இஸ்லாமியர்-கிறிஸ்தவர்களுக்கிடையே நல்லிணக்கம் மலரட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இரமலான் பண்டிகையைக் கொண்டாடும் நமது இஸ்லாமிய சகோதரர் சகோதரிகளுக்கு நமது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும், இவ்விழா கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வலுவான உறவை உருவாக்க உதவட்டும் என்றும் பேராயர் Lawrence S. Howlader அவர்கள் அறிக்கையொன்றில் கூறியுள்ளதாக ஆசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11, வியாழன் இன்று, இஸ்லாமிய சகோகதரர் சகோதரிகள் இரமலான் பண்டிகையைக் கொண்டாடும் வேளை, இவ்வாறு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள வங்காள தேசத்தின் சாத்தோகிராம் பேராயர் Howlader அவர்கள், நம்பிக்கையின் ஒழுக்கத்தின் கீழ் அமைதியான சகவாழ்வு செழிக்கட்டும் என்றும் உரைத்துள்ளார்.
ஒவ்வொரு மதமும் அதன் நம்பிக்கைக்கு ஏற்ப பண்டிகைகளைக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மாத நோன்பை முடித்துவிட்டு பெருநாள் கொண்டாடுகிறார்கள். இந்த நேரத்தில், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் முஸ்லிம்களுடன் எங்கள் ஒன்றிப்பை வெளிப்படுத்த விரும்புகின்றோம் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Howlader.
சமூக சகோதரத்துவம் மற்றும் உலகில் அமைதியின் மதிப்புகளை 'அனைவரும் உடன்பிறந்தோரே' (Fratelli tutti) என்ற தனது திருத்தூது மடலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே எடுத்துரைத்துள்ளார் என்றும், அமைதி மற்றும் உடன்பிறந்த உறவை நிலைநாட்ட, மதங்களுக்கு இடையேயான உரையாடல் ஒரு கடமையாகும் என அவர் கூறியுள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் Howlader.
ஒவ்வொரு மதமும் அமைதியான சகவாழ்வைக் கற்பிப்பதாகவும், ஒவ்வொரு மதமும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தால் ஈர்க்கப்பட்ட போதனைகளைக் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு மதத்தின் ஆண்டுவிழாக்களும் அமைதியான மனநிலையில் கொண்டாடப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Howlader.
மோதல் மற்றும் பகைமைக்குப் பதிலாக அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட இறைவேண்டல் செய்வோம் என்று கூறியுள்ள பேராயர் Howlader அவர்கள், அனைத்துக் கிறிஸ்தவச் சமூகங்களின் சார்பாகவும் இஸ்லாமிய சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி அவ்வறிக்கையை நிறைவு செய்துள்ளார். (ASIAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்