விவிலியத் தேடல்: திருப்பாடல் 51-9, நொறுங்கிய உள்ளம் பெறுவோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘இரத்தப்பழி தவிர்ப்போம்’ என்ற தலைப்பில் 51-வது திருப்பாடலில் 14, 15 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். ஆண்டவரின் நீதியான செயல்களை முன்னிட்டு யாருடைய இரத்தப்பழிக்கும் ஆளாகாமல் இருப்போம். நமது பாவத்தால் கடவுளைப் புகழும் நம் இதழ்களைக் கட்டிபோடாமல் இருப்போம் என்று கூறி இந்த இரண்டு இறையருளுக்காக இறைவனிடம் மன்றாடினோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 16 முதல் 19 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இப்போது இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக! அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்; மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும் (வச. 16-19)
ஓர் ஊரில் ரூபன் என்ற செல்வந்தன் வாழ்ந்து வந்தான். கப்பலில் சென்று வணிகம் செய்வது அவன் வழக்கம். ஒரு முறை கப்பலில் சென்று கொண்டிருந்த பொழுது. பெரும் புயல் ஒன்று கப்பலை திடீரென தாக்கியது. கப்பலில் இருந்த அனைவரும் ஐயோ! எங்களைக் காப்பாற்றும்! கடவுளே எங்களைக் காப்பாற்றும் என்று கதறினார் அழுதனர். அப்போது ரூபன், கடவுளே என் உயிரைக் காப்பாற்றும்! என்னைக் காப்பாற்றினால் என் சொகுசு பங்களாவை விற்று அதில் வரும் பணத்தை உமக்கு காணிக்கையாக்குகிறேன் என்று பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டான். பெரிய போராட்டதிற்குப் பின்பு ரூபனும் கப்பலில் இருந்த மற்றவர்களும் பிழைத்தனர்.
பத்திரமாக வீட்டை அடைந்த ரூபன், தன் ஆசை பங்களாவை விற்று வீதிக்கு வர விரும்பவில்லை. ஆகவே, தந்திர யோசனை ஒன்றைச் செய்தான். அதன்படி, ஒரு கோடிரூபாய் மதிப்புள்ள பங்களாவை ஒரு லட்சத்திற்கு விற்பதாக தினசரி நாளிதழ்களில் அதிரடி அறிவிப்பு செய்தான். அந்த விளம்பரத்தைப் பார்த்த அனைவரும், அடிமாட்டு விலைக்கு பங்களா கிடைக்கப் போகிறது என்ற ஆசையில் முண்டியடித்துக் கொண்டு ரூபனின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது திடீரென அவர்கள் முன் நிபந்தனை ஒன்றை வைத்தான் ரூபன். தனது பங்களாவை ஒரு இலட்சத்திற்கு வாங்குவோர் தனது நாய்குட்டியை 95 இலட்சத்திற்கு வாங்க வேண்டுமென கூறினான். இதை சற்றும் எதிர்பாராத பலர் தங்கள் ஆசையில் மண் விழுந்து விட்டது என வருந்தி முகத்தை தொங்கவிட்டுக் கொண்டு வந்த வழியே ஓட்டம் பிடித்தனர்.
ஆனால், பெரும்செல்வந்தர் ஒருவர் நாயை 95 இலட்சத்திற்கும் பங்களாவை ஒரு இலட்சத்திற்கும் வாங்கினார். மகிழ்ச்சி அடைந்த ரூபன் வேகமாக கோவிலுக்குச் சென்று “கடவுளே! நான் சொன்னதை நிறைவேற்றிவிட்டேன். இதோ எனது பங்களா விற்ற பணம் 1 லட்சத்தை உமக்குக் காணிக்கையாக கொடுத்துவிடுகிறேன். ஆனால், நாய் விற்ற பணம் 95 லட்சம் ரூபாய் எனக்கு உரியது. அதை நான் எடுத்துக்கொள்கிறேன்!” என்று கூடியவாறு நடையை கட்டினான். இப்படித்தான் இன்றைய உலகில் கடவுளுக்குப் பலியும் காணிக்கையும் படைக்கின்றனர் பலர். தங்களின் சுயநலப் பலிகளால் கடவுளை மகிழ்விக்க முடியும் என்று நினைக்கின்றனர் பலர். பணம்படைத்தவன் கடவுளை விரைவாகச் சென்று வழிபடுவதும், பணமற்ற ஏழையெளியோர் நீண்ட வரிசையில் நின்று கடவுளை தரிசிப்பதும் இன்றைய உலகில் நாம் காணும் நகைப்புக்குரிய காரியங்கள், ஆனால் கடவுள் எதை விரும்புவார், எதை வெறுப்பார் என்பதை நாம் நன்றாக அறிவோம்.
