விடை தேடும் வினாக்கள் - கவலைப்படுவதால் என்ன பயன்?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மதம் என்ற எல்லைகளைக் கடந்து கிறிஸ்தவ நெறிகள் உலகத்தலைவர்களை, பெரும் அறிஞர்களைக் கவர்ந்துள்ளதற்கு ஒரு முக்கியக் காரணம் இயேசுவின் மலைப்பொழிவு என்று சொன்னால் மிகையில்லை. இயேசுவின் மலைப்பொழிவில் வரும் ஒரு கேள்வியைப் புரிந்துகொள்ள மலைப்பொழிவின் ஒரு பகுதியை முதலில் வாசிப்போம்.
அக்காலத்தில் இயேசு தன் சீடர்களிடம் கூறியதாவது: நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது. ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?... ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும. அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும் (மத்தேயு 6:24-34).
உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?
உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? என்ற மூன்று கேள்விகளை இங்கு நாம் காண்கிறோம். கேள்விகள் மூன்று என்றால் இந்த நற்செய்திப் பகுதியில் இயேசு நமக்கு வழங்கும் அறிவுரைகளும் மூன்று.
1. கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது.
2. எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? என்று கவலை கொள்ளாதீர்கள். கவலைப்படுவதால் பலனில்லை.
3. நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.
கவலை கொள்ளாதீர்கள், என இயேசு கூறும் பகுதியை இன்று கொஞ்சம் பார்ப்போம். கவலைப்படவே வேண்டாம் என்று இயேசு கூறவில்லை. அப்படி அவர் கூறியிருந்தால், அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும் என்று அவர் கூறியதற்கு அர்த்தம் இல்லாமல் போயிருக்கும். இயேசு கூறுவதெல்லாம் வீண் கவலை வேண்டாம் என்பதைத்தான்.
கடவுளையும், செல்வத்தையும் முதலில் ஒப்புமைப்படுத்தி பேசும் இயேசு, கடவுளையும், கவலைகளையும் இரண்டாம் பகுதியில் ஒப்புமைப்படுத்துகிறார். செல்வத்தைக் கடவுளுக்கு இணையாக வைத்து வழிபடுவதும், பணிவிடை செய்வதும் தவறு என்று கூறும் இயேசு, கடவுளை நம் கண்களிலிருந்து மறைக்கும் அளவு நம்மைக் கவலைகளால் நாமே ஆக்கிரமித்து வைத்திருப்பது பற்றியும் எச்சரிக்கிறார். சிறு, சிறுத் துளிகளாய் சேரும் கவலைகள் விரைவில் நம்மை மூழ்கடிக்கும் என்பது தெரியாததல்ல.
"கவலைப்படாதீர்கள்" என்று மட்டும் இயேசு கூறிச் சென்றிருந்தால், அவருக்கென்ன... இறைமகன், பிரமச்சாரி... எளிதாகச் சொல்லிவிட்டார் என்று நாம் குறை கண்டுபிடித்திருப்போம். கவலை கொள்ளாமல் இருக்க இயேசு வழிகளையும் சொல்லியிருக்கிறார். கவலைக்குப் பதில் கடவுள் நம்பிக்கையால் மனதை நிரப்புங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
கவலைப்படுவதால் உங்களில் யார் தன் உயரத்தைக் கூட்டமுடியும் என்று அவர் நமக்கு முன் வைக்கும் ஓர் எதார்த்தமான சவால், நம்மை விழித்தெழச் செய்கிறது. கவலைப்படுவதால் ஒருவேளை நாம் குறுகிப் போக, உடல்நலம் குறைந்துபோக அதிக வாய்ப்புக்கள் உண்டே தவிர உயரத்தைக் கூட்ட முடியுமா என்று தெரியவில்லை.
உலகின் பல நாடுகளில், அதுவும் பல வழிகளிலும் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்கொலைக்கு அடுத்தபடியாக கவலைகளால் உருவாகும் வயிற்றுப்புண், இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகியவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பது இன்றைய புள்ளிவிவரங்கள்.
