நேர்காணல் – தூய்மையின் இலக்கணமான தூய ஆக்னஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
“தூயோராய் இருங்கள், ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயவர்” என்ற இறைவார்த்தைக்கேற்ப சிறுவயது முதலே தனது கற்பை இறைவனுக்கு அர்ப்பணித்து தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர் தூய ஆக்னஸ். தூய்மையின் இலக்கணமாய் இறைஅன்பின் அடையாளமாய் திகழ்ந்தவர் அவர். அழகையும் புகழையும் பெருமையாகக் கருதும் மக்கள் மத்தியில் அத்தனையையும் துறந்து, துன்பத்தை முழுமந்துடன் ஏற்பதினாலும் பிறரன்புப் பணியினாலும் இறைவனுக்குப் புகழ் சேர்க்க எண்ணினார். கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியதற்காகவும், பிற பெண்கள் போல ஆடவரை மணக்க விரும்பாததற்காகவும் பாவி ஒருவரால் பாலியல் தொழில் புரியும் பெண்கள் விடுதியில் விற்கப்பட்டார். ஆடை அணிகலன்களையும் ஆடம்பரங்களையும் விரும்புவதை விடுத்து தூய்மையில் நிலைத்திருந்தார். “உனது வாள் கறைபடிந்து இருந்தாலும் எனது உடலை நீ கறை படுத்த முடியாது” என்று துணிச்சலுடன் தன்னை நெருங்கியவனைப் பார்த்துக் கூறியவர். தூய்மையிலும் புனிதத்திலும் மேலோங்கி வளர்ந்து பல புனிதர்களின் தூய வாழ்க்கைக்குக் காரணமாக அமைந்தவர் தூய ஆக்னஸ். ஏழைகள் மீதான தன்னுடைய பணிகளின் வழியாக கடவுளுக்கு மிக நெருக்கமானவராகத் திகழ்ந்தார்.
இத்தகைய சிறப்பு பெற்ற தூய ஆக்னஸின் திருவிழாவை ஜனவரி 21 அன்று திருஅவையில் சிறப்பிக்க இருக்கின்றோம். எனவே இன்றைய நம் நேர்காணலில் தூய ஆக்னஸ் பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்சகோதரி ஜாக்குலின். மாதவரம் தூய அன்னாள் சபையின் முன்னாள் தலைமை சகோதரியாக திறம்பட பணியாற்றிய அருள்சகோதரி ஜாக்குலின் அவர்கள், இல்லத்தலைவர், கல்வி நிறுவனங்களின் தாளாளர், மறைமாநிலத்தலைவர், பொதுச்செயலர், பொது ஆலோசகர் என பல பணிகளை சீரும் சிறப்புமாக ஆற்றியவர். சகோதரி அவர்களை தூய்மையின் இலகக்கணமான தூய ஆக்னஸ் அவர்கள் பற்றி எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்