சிறார், பாதிக்கப்படக்கூடிய மக்களின் பாதுகாப்பிற்கான அறிக்கை
மெரினா ராஜ் - வத்திக்கான்
நமது பொதுப்பணியில் ஒருமைப்பாடு என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட தேசிய நடத்தை நெறிமுறைகளுக்கான அறிக்கையானது, குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை புதுப்பிப்பதற்கான ஒரு முக்கிய ஆதாரம் என்று கூறியுள்ளார் ஆயர் Greg Bennet.
ஏப்ரல் 8 திங்கள்கிழமை ஆஸ்திரேலியாவின் கத்தோலிக்க மறைமாவட்டங்களில் பணியாற்றுபவர்களுக்காக, “நமது பொதுவான பணியில் ஒருமைப்பாடு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆஸ்திரேலிய ஆயர் பேரவை .அறிக்கை குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் பாதுகாப்பு மற்றும் தரநிலை அமைப்பின் தலைவர் ஆயர் Greg Bennet.
திருஅவையின் எல்லா நிலைப் பணிகளில் ஈடுபடுகின்ற அனைவராலும் எதிர்பார்க்கப்படும் நெறிமுறைகளை வழிநடத்தல், வடிவமைத்தல், வலுப்படுத்தல் மற்றும் உறுதிப்படுத்தல் போன்றவற்றிற்காக, “நமது பொதுவான பணியில் ஒருமைப்பாடு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார் ஆயர் பெனட்.
மேலும் ஒவ்வொரு மறைமாவட்டத்தின் புகார்களைக் கையாளும் கொள்கையிலும் நடத்தை விதி மீறல்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆயர் பெனட் அவர்கள், இந்த நெறிமுறைகள் உடல் மற்றும் உணர்ச்சி எல்லைகள், புகார்களுக்கு பதிலளித்தல், நேர்மறையான உறவுகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல், பணியிடத்தில் முறைகேடுகள் நிதி நெறிமுறைகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மறைமாவட்ட ஆயரின் வேண்டுகோளின்படி அல்லது அவரது மேற்பார்வையின் கீழ் பணியாற்றும் எந்தவொரு நபரும் தேசிய நடத்தை விதிகளுக்கு இணங்க வேண்டும் என்றும், அவை சூழ்நிலைகளைப் பொறுத்து, குறிப்பிட்ட சட்டப்பூர்வ, ஒப்பந்த அல்லது பிற கடமைகளுக்கு உட்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது அவ்வறிக்கை.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் ஆண்டு நிறைவு அமர்வுக் கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்களான குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பை வலியுறுத்தி இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்