்கப்பட்ட வேளையில், அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்கிறார். இதைத்தான் நம் இன்றைய விடை தேடும் வினாக்கள் நிகழ்ச்சியிலும், நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்? என கேள்வியாக நம்மை நோக்கிக் கேட்கிறார் இயேசு. இயேசு சொல்வதை நாம் கேட்கவேண்டியது முதலில், அதன் பின்னர், அவர் சொல்படி செயல்படுவது. ஆனால், நாமோ இவைகளை விட்டுவிட்டு, அவர் புகழ்பாடினால் போதும் என்று எண்ணி ஆண்டவரே, ஆண்டவரே என கூப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் சொல்வதைச் செய்யாமல், வெறும் வாய் வார்த்தைகளால் 'ஆண்டவரே' என்றழைப்பது வீண் என்று நாம் உணர்வதில்லை.
மேலும், இயேசு மத்தேயு நற்செய்தியில், சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள முரண்பாட்டை வலியுறுத்தி, மற்றொரு வகையான எச்சரிக்கையை விடுப்பதையும் இங்கு நோக்கிவிடுவோம். மறைநூல் அறிஞர்களையும், பரிசேயரையும் குறித்து அவர் விடுத்த எச்சரிக்கை என்னவெனில், ‘அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்’ (மத்தேயு 23:3), என உரைப்பதாகும்.
மலைப் பொழிவின்போது கூடியிருந்த சீடர்களையும், திரளான மக்களையும் நோக்கி இயேசு, நற்செய்தியைக் கேட்பதோடு விட்டுவிடாமல் அதன்படி வாழ்வில் செயல்படவேண்டும் என்று மிக விவரமாக அறிவித்தார். அதை ஓர் உவமையாகவும் கூறினார். ஆம். பாறையில் கட்டப்பட்ட வீடு பற்றியதே அந்த உவமை.
கோவிலுக்குப் போவதும், நற்செய்தியைப் பற்றி பேசுவதும், இறைவனைப் போற்றிப் புகழ்வதும், சடங்குகளைக் கைக்கொள்வதும் இறையாட்சி அல்ல, அது மேலோட்டமான வெளிச்சடங்குகளாக இருக்கின்றன. ஆனால், அதையும் தாண்டி நாம் செல்லவேண்டும் என இயேசு விரும்புகிறார். இந்த வெளிச்சடங்குகள் நம் உள்மனமாற்றத்தின் வெளிப்பாடுகளாக இருக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம், நம் உள்மன மாற்றத்திற்கு இவை நம்மை இட்டுச்செல்ல வேண்டும். நாம் மீட்கப்பட்டவர்கள், இறையாட்சியைப் பெற்றவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட குலம் என்று பெருமைப்பட்டுக்கொள்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. நமக்கென பெறப்பட்ட மீட்பு, நம் தனிப்பட்ட முயற்சிகளின்றி நம்மை வந்தடைவதில்லை. அதாவது நம் ஒத்துழைப்பின்றி நாம் மீட்கப்படுவதில்லை.
நம் வாழ்வில் தூய ஆவியின் அன்பு, பரிவு, இரக்கம் போன்ற கனிகளைப் பெறவேண்டுமெனில், நம் வெளிவேட நிலைகளைக் களைந்து, நம் மேலோட்டமான ஆன்மீக சம்பிரதாயங்களை மாற்றி, நம்மிடம் இறைவனால் எதிர்பார்க்கப்படுபவைகளை நாம் ஆற்றவேண்டும். இறை விருப்பத்தை நிறைவேற்றுவது என்பது சற்றே கடினமான காரியம்தான். ஆனால் நிச்சயம் இயலாத காரியமல்ல. ஆனால் அதை நிறைவேற்ற நாம் கொண்டிருக்கும் மனநிலை என்ன என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். கட்டளைகளையும் சட்டங்களையும் மேலோட்டமாகப் புரிந்து கொண்டு கடவுளின் உண்மையான விருப்பத்தை அறிந்து செயல்படாத பரிசேயர்களுக்கும் மறைநூல் அறிஞர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? தினமும் ஜெபிப்பதும், இறைவார்த்தையை வாசிப்பதும், திருப்பலியில் பங்கேற்பதும் மட்டுமே கிறிஸ்தவனுக்குரிய அடையாளங்களா? தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்(எரே 1:5) என்றுரைக்கும் கடவுளை நாம் ஆழமாக அறிந்திருக்கிறோமா? நம்மிடம் அவர் எதிர்பார்ப்பவைகளை புரிந்திருக்கிறோமா? கடவுளின் வார்த்தை இன்று நமக்கான வழிகள் எதையும் உருவாக்காமல், மனிதத்தை செயல்படவைக்க நமக்கு உதவாமல் முடக்கப்பட்டிருந்தால் அது யார் தவறு? இயேசுவின் வார்த்தைகளை, பாதைகளைப் புரிந்துகொள்ளாத நம் தவறுதான்.
இப்போது, விவிலியத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ள அன்னை மரியாவின் நான்கு வார்த்தைகளை நினவுக்குக் கொணர்வோம். "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" (யோவான் 2:5) என்று அன்னை மரியா கானா திருமணத்தில் கூறிய இந்த நான்கு சொற்களே, விவிலியத்தில் அவர் கூறிய இறுதிச் சொற்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு சொற்களே, அன்னை மரியா, நமக்கு விட்டுச் சென்றுள்ள விலைமதிப்பற்ற பாரம்பரியம். அன்னை மரியா கூறியுள்ள இந்த நான்கு சொற்கள், நம் வாழ்வின் அடித்தளமாக மாறினால், நம் குறைகள் நீங்கி, நிறைவு தோன்றும் அற்புதத்தை நம்மால் காணமுடியும். ஆண்டவரே, ஆண்டவரே என்று அழைப்பதோடு நின்றுவிடாமல், இறைவிருப்பத்தை நிறைவேற்றுவதில் நம் முழு கவனத்தையும் செலுத்துவோம். அதுவே நம்மிடம் எதிர்பார்க்கப்படுவது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்