கவலைப் படுவதால், உடல் உயரத்தைக் கூட்ட முடியாது, உடல் நலத்தையும் கூட்ட முடியாது. செல்வம் சேர்க்காதீர்கள், கவலைப்படாதீர்கள் என்று இயேசு சொல்லவில்லை. காசையும், கவலைகளையும் கடவுளுக்கு இணையாகவோ, கடவுளாகவோ மாற்ற வேண்டாம், அவைகளுக்குக் கோவில் கட்டவோ, அவைகளுக்கு அடிமைகளாய் பணிவிடை செய்யவோ வேண்டாம் என்று இயேசு தெளிவுபடுத்துகிறார்.
மனிதனுக்கு உண்டாகும் எல்லா தீமைகளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது அவனது கவலையே. மனிதனுக்கு வரும் பெரும்பான்மையான நோய்களுக்கு இந்த கவலையே அடிப்படை காரணம். 'கவலைப்படுவது பயனற்றது' என்பது, நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஓர் உண்மை. கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? (மத்தேயு 6: 27) என்று இயேசு கேட்கும் கேள்வியை முற்றிலும் ஏற்பவர்களாக இருந்தாலும், கவலைப்படுவதை நாம் நிறுத்துவதில்லை. கவலை என்ற சுமையால் கனத்துப் போயிருக்கும் நமக்கு, இயேசு தரும் அற்புதமானத் தீர்வு, ஓர் அழைப்பாக ஒலிக்கிறது. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்தேயு 11: 28) என்று இயேசு விடுக்கும் இந்த அழைப்பு, நம்மைச் சிந்திக்க அழைக்கிறது.
இதைத்தான் புனித பேதுருவும், “உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்(1 பேதுரு 5:7) என இறைவன் நம்மீது காட்டும் அக்கறை குறித்து எடுத்துரைக்கிறார்.
ஆனால், நமது மனச்சுமைகளை, வாழ்வுச் சுமைகளை இறக்கிவைக்க, அல்லது அவற்றை மறப்பதற்கு உதவியாக இவ்வுலகம் காட்டும் வழிகள் ஏராளம். நாம் சுமக்கும் சுமைகளுக்கு, கடற்கரை உல்லாச விடுதிகள், மயக்கம்தரும் மருந்துகள், மதுபானங்கள், போதைப் பொருள்கள் போன்றவை தீர்வாக அமையும் என்று, இவ்வுலகம் சொல்லித் தருகிறது. இத்தீர்வுகள், நம் சுமைகளை மறக்கவும், மறுக்கவும் தூண்டும் பொய்யான வழிகள். சுமைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்கும் வழிகள்.
கவலைப்படுங்கள்! அது மிகவும் நல்லது! என்ன, எந்த அளவுக்குக் கவலைப்படுவது என்பதைத் தெரிந்து கொண்டு கவலைப் படுங்கள் என்று சொல்கிறார் இராபர்ட் ரோசென் என்கிற உளவியல் மற்றும் தலைமைப் பண்பு நிபுணர்!
கவலைக்கு காரணம் என்ன? கவலை படுவதில் நியாயம் இருக்கிறதா? போன்று ஆழ்ந்து சிந்திப்போம். கவலை என்பது ஒரு மாயை என்ற எண்ணத்தை உருவாக்கி கவலையிலிருந்து விடுபட இது உதவட்டும். நமக்கென்று எதுவும் நிரந்தரமாக சொந்தமில்லை. எது இன்று நம்முடையதோ அது நாளை வேறு ஒருவருடையதாகிறது. ஆகவே, எதை "இழந்தோம்" என்கிறோமோ. அது நம்முடையதல்ல. அப்படியிருக்க, நம்முடையது அல்லாதவைகளை, நாம் எப்படி இழந்திருக்க முடியம்? ஆக, இழக்காத ஒரு பொருளுக்கு நாம் அழுவதில் அர்த்தம் இல்லை.
கவலை இல்லாத மனிதன் யார்?. ஒரு மனிதன் இந்த உலகத்தில் வளரத் துவங்கும்போதே, கவலையும் அவனுடன் சேர்ந்து வளர்ந்துவருகிறது. வேலை பார்க்கும் இடத்தில், குடும்பத்தில், நண்பர்கள் மத்தியில், ஊரில், சமூகத்தில் என எங்கு திரும்பினாலும் பிரச்சனைகளோடுதான் மனிதன் வாழ்கிறான். இந்த பிரச்சனைகள் கவலைகளாக உருவெடுத்து அன்றாடம் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. உணர்ச்சிகளின் விளைவால் மனிதர்களால் உருவாக்கபடுகின்ற ஒரு மனநோய் தான் கவலை என்பர். கவலைகளின் பிறப்பிடமும் நம் மனம்தான். கவலைகளின் இருப்பிடமும் நம் மனம்தான். கவலைக்கு காரணமும் நம் மனம்தான். கவலைகளை விரட்ட வேண்டியதும் நம் மனம்தான். அதாவது, நம் மனமே கவலை என்கிற உணர்வை உருவாக்கி, நம் மனமே அந்த கவலையை ஓர் ஆயுதமாக்கி, மீண்டும் நம் மனதையே தண்டிக்கிறது. இதைத்தான் நாம் கவலை என்று சொல்லிக் கொண்டும் அழுது கொண்டும் இருக்கின்றோம். ஆம். கவலை என்பது சுயதண்டனையே தவிர வேறொன்றுமல்ல.
கவலைகளை சுமந்து கொண்டே இருப்பதுதான் மனித வாழ்க்கையாகிவிட்ட இன்றைய நிலையில், இதிலிருந்து எப்படி விடுபடுவது என சிந்திக்க வேண்டியுள்ளது. கவலையே நமது எதிரி. எதிரியை வீழ்த்த முதலில் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். கவலை என்பதை கற்பனையான வலை என்று குறிப்பிடுவதுண்டு. குற்ற உணர்வு, இழப்புணர்வு, உதவியற்ற நிலை, அபாயநிலை, பயனற்ற நிலை, வலி போன்ற உணர்வுகளும் கவலையை தரும். பொதுவாக நாம் எதிர்பார்த்தது நடவாமல் போகும் போது நம் மனதில் ஏற்படும் நிகழ்வு கவலை எனப்படும். அதாவது கவலை என்பது மனதில் மட்டுமே தோன்ற முடியும். நம் மனமே, கவலை என்கிற உணர்வை உருவாக்கி அந்த உணர்வைக் கொண்டே நம் மனமே நம் மனதை தாக்குகின்றது. நம் மனமே நம் மனதை தாக்குவதற்கு பெயர்தான் கவலை என்கிறோம்.
சில விடயங்கள் தோல்வியில் முடியும்போது, அது எதனால் தடைப்பட்டு உள்ளது அல்லது தள்ளிப்போனது என்று ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும். அதை முதலில் சரியாக்க வேண்டும். நம்மால் சரிசெய்ய முடியுமென்றால் சரிசெய்து கொள்ளலாம். செய்ய முடியவில்லையென்றால் சரியாகும் வரை காத்து இருக்க வேண்டும். அதைவிட்டு விட்டு நடக்கவில்லையே என்று கவலைப்படுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. அப்படி கவலைப் படுவதால் நம்முடைய உடம்பில்தான் பல நோய்களை கொண்டுவரும் அல்லது நோய்களை அதிகப்படுத்தும். ஞானமும் அனுபவமும் அதிகமாக இருப்பவரிடம் கவலைகள் அதிகமாக நெருங்குவதில்லை. எனவேதான் ஞானிகள் எந்த கவலையும் இல்லாமல் "தன்னுள்" ஆனந்தமாக உள்ளனர்.
நாளை என்ன நடக்கும் என்ற கவலை பலருக்கு உள்ளது. ‘நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில், நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்’ (மத்தேயு 6: 34), என்று இயேசு கூறியதை நினைத்துப் பாருங்கள். அதாவது, ‘இன்றைக்கு நான் என்ன செய்ய வேண்டும்’ என்று மட்டும் யோசியுங்கள். நாளைக்கு என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், மனதில் பல விடயங்களைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தால், நம்மால் எதையுமே சரியாக யோசிக்க முடியாது. அதுவே கவலைக்கு வழி கொடுப்பதாகும். ஆகவே, இறைவன் கையில் உங்கள் சுமைகளை இறக்கித் தந்துவிட்டு, சிறிது இளைப்பாறுங்கள், அதன்பின் இணைந்து நடைபோடலாம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்