தடம் தந்த தகைமை - ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய்.....
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
இயேசு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். (லூக் 5:4-5)
ஆழ்ந்த அன்புணர்வு கொண்டவர் இயேசு. அந்த அன்பைத் தன் அக்கறைமிக்க வழிகாட்டுதலாலும், செயல்பாடுகளாலும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். சீடர்களின் உழைப்பு, அதில் ஏற்பட்டக் களைப்பு, மன உளைச்சல் என யாவற்றையும் புரிந்த இயேசு ஆழத்திற்குச் சென்று மீன் பிடிக்க வழி சொல்கின்றார். இவர் தச்சருடைய மகன் அல்லவா? (மத் 14:55) என வியப்புடன் விவாதிக்கப்பட்ட இயேசு தச்சுத் தொழிலில்
மட்டுமன்றி மீன் பிடித்தலிலும் தேர்ந்தவர் எனப் புலனாகிறது. இயேசுவின் உடனிருந்து வழிநடத்தும் உயர்பண்பு இன்றைய தலைமைகளுக்கான சவால்.
இயேசுவின் சீடர் குழாம் உழைத்துப் பிழைத்து வாழும் பண்பு கொண்டிருந்தது. இயேசுவைப் பின்தொடர்ந்தாயிற்று; இனி எல்லாவற்றிற்கும் அவரே பொறுப்பு எனச் சோம்பி இருக்கவில்லை. தங்களது கடின உழைப்பில் தோல்வி கண்டாலும், இயேசுவின் வார்த்தை எனும் வழிகாட்டலை நம்பிச் செயல்பட்டதால் வெற்றி கண்டனர். அதுவே அவர்களை மனிதரைப் பிடிப்போராக்கிற்று. இயேசுவை நம்பி அவரோடு உழைத்தால் மகத்தானவற்றைக் காணலாம் என்பதே சீடர்கள் நமக்குச் சொல்லும் செய்தி. கடின உழைப்பல்ல; நுட்பமான உழைப்பே முக்கியம்.
இறைவா! எப்போதும் நான் உம்மோடு, உமக்காக உழைக்க வேண்டும்; அதில் ஏழையர் வாழ்வு பெற வேண்டும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்