தேடுதல்

நாமான் எலிசாவுடன் நாமான் எலிசாவுடன் 

தடம் தந்த தகைமை – எலிசாவிடம் இருந்து விடைபெற்ற நாமான்

இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒரு போதும் செலுத்தமாட்டேன்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாமான் தனது காணிக்கையை எலிசாவிற்கு அளிக்க விரும்பினார். அதற்கு மறுமொழியாக எலிசா, “நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்” என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது நாமான் அவரை நோக்கி, “சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும், ஒரு சிறு வேண்டுகோள்; இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒரு போதும் செலுத்தமாட்டேன்.

ஆயினும், ஒரு காரியத்திற்காக உம் அடியானாகிய என்னை ஆண்டவர் மன்னிப்பாராக! என் தலைவன் வழிபடுவதற்காக ரிம்மோன் கோவிலுக்குச் சென்று என் கையில் சாய்ந்து கொண்டு அதனை வணங்குகையில் நானும் அங்குத்தலை வணங்க நேரிட்டால், உம் அடியானாகிய என்னை அச்செயலுக்காக ஆண்டவர் மன்னிப்பாராக!” என்றார். அதற்கு எலிசா, “அமைதியுடன் சென்று வாரும்” என்றார். நாமான் அவரிடமிருந்து விடைபெற்றுச் சற்றுத் தூரம் போனபின், கடவுளின் அடியவரான எலிசாவின் பணியாளன் கேகசி, “என் தலைவர் இந்தச் சிரியா நாட்டு நாமானிடமிருந்து அவன் கொண்டு வந்தவற்றில் எதையும் பெறாமல் அவனை விட்டுவிட்டார். வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவர் பின் ஓடி அவரிடமிருந்து எதையாவது வாங்கிக் கொள்வேன்” என்று சொல்லிக் கொண்டான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2024, 15:23