நம்பிக்கையுடன் போரைத் தாங்கும் புனித பூமியின் கிறிஸ்தவர்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புனித பூமியில் வாழும் கிறிஸ்தவர்கள் நம்பிக்கையுடனும் எதிநோக்குடனும் அங்கு நிகழும் போரைத் தாங்கக்கூடியவர்களாக இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் புனித பூமிக்கான திருஅவையின் பொறுப்பாளர் அருள்பணியாளர் Ibrahim Faltas
வத்திக்கானின் Fides செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள புனித பூமியின் முதன்மை குரு அருள்பணியாளர் Ibrahim Faltas அவர்கள், புனித பூமியில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு, இச்சூழல் மிகவும் துயரம் நிறைந்ததாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பயணிகள் வராத காரணத்தால் மேற்குக் கரையில் வாழும் கிறிஸ்தவர்கள் வேலையின்றி வருமானமின்றி வாடுகின்றனர் என்று அந்நேர்காணலில் எடுத்துக்காட்டியுள்ளதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு எதிர்காலம் இல்லை என்றும், இதன்காரணமாக, பலர் புனித பூமியை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்றும் கவலை தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Faltas.
போரின் விளைவுகளை அங்கு வாழும் கிறிஸ்தவச் சமூகங்கள் அனுபவிக்கின்றன என்றும், அவர்கள் காசாவில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும் விளக்கியுள்ளார் அருள்பணியாளர் Faltas.
மேலும் இந்த இடங்கள் அருகாமையில் இருந்தாலும் கூட, புனித பூமியின் கிறிஸ்தவச் சமூகங்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள முடிவதில்லை என்றும், நல்லவேளையாக, இன்றைய தொழில்நுட்பம் நாம் ஒருவரையொருவர் பற்றி அறிந்துகொள்ளவும், இறைவேண்டலில் நிலைத்திருக்கவும் உதவியுள்ளதற்கு கடவுளுக்கு நன்றி கூறுவோம் என்றும் உரைத்துள்ளார் அருள்பணியாளர் Faltas.
இங்கு நிகழும் போரில் மிகப்பெரிய உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், அப்பாவி குழந்தைகளும் கொல்லபப்பட்டு வருவதால், புனித பூமியில் அமைதியைக் கொண்டு வருவதில் அனைத்துலகச் சமூகம் தலையிட வேண்டும் என்று பல ஆண்டுகளாகத் தான் வலியுறுத்தி வருவதாகவும் அந்நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார் அருள்பணியாளர் Faltas.
திருத்தந்தையின் தொடர் இறைவேண்டலும், அமைதிக்கான வலியுறுத்தலும் புனித பூமியின் கிறிஸ்தவர்களுக்கு வலிமையையும் ஆறுதலையும் அளிப்பதாகக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ள அருள்பணியாளர் Faltas அவர்கள், இங்குப் போர்நிறுத்தம் வேண்டி முதல் மற்றும் நீண்ட காலமாக அழைப்பு விடுக்கும் ஒரே ஒருவர் திருத்தந்தை மட்டும்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்