தேடுதல்

இயேசுவின் உயிர்ப்பு இயேசுவின் உயிர்ப்பு 

தடம் தந்த தகைமை - உங்களுக்கு அமைதி உரித்தாகுக

அமைதியையே இந்த அகிலம் தேடிக்கொண்டிருக்கின்றது. நீதி, உரிமை, உறவு, நேயத்தில் பிறப்பதே உண்மையான அமைதி. அமைதியின் நதியாகிப் பாய்ந்தோடுவோம்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

உயிர்த்த இயேசு சீடர்கள் நடுவே வந்து, உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்கிறார்.

கற்பிப்பவர் மட்டுமன்று, கடைபிடிப்பவர் இயேசு. எந்த வீட்டிற்குள் நுழைந்தாலும் அவ்வீட்டாருக்கு அமைதியின் வாழ்த்தை அறிவிக்கப் பணித்தார் (மத் 10:12). அவ்வாறு கற்பித்த இயேசு அச்சத்தால் ஆட்பட்டு அடைபட்டுக் கிடந்தச் சீடர்களைச் சந்தித்ததும் வாழ்த்திச் சொன்ன வார்த்தை, ‘அமைதி’.  இயேசுவின் கைது, விசாரணை, சிலுவைக் கொலை, இறப்பு போன்றவற்றால் வெறுமை, விரக்தி, தோல்வி, ஏமாற்றம், துயரம் அடைந்தனர் சீடர்கள். அதனால் அறைக்கதவுகளை மட்டுமன்றி தங்கள் மனக்கதவுகளையும் மூடிக்கெண்டு நம்பிக்கையிழந்து முடங்கிக் கிடந்தனர்.

அடுத்து என்ன நிகழுமோ? என்ற அச்சத்தின் பீதியில், வீதியில் கூட இறங்காமல் இறுக்கமாக இருந்தனர் சீடர்கள். இயேசு அவர்களைத் தேடிச் சென்று சந்தித்து உதிர்த்த அமைதியின் வாழ்த்தினால் அவர்கள் இழந்த வாழ்க்கையைப் பெற்றார்கள். நிலைகுலைந்த நம்பிக்கையை நிமிர்த்திக் கொண்டார்கள். உறங்கவிட்ட இறைஉணர்வுகளை உசுப்பி விட்டார்கள். அடுத்த வரலாற்றிற்கு உலகை நகர்த்துகின்ற ஆற்றலானார்கள். இவைகளே திருஅவையாய், திருப்பணிகளாய் உயிர்த்தன. அந்த அமைதியையே இந்த அகிலம் இன்று தேடிக்கொண்டிருக்கின்றது. நீதி, உரிமை, உறவு, நேயத்தில் பிறப்பதே உண்மையான அமைதி.

இறைவா! என்னை அமைதியின் நதியாக்கிப் பாய்ந்தோடச் செய்யும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2024, 14:33