இந்திய கத்தோலிக்கப் பள்ளிகள் இணக்க வாழ்வை ஊக்குவிப்பவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மதமாற்றம் செய்கிறார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டு இந்திய கிறிஸ்தவர்கள் மீது வலதுசாரி இந்து குழுக்களால் முன்வைக்கப்பட்டுவரும் இவ்வேளையில், இந்தியாவின் அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகளும் மதங்களிடையே இணக்க வாழ்வை ஊக்குவிப்பவர்களாகச் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் இந்திய ஆயர்கள்.
இந்தியாவின் அனைத்துக் கத்தோலிக்கப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து மத பாரம்பரியங்களையும் நாம் மதிக்கவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.
இந்த சுற்றறிக்கைப்பற்றிக் குறிப்பிட்ட இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார அலுவலகத்தின் செயலர், அருள்பணி மரிய சார்லஸ் அவர்கள் உரைக்கையில், தலத்திருஅவை தொடர்ந்து கடைப்பிடித்துவரும் மதிப்பீடுகளை மீண்டும் ஒருமுறை பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நினைவூட்டவே இந்த சுற்றறிக்கை எனக் கூறினார்.
கிறிஸ்தவப் பள்ளிகள் வழி மதமாற்றம் இடம்பெறுகிறது என சில மதவெறிக் குழுக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், கிறிஸ்தவப் பள்ளிகளிலிருந்து கிறிஸ்தவ அடையாளங்கள் அகற்றப்படவேண்டும், மற்றும், கிறிஸ்தவக் கல்வி நிலையங்களில் பணிபுரியும் துறவியர் தங்கள் துறவியருக்குரிய அடையாளத்தை அணியக் கூடாது எனவும், அஸ்ஸாம் மாநிலத்தில் அண்மையில் வலது சாரி இந்துக் குழுக்கள் தாக்குதலை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில் 2.3 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள் எனினும், ஆறு பல்கலைக்கழகங்கள், ஆறு மருத்துவக் கல்லூரிகள், 400 கல்லூரிகள் உட்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் வழி சேவையாற்றி வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்