பலிகளில் கடவுள் நாட்டம்கொள்ளவதில்லை
இன்று நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளில், “பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை" என்கின்றார் தாவீது. இந்த உலகில் எந்தவொரு பாவத்தையும் செய்துவிட்டு கடவுளுக்குப் பலிசெலுத்திவிட்டால் எல்லாமே சரியாகிவிடும், அதாவது, கடவுள் நம் குற்றம் குறைகளையெல்லாம் மன்னித்து கழுவிப் போக்கிவிடுவார் என்று கருதுகின்றனர். ஆனால் அது தவறு என்பதை இஸ்ரயேல் மக்களின் வாழ்விலிருந்தும் தாவீது வாழ்விலிருந்தும் கற்றுக்கொள்கின்றோம். பலிகளைவிடவிட மனமாற்றம்தான் மிகவும் சிறந்தது. அதனால்தான் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் மனமாற்றத்தை அதிகம் வலியுறுத்துகின்றார். கடவுளுக்குப் பலிகளை செலுத்திவிட்டு நாம் எந்தத் தவற்றையும் செய்துகொள்ளலாம் என்ற தவறான எண்ணம் அவர்களிடத்தில் காணப்பட்டது. இறைவாக்கினரான ஆமோஸ் வழியாக இதனைக் கடவுள் கண்டிப்பதைப் பார்க்கின்றோம். “உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன்; உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை. எரிபலிகளையும் தானியப் படையல்களையும் எனக்கு நீங்கள் செலுத்தினாலும் நான் ஏற்க மாட்டேன்; கொழுத்த விலங்குகளை நல்லுறவுப் பலிகளாகச் செலுத்தும்போது நான் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன். என் முன்னிலையில் நீங்கள் இரைச்சலிட்டுப் பாடும் பாடல்களை நிறுத்துங்கள், உங்கள் வீணைகளின் ஓசையை நான் கேட்க மாட்டேன். மாறாக, நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக! என்று கூறும் ஆண்டவர், இஸ்ரயேல் வீட்டாரே, பாலை நிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ? (காண்க. ஆமோ 5:21-25). இதன் காரணமாகவே, "பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை"
கடவுள் விரும்பும் பலி நொறுங்கிய உள்ளமே
அடுத்து, "கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை" என்கின்றார் தாவீது. இங்கே நொறுங்கிய உள்ளம் என்பதற்குக் குற்றமுணர்ந்த உள்ளம் என்று தாவீதே விளக்கமளிக்கிறார். மேலும் நொறுங்கிய உள்ளம் என்ற வார்த்தைக்கு, தன் பாவத்திற்காக வருந்தும், தன் பாவத்தை ஏற்றுக்கொள்ளும், மன்னிப்பு விரும்பும், மனமாற்றம் பெறவிரும்பும், தன்னை மாற்றிக்கொள்ள விரும்பும் ஓர் உள்ளம் என்றும் நாம் பொருள்கொள்ளலாம். பொதுவாக, பாவம் புரிந்த மனிதர் ஒருவர், தான் புரிந்த பாவத்திற்காக மனம் வருந்தி, மனம் திருந்தி வரும்போது கடவுள் அவர்களைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார் மற்றும் அவர்களை அவமதிக்க மாட்டார் என்பது திண்ணம். இத்தகையதொரு நிலை இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் அடிக்கடி நிகழ்வதைப் பார்க்கின்றோம். மேலும், நினிவே நகர் மக்களின் வாழ்வு இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு. அப்பகுதியை இப்போது வாசிப்போம். 