தேடுதல்

இந்தோனேசிய திருஅவை இந்தோனேசிய திருஅவை  (AFP or licensors)

இந்தோனேசியாவில் மதச் சகிப்புத்தன்மை பெரிய அளவில் உள்ளது

இந்தோனேசியா தன் சுதந்திரத்தை அறிவித்தபோது அதனை முதலில் அங்கீகரித்த 5 நாடுகளுள் வத்திக்கானும் ஒன்று என்றார் அந்நாட்டு கர்தினால் Ignatius Suharyo

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இந்தோனேசியாவில் மதச் சகிப்புத்தன்மை என்பது பெரிய அளவில் இருப்பதாகவும், மற்றவர்களுடன் இணைந்து வாழ்வதில் இந்தோனேசிய கிறிஸ்தவர்கள் எவ்வித சிரமத்தையும் சந்திக்கவில்லை எனவும் வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்முகம் ஒன்றில் குறிப்பிட்டார் அந்நாட்டு கர்தினால் Ignatius Suharyo Hardjoatmodjo.

செப்டம்பர் மாதத் துவக்கத்தில் இந்தோனேசியா உடபட 4 நாடுகளுக்கு திருத்தூதுப்பயணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவுள்ளதையொட்டி வத்திக்கான் செய்திகள் குழுவுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் Suharyo அவர்கள், இந்தோனேசியாவின் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல அந்நாட்டில் பெரும்பான்மையினராக இருக்கும் இஸ்லாமியரும் திருத்தந்தையை வரவேற்பதில் ஆர்வமுடையவர்களாக இருப்பதைக் குறிப்பிட்டு, திருத்தந்தையின் திருப்பயண அறிவிப்பை வரவேற்றதில் இஸ்லாமிய தலைமைக்குரு முதல் ஆளாக செயல்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.

இந்தோனேசியாவிற்கும் வத்திக்கானுக்கும் இடையேயான உறவு மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதையும் சுட்டிக்காட்டிய கர்தினால், இந்தோனேசியா தன் சுதந்திரத்தை அறிவித்தபோது அதனை முதலில் அங்கீகரித்த 5 நாடுகளுள் வத்திக்கானும் ஒன்று என்பதையும் எடுத்துரைத்தார்.

ஏறக்குறைய 17,000 தீவுகளையும், 1300 இனக் குழுக்களையும் கொண்டுள்ள இந்தோனேசியாவில் பல்வேறு கலாச்சாரங்களும் மதங்களும் இருக்கின்றபோதிலும், கிறிஸ்தவர்கள் மற்றவர்களுடன் அமைதியில் வாழமுடிகிறது என்ற கர்தினால் Suharyo அவர்கள்,  அடிப்படையில் இந்தோனேசியாவில் மத சுதந்திரம் இருக்கின்றது எனவும், ஆனால் சில பகுதிகளில் அது வேறுபடலாம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மற்ற மதத்தவருடன் சுமுகமாக வாழ முடிகின்ற இந்தோனேசியாவில் நிர்வாகத்தின் உயர்மட்டத்திலும் கிறிஸ்தவர்கள் பதவிகளை வகிக்கின்றார்கள் என்பதையும் எடுத்துரைத்தார் கர்தினால்.

இந்தோனேசிய கிறிஸ்தவர்கள் இறைவேண்டலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மற்றவர்களுக்கு நன்மை செய்வதை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும், நாட்டு நிர்வாகமும் அனைத்து மதத்தினரையும் சரி சமமாக நடத்துவதை தன் அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும் தன் மகிழ்ச்சியை வெளியிட்டார் கர்தினால் Suharyo.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2024, 15:48