இந்தியச் சூழல் சார்ந்த பிரச்சனைகளில் ‘மனித மாண்பு’
ஜெயந்த் ராயன் – வத்திக்கான்
விசுவாசக் கோட்பாட்டுத்துறையால் கடந்த ஏப்ரல் 8 அன்று வெளியிடப்பட்ட மனித மாண்பு குறித்த திரு அவைக் கோட்பாடு குறித்து ஊடகங்களின் பார்வை மற்றும் அதைத் தாண்டி எழுந்திருக்கும் சவால்கள் குறித்து Asia News செய்தி முகமையுடன் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்ட மேதகு கர்தினால் அந்தோனி பூலா அவர்கள், ஏழைகளைப் பற்றி விவரிக்கும் இக்கோட்பாட்டின் கருத்துக்களைப் புறக்கணிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.
உலகளாவிய ஊடகங்களும், இந்திய செய்தித்தாள்களும் பெரும்பாலும் இவ்விசுவாசக்கோட்பாடு தெளிவுபடுத்தும் உயிர் நெறியியல் சார்ந்த சிக்கல்களான 'கருக்கலைப்பு, வாடகைத் தாய் முறை, மற்றும் பாலினக் கோட்பாடு' போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல், இக்கோட்பாடு ஆழமாகச் சிந்திக்கும் 'வறுமை, வன்முறை, புலம்பெயர்ந்தோர், சுரண்டல்கள், பாகுபாடுகள், அடிப்படை நலவாழ்வுக்கான அணுகுமுறையின்மை போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார் கர்தினால் பூலா.
நாடு முழுவதும் பலர் சந்தேகத்திற்கு இடமின்றி இச்சூழலால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்திய கர்தினால், மனித மாண்பைக் குறித்து விளக்கும் இந்த விசுவாசக்கோட்பாடு, இந்தியாவில் பலர் மனித மாண்பிழந்த நிலையில் வாழ்வதற்கு காரணமாக இருக்கும் சமூக, கலாச்சார மற்றும் மதம் சார்ந்த சிந்தனை முறைகளை எதிர்கொள்ள நமக்கு சவால் விடுக்கிறது என்றார்.
திருஅவையின் மாண்பைப் பற்றிய செழுமையான புரிதலில், விவிலியப் போதனைகளின் வழியாகவும் பாரம்பரியத்தின் வழியாகவும் பல நிலைகளில் ஏற்படுத்திடும் தாக்கத்தை இக்கோட்பாட்டு ஆவணம் விரிவாகப் பிரதிபலிக்கிறது என்று கூறிய கர்தினால், செல்வந்தர்களுக்கும் அடிப்படை வசதி இல்லாதவர்களுக்குமிடையே அதிகரித்துவரும் இடைவெளி, வாழ்வாதாரத்திற்காக புலம் பெயர்பவர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டோர் மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைக் குறித்து உரையாட நமக்கும், குறிப்பாக திரு அவைக்கும் மிகப்பெரிய சவாலை முன்வைப்பதாக எடுத்துரைத்தார்.
இந்தியாவில் பலர் இன்னும் மனிதாபிமானமற்ற நிலையில் வாழ்வதற்குப் பின்னால் இருக்கும் சமூக, கலாச்சார மற்றும் மதச் சூழல்களை நாம் எதிர்கொள்ளவும், அவர்களின் மீறமுடியா மாண்பு அங்கீகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான வழிகளை நற்செய்தி விழுமியங்களின் வெளிச்சத்தில் கண்டறிய முயலவும், வறுமை, அநீதி மற்றும் வன்முறைக்கான காரணங்களைப் பற்றி விவாதிக்கவும், நமது சூழலில் மக்களின் மாண்பை நிலைநிறுத்தும் வழிகளைக் கண்டறியவும் இக்கோட்பாடு இந்தியத் திருஅவைக்கு அழைப்புவிடுக்கிறது என்பதை கர்தினால் பூலா வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்