'யோனா நகருக்குள் சென்று, ஒரு நாள் முழுதும் நடந்தபின், உரத்த குரலில், “இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்” என்று அறிவித்தார். நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பி, எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர். இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை (யோனா 3:4-6,10). மேலும் இயேசு கூறும் காணாமல்போன மகன் பற்றிய உவமையிலும், இதனையே காண்கின்றோம். பாவம் பல புரிந்துவிட்டு தன் தந்தையிடம் திரும்பிவந்த மகன் ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ (காண்க லூக் 15:21) என்று மனமுடைந்து கூறியபோது, அந்த அன்புத் தந்தை பதிலேதும் கூறாமல் நிபந்தனையற்ற அன்புடன் அவரை ஏற்றுக்கொள்கிறார். இதையெல்லாம் காணும் மூத்த மகன் சினமுற்று தந்தையைக் கடிந்துகொண்ட போதும், அந்தத் தந்தை இளைய மகனைப் புறந்தள்ளாது, "இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில், உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்" என்று கூறி அவனை ஏற்றுக்கொள்கின்றார். இத்தகைய வழியில்தான் நமதாண்டவர் இயேசுவும், யூத சமுதாயத்தில் பாவிகளாகக் கருதி வெறுத்தொதுக்கப்பட்ட சக்கேயு, மத்தேயு, மகதலா மரியா போன்றோரை மன்னித்து ஏற்கின்றார். பாவம் புரிவதென்பது மனித இயல்பு, ஆனால், அவற்றிற்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டும்போதுதான் அது நம்மை கடவுளின் பிள்ளைகளாக மாற்றும். இங்கே தாவீது தன் நிலையிலிருந்து தாழ்ந்து, அதாவது அரசருக்குரிய ஆணவமோ, அகந்தையோ கொள்ளாது தாழ்மையான மனதுடன் தன் பாவத்தை ஏற்றுக்கொள்கின்றார் என்பதை மீண்டும் ஒருமுறை நம் நினைவில் நிறுத்துவோம்.
இறுதியாக, "சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!" என்று உரைக்கின்றார் தாவீது அரசர். இங்கே, தன்மீது இரக்கம் காட்டி தனது பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொண்டதுபோல, தனது மக்கள்மீதும் இரக்கம் காட்டி அவர்தம் குற்றங்களையும் பாவங்களையும் மன்னித்து ஏற்கவேண்டுமென இறைவேண்டல் செய்கின்றார். தான் மட்டுமன்று தனது மக்களும் புதுப்பிக்கப்படவேண்டுமென கடவுளிடம் வேண்டுகோள்விடுகின்றார். இறுதியாக, "அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்; மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்" என்று கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. மனிதர் தம் பாவங்களையும் குற்றங்களையும் நொறுங்கிய உள்ளமுடன் ஏற்கும்போது, அப்படிப்பட்ட வேளையில் மனிதர் படைக்கும் பலிகளை கடவுள் ஏற்றுக்கொள்கின்றார் என்பதன் அடிப்படையிலேயே "எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்" என்கின்றார். நொறுங்கிய உள்ளமுடன் பாவத்தை ஏற்பதே சிறந்ததொரு பலிதான் என்றாலும், அத்தகைய நிலையில் ஒப்புக்கொடுக்கப்படும் பலியே முறையானதாகவும் கடவுளுக்கு உகந்ததாகவும் இருக்கின்றது. ஆகவே, நொறுங்கிய உள்ளமுடன் கடவுளுக்கு எப்போதும் நம்மை நறுமணப்பொருளாகப் படைப்போம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்