தடம் தந்த தகைமை - நல்ல மரமெல்லாம் நல்ல கனி
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும் (மத்தேயு 7:17) என்றார் இயேசு.
முற்காலத்தில் இறைவாக்குரைப்பவர் ஆட்டுத்தோலினாலான மேலாடையை அணிவது வழக்கம். அது ஓர் அடையாளமாகக் கருதப்பட்டது. காலப்போக்கில் பணமும் மதிப்பும் பெறும் நோக்கில் பலர் ஆட்டுத்தோலாடைகளைப் போர்த்திக்கொண்டு, தாங்களும் இறைவாக்கினர் எனச் சொல்லி, தெருத்தெருவாய்த் திரிந்தனர். ஆனால் அவர்களது வாழ்க்கைமுறை உண்மைக்கும் நன்மைக்கும் புறம்பாக இருந்தது. அவர்களின் நோக்கமெல்லாம் பணம்… பணம்... பணம்…
இவர்களது போலித்தனத் தோலை உரிக்கவே இயேசு நல்ல மரம் - நல்ல பழம், தீய மரம் - தீய பழம் என்ற பொதுச் சிந்தனையைப் புதுச் சிந்தனையாக்கிப் புகட்டுகின்றார். நம் எண்ணங்கள் நன்றானால் வார்த்தைகள் நன்றாகும். நம் வார்த்தைகள் நன்றானால் செயல்கள் நன்றாகும். நம் செயல்கள் நன்றானால் வாழ்க்கை நன்றாகும். நல்லெண்ணம் இல்லாத ஒருவரிடமிருந்து நல்வாழ்வை எதிர்பார்க்க முடியாது. போலித்தனத்திலிருந்து புனித தனத்தை எதிர்பார்ப்பது தவறு. நல்ல மனிதரின் வாழ்வில் மிக முக்கியப் பகுதி யாரும் கவனியாத நற்செயல்களில் அடங்குகிறது.
இறைவா! நீர் என்னைப் படைத்ததன் நோக்கம் - நான் நற்கனி தரும் மனிதனாய் வாழ. அதை மனதிலிருத்திச் செயல்பட வலிமை தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்