தேடுதல்

தனது பாவங்களுக்குக்காக மனம் வருந்தும் தாவீது அரசர் தனது பாவங்களுக்குக்காக மனம் வருந்தும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-5, தூயதோர் உள்ளம் பெறுவோம்!

தூய ஆவியாரின் துணைகொண்டு நம் பாவங்களை களையவும், நம்மை பாவமற்ற புதிய வாழ்விற்குப் புதுப்பித்துக்கொள்ளவும் இறையருள் வேண்டுவோம்!
விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-5, தூயதோர் உள்ளம் பெறுவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘மனமாற்றம் தருவது மனமகிழ்வு!’ என்ற தலைப்பில் 51-வது திருப்பாடலில் 8, 9 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்து குறித்துத் தியானித்தோம். நாம் மனமுருகி மனம்வருந்தி நம் பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டும்போது, அது மனம்நிறைந்த மகிழ்வையும் மாற்றம் நிறைந்த வாழ்வையும் நமக்குத் தருகிறது என்று கடந்த வாரம் தியானித்தோம். இவ்வாரம், 10-வது இறைவார்த்தை குறித்து மட்டும் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தையை அமைதி நிறைந்த மனதுடன் வாசிப்போம். “கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்” (வச. 10).

தூயதோர் உள்ளத்தை உருவாக்கும்

நாம் தியானிக்கும் இந்த இறைவசனத்தில், தூய்மையான உள்ளத்தையும் தூய ஆவியாரையும் பற்றி பேசுகின்றார் தாவீது அரசர். முதலாவதாக, "கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்" என்கின்றார். இங்கே தாவீது குறிப்பிடும் தூய உள்ளம் என்பது, பாவமற்ற ஓர் இதயம். தாவீது தொடக்கத்தில் நல்லவராக, வல்லவராக, இறையச்சம் கொண்டவராக இருந்தார். ஆனால் உரியாவின் மனைவி பத்சேபாவுடன் அவர் செய்த பாவத்தின் விளைவாக அவர் தூய மனிதர் என்ற தகுதியை அவர் இழக்கின்றார். அதாவது, கடவுளிடமிருந்து அவர் அந்நியப்பட்டுப் போகிறார். இந்தப் பாவத்தின் விளைவாக, கடவுள் தனக்கு வழங்கிய மிகவும் உன்னதமான ஒரு கொடையை இழந்துவிட்டதாகவே புலம்பித்தவிக்கின்றார். ஆக, கடவுளுக்கு எதிராக யார் பாவமிழைத்தாலும் அவர்கள் தூய உள்ளம் கொண்டோர் என்ற தகுதியை இழக்கின்றனர். சரி, தூய உள்ளம் என்பதை எப்படி வரையறை செய்வது அல்லது யாரைத் தூய உள்ளம் கொண்டவர் என்று அழைப்பது என்று பார்ப்போம். பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் இவை நான்கினையும் நீக்கியவர் தூய உள்ளத்தினர் என்று கூறப்படுகிறது. காரணம், இதில் எதையாவது ஒன்றை இழந்தாலும் அவர் தூய உள்ளத்தினர் என்ற தகுதியை இழந்துவிடுகிறார். அதுமட்டுமன்றி, மேற்கண்ட இந்த நான்கு குணங்களும் பாவத்தின் வாய்க்கால்கள் என்பதையும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. மேலும் இந்த நான்கு குற்றங்களும் இல்லாத தூய உள்ளத்தினரிடம் கருணை, இரக்கம், மனித நேயம், அருள் மொழிகள் ஆகியவை சிறந்து காணப்படும். அதுமட்டுமன்றி, துன்பம், பகை, பொய் பிரச்சாரம், கெடுதல், துரோகம், இழப்பு போன்றவற்றை ஒருவர் எதிர்கொள்ளும் விதத்திலும் அவர் தூய உள்ளத்தினராகப் போற்றப்படுவார். அதனால்தான் நமதாண்டவர் இயேசுவும், “தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்” (காண்க. மத் 5:8) என்கிறார்.

