தடம் தந்த தகைமை : அடுத்த ஊர்களுக்குப் போவோம்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
சீடர்கள் இயேசுவைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றுரைக்க, அவரோ, “நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும்; ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று சொல்கிறார்.
தேடல் எப்போதும் குறிக்கோள் நிறைந்தது. இயேசுவைச் சீடர்கள் தேடியது, அவர் காணாமல் போய்விட்டார் என்றல்ல. அவரது தொடக்ககால அருஞ்செயல்கள் கலிலேயா, கப்பர்நாகூம் பகுதியெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டன. அது அப்பகுதியில் ஒரு தேடலை
உருவாக்கிற்று. இயேசு இன்னும் ஏதேனும் செய்யமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உருவானது. எனவேதான் விடியற்காலையில் தனியே சென்று இறைவேண்டலுக்காகச் சென்றபோதும் அவர் தேடப்பட்டார்.
இயேசு ஒரு பாஸ்கா ஆடு. அவரது மனநிலையும் பாஸ்கா (கடந்து செல்லல்) உணர்வுகொண்டது. எனவே பணியாற்றலையும் பலியாதலையும் தனது பாஸ்கா பண்புகளாக்கினார். இறையன்பை உணராத, உணர்த்தப்படாத இடமெங்கும் சென்று இறையாட்சியின் விதைகளைத் தூவுவதே தன் கடமையெனக் கொண்டார். இயேசுவின்
கடமையுணர்வு அவரைப் பின்தொடரும் நம் உதிரத்துள்ளும் ஓடுகிறது. அது நம்மை மறைபணிக்கென உந்துகையில் நம் பதிலளிப்பு எதுவோ? அர்ப்பணம் எல்லைகளைக் கடந்தது.
இறைவா! ஒவ்வொரு விடியலும் ஒரு கடத்தலின் அடையாளம். அதை மனமுணர்ந்து பணியாற்றும் பரிவுள்ளம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்