தடம் தந்த தகைமை – முற்றுகையிடப்பட்ட சமாரியா நகர்
மெரினா ராஜ் - வத்திக்கான்
சிரியா மன்னன் பெனதாது தன் முழுப் படையையும் திரட்டிக் கொண்டு சமாரியாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான். எனவே, சமாரியாவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. ஒரு கழுதைத் தலை, எண்பது வெள்ளிக் காசுக்கும், புறாவின் எச்சம் கால்படி ஐந்து வெள்ளிக் காசுக்கும் விற்கும் அளவுக்கு முற்றுகை கடுமையாய் இருந்தது. இஸ்ரயேலின் அரசன் நகர மதில்மேல் நடந்து செல்கையில் ஒரு பெண், “அரசே, என் தலைவரே! என்னைக் காப்பாற்றும்!” என்று கூக்குரலிட்டாள். அதற்கு அவன், “ஆண்டவரே, உன்னைக் காப்பாற்றவில்லையெனில், நான் எப்படி உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தா? ஆலையிலிருந்தா?” என்றான். பின்னும், அரசன் அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு அவள், “இதோ! ஒரு நாள் இந்தப் பெண் என்னை நோக்கி, ‘இன்று நாம் உண்பதற்கு உன் மகனைக் கொடு; நாளை என் மகனைத் தின்போம்’ என்றாள், அவ்வாறே, நாங்கள் என் மகனைச் சமைத்துத் தின்றோம். மறுநாள் நான் அவளிடம், ‘நாம் உண்ணும்படி உன் மகனைக் கொடு!’ என்றேன். ஆனால், அவளோ தன் மகனை ஒளித்து வைத்துவிட்டாள்” என்று சொன்னாள். அரசன் இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டான். அவன், நகர மதில் வழியாக நடந்து செல்கையில், தன் உடலின்மேல் கோணியாடை அணிந்திருந்ததை மக்கள் கண்டனர். அரசன், “இன்றைக்குள் நான் சாபாற்றின் மகன் எலிசாவின் தலையை வெட்டாது விட்டால் கடவுள் என்னை இப்படியும் இதற்கு மேலும் தண்டிப்பாராக!” என்றான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்