உறுதிதரும் ஆவி

இரண்டாவதாக, "உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்" என்று வேண்டுகிறார் தாவீது அரசர். உறுதியைத் தருவதும், புதுப்பிப்பதும் தூய ஆவியாரின் அடிப்படைப் பண்புகள். தான் இப்படிபட்டப் பாவத்தை ஒருபோதும் மீண்டும் செய்துவிடக் கூடாது என்று விரும்பும் தாவீது, இதனை இறுதிவரை கடைபிடிப்பதற்கான மன உறுதியை ஆண்டவரின் ஆவியானவர்தான் தரமுடியும் என்ற நம்பிக்கையில்தான் இவ்வாறு கூறுகின்றார். நமது பாவங்களால் நாம் உறுதியிழந்த நிலையில் தூய ஆவியார் உறுதியும் ஆற்றலும் தரக்கூடியவராக இருக்கிறார். தாவீதின் வாழ்வில் தூய ஆவியார் முக்கிய பங்காற்றினார். அவரது வாழ்வின் தொடக்கமுதல் இறுதிவரை தூய ஆவியார் அவருடன் இருந்தார். சவுலுக்குப் பதிலாக, இஸ்ரயேல் மக்களின் அரசராகத் தாவீதை இறைவாக்கினர் சாமுவேல் அருள்பொழிவு செய்தபோது ஆவியாரின் உடனிருப்பைக் காண்கின்றோம். "உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது" (காண்க 1 சாமு 16:13). அவ்வாறே, தாவீது இறக்கும் தருவாயில் அவர் ஒலித்த இறுதி மொழிகளில், "ஆண்டவரின் ஆவி என் வழியாகப் பேசினார்; அவரது வார்த்தை என் நாவில் ஒலித்தது" (காண்க 2 சாமு 23:2) என்று கூறுகின்றார். அதுமட்டுமன்றி, தாவீது வெற்றிபெற்ற போதும், சோதனை மற்றும் துயரத்தின் பிடியில் சிக்கித்தவித்தபோதும் தூய ஆவியார் பெருமளவில் அவருக்குத் துணையிருந்து திடமளிக்கின்றார். ஆக, தூய ஆவியாரின் ஆற்றலையும் வல்லமையையும் மனதில் கொண்டவராக, பாவத்தால் மனமொடிந்த நிலையில் தனக்குத் தூய ஆவியார் துணையிருக்க வேண்டும், திடமளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ‘உறுதிதரும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்’ என்று வேண்டுகிறார் தாவீது அரசர்.

தூய ஆவியார் அருளும் வாழ்வு குறித்து பேசும் புனித பவுலடியார்,  "கிறிஸ்துவினுடைய  அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருளுவாராக!" (காண்க எபே 3:16) என்றும், "கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்" (காண்க. பிலி 2:13) என்றும் கூறுகின்றார். அப்படியென்றால், ஆற்றல், வலிமை, வல்லமை, திடன், உறுதி ஆகிய கொடைகளைத் தூய ஆவியாரே வழங்குகிறார் என்பதை நாம் அறிந்து கொள்வோம். மேலும், தூய ஆவியாரின் இத்தகைய கொடைகளே பாவத்தின் பிடியில் நாம் சிக்குண்டு தவிக்கும்போது நம்மை விடுவிக்கும் அருமருந்தாக அமைகின்றது என்பதையும் இக்கணம் நாம் உணர்ந்துகொள்வோம்.  

புதுப்பிக்கும் தூய ஆவியார்

அடுத்து "புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்" என்கின்றார் தாவீது. தூய ஆவியாரின் அடிப்படை செயல்களில் ஒன்று புதுப்பித்தல். தூய ஆவியாரால் தூய்மைபெற்றிருந்த தனது வாழ்வு தீய ஆவியால் தீட்டுப்பட்டதாக மாறிவிட்டதே என்று புலம்புகிறார் தாவீது. பத்சேபாவுடன் தான் புரிந்த பாவத்தால் தனது வாழ்வு கறைபடிந்துவிட்டதாகக் கதறுகின்றார் தாவீது. ஆகவே, இந்தத் துயரமான வேளையில் கடவுளின் தூய ஆவியார் மட்டுமே தன்னைத் திடப்படுத்தி, தனது பாவங்களையெல்லாம் கழுவிப்போக்கித் தன்னைப் புதுப்பிக்க முடியும் என்று ஆழமாக நம்பிக்கை கொண்டவராக, "கடவுளே, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்" என்று கடவுளை நோக்கி கரங்களை உயர்த்தி இறைவேண்டல் எழுப்புகின்றார் தாவீது. ஆக, புதுப்பிக்கப்படுத்தல் என்பது பழைய பாவ நிலையிலிருந்து கடந்து புதிய வாழ்விற்குள் புகுவதையும், பாவத்துக்குரிய அனைத்துக் காரியங்களையும் விட்டொழிப்பதையும் குறிக்கிறது. நாம் மேற்கொள்ளும் தவக்கால முயற்சிகள் எல்லாம் இத்தகையதே. அதாவது, தவக்காலம் என்பது நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ளும் காலம். அதனால்தான் இதனை, மனமாற்றத்தின் காலம், இறைவனின் இரக்கத்தைப் பெறும் காலம், அருளின் காலம், புதுப்பித்தலின் காலம் என்றெல்லாம் கூறுகின்றோம். பாவ மன்னிப்புப் பெறுவது என்பது நம்மை புதுப்பித்துக்கொள்வதற்கான இறைவனின் அருளைப் பெறுவது. இந்தப் புதுப்பித்தலின் செயலை ஆவியானவர் செய்கின்றார். இதன் காரணமாகவே, நாம் பாவ அறிக்கை செய்யும் வேளையில், நமக்காக இறைவேண்டல் செய்யும் அருள் பணியாளர், 'இரக்கமே உருவான இறைவன், தம் திருமகன் வழியாக இந்த உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிய இறைவன், நம் பாவங்களுக்குப் பரிகாரமாக தூய ஆவியாரைத் தந்தருளிய இறைவன் உமக்கு மன்னிப்பும் அமைதியும் அருள்வாராக! நானும் தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால் உம் குற்றங்களிலிருந்து உம்மை விடுதலை செய்கின்றேன்' என்று கூறுகின்றார்.

