தேடுதல்

உயிர்த்த இயேசு உயிர்த்த இயேசு 

பல்சுவை – உயிர்ப்பு தரும் பேரின்பம்

நமதாண்டவர் இறப்பில் இருந்து புது வாழ்வுக்கு சென்று விட்டார். எனவே அவரை நம்பியிருக்கும் நம் அனைவருக்கும் தனது உயிர்ப்பின் வழியாக புதிய வாழ்வை கொடுக்கிறார்.
அருள்முனைவர். ஜார்ஜ் டோலின்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். அவரோடு இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம். உயிர்த்த நமதாண்டவர் இயேசுவின் மகிழ்வில் இணைந்திருக்கும் நாம் இன்றைய நம் பல்சுவையில் உயிர்ப்பு தரும் பேரின்பம் பற்றிக் காணலாம்.

நமக்காகப் பாடுகள் பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்ட இயேசு மூன்றாம் நாள் புது வாழ்விற்கு உயிர்த்தெழுந்தார். புது வாழ்வைