தடம் தந்த தகைமை : தாவீதின்மீது சவுலின் பொறாமை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தாவீது பெலிஸ்தியனைக் கொன்ற பின், வீரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலை சந்திக்க வந்தனர். அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர். அப்பெண்கள் அப்படி ஆடிப்பாடுகையில் “சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்” என்று பாடினார். இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை; அவர் மிகவும் சினமுற்று, “அவர்கள் ‘தாவீதுக்குப் பதினாயிரம் பேர்’ என்றனர். எனக்கோ ‘ஆயிரம் பேர் மட்டுமே’ என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்று தான்!” என்று கூறினார். அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கண் கொண்டு பார்க்கலானார். மறுநாளே கடவுள் அனுப்பிய தீய ஆவி சவுலை ஆட்கொள்ள, அவர் தம் வீட்டில் பிதற்றினார். அப்போது தாவீது ஒவ்வொரு நாளும் செய்வது போல் யாழ் எடுத்து மீட்டினார். சவுலின் கையில் ஈட்டி இருந்தது. “நான் தாவீதை சுவரோடு சேர்த்துக் குத்துவேன்” என்று சவுல் நினைத்துத் தம் ஈட்டியை அவர்மேல் எறிந்தார்; ஆனால், தாவீது இருமுறை அதைத் தவிர்த்துவிட்டார்.
ஆண்டவர் தம்மிடமிருந்து விலகி, தாவீதுடன் இருந்ததனால் அவருக்குச் சவுல் அஞ்சினார். ஆதலால், சவுல் அவரைத் தம் முன்னின்று அகற்றி, ஆயிரவர் தலைவராக்கினார். தாவீது வீரர்களை முன்னின்று நடத்தினார். ஆண்டவர் தாவீதுடன் இருந்ததால் அவர் செய்த யாவற்றிலும் வெற்றி கண்டார். அவர் பெரும் வெற்றிகளைக் குவிப்பதைக் கண்ட போது, சவுல் அவருக்கு இன்னும் அஞ்சினார். ஆனால், இஸ்ரயேலரும் யூதா மக்கள் அனைவரும் தாவீதின் மீது அன்பு செலுத்தினர். ஏனெனில், அவரே அவர்களை முன்னின்று நடத்திச் சென்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்