தூய ஆவியார் தீய ஆவிக்குரிய அதாவது, ஊனியல்புக்குரியவற்றிலிருந்து நம்மை புதுப்பிக்கக் கூடியவர். அதனால்தான் புனித பவுலடியார் ஊனியல்புக்குரிய தீய நாட்டங்களிலிருந்து நாம் விடுதலைப் பெற்று தூய ஆவிக்குரியவற்றை அணிந்துகொள்ள வேண்டுமென நமக்கு அழைப்பு விடுகின்றார். "ஊனியல் மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது சாவே; ஆவிக்குரிய மனநிலை கொண்டிருப்போருக்கு வருவது வாழ்வும் அமைதியும் ஆகும்" என்றும்,  "கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல" என்றும்,  நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள் (உரோ 8: 6, 9, 13) என்று உரைக்கின்றார்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்ற பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரம் கூறுவதை நாம் அடிக்கடி கேட்டிருக்கின்றோம். இதனை மேம்போக்காகப் பார்க்கும்போது பழையவற்றைக் களைந்துவிட்டு புதியவற்றை அணிந்துகொள்ள வேண்டும் என்று அர்த்தப்படுவதாக நாம் நினைக்கலாம். ஆனால் இப்பாடலுக்குரிய உட்பொருள் மிகவும் நுட்பமானது. அதாவது, மனித உயிர்களுக்குப் பழமையானவை ஆசை, பாசம், முதலியன. ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்கள். காம, குரோத, உலோப, மோக, மத, மாச்சரியங்கள் என்னும் உட்பகைகள். இங்கே உட்பகை என்பது, நட்புப் போல இருந்து, நல்லன அல்லாதவற்றைச் செய்வது. அதாவது, தீய ஆவிக்குரியவற்றை செய்வது என்றும் பொருள் கொள்ளலாம். மேலும் மனித உயிர்கள் தமது தொடக்க நிலையில், அருளியலை நாடாது உலகியலையே நிலை என நினைத்து உழன்று, துன்பப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், அனுபவம் ஏற ஏற, உலகியல் நிலையில் இருந்து, கொஞ்சம் கொஞ்சமாக அருள் நிலைக்குத் திரும்பும். அப்போது உலகியலில் உவர்ப்புத் தோன்றும். அருளியலில் நாட்டம் உண்டாகும். அந்த நிலையில் உயிர்க்குப் பிறவிகள் தோறும் பழக்கமாக இருந்து வந்த ஆசை, பாசம் முதலியவை கழிந்து ஒழியும் அவ்வுயிர்கள் புதுப்பிக்கப்படும்.

நம்மை புதுப்பித்துக்கொள்வோம்

புத்தர் ஒரு கயிற்றை எடுத்து அதில் பல முடிச்சுகள் போடுகிறார். சீடர்களிடம் கொடுத்து முடிச்சுகளை எல்லாம் அவிழ்க்க சொல்கிறார். அனைவரும் முயற்சி செய்கின்றனர். ஒன்றிரண்டு முடிச்சுகள் மட்டுமே அவிழ்கின்றன. அனைத்தையும் அவர்களால் +அவிழ்க்க முடியவில்லை. முடிச்சுகளை அவிழ்க்க அதிகம் முயல முயல புது முடிச்சுகள்தான் விழுகின்றன. சீடர்கள் அனைவரும் சோர்வடைந்து விடுகின்றனர். அப்போது அவர்களைப் பார்த்து "முதல் முடிச்சைத் தேடி, அது எப்படி விழுந்திருக்கிறது என கண்டறிந்து அவிழ்த்தால் மட்டும்தான், அதன் மேல் போடப்பட்டிருக்கும் மற்ற முடிச்சுகளை அவிழ்க்க முடியும்" என்றார் புத்தர். ஆகவே, நமது சிற்றின்ப ஆசைகளால் பாவம் என்னும் பல முடிச்சுகளைப் போட்டுக்கொள்கின்றோம். இவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டுமாயின், முதல் முடுச்சுக்கான அதாவது, நமது முதல் பாவத்திற்கான காரணத்தை அறிந்து அதனை களைந்துவிட்டால் நமது மற்ற பாவங்களிலிருந்து விடுபட்டு நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ளலாம். ஆகவே, தூய ஆவியாரின் துணைகொண்டு நம் பாவங்களை களையவும், நம்மை பாவமற்ற புதிய வாழ்விற்குப் புதுப்பித்துக்கொள்ளவும் இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2024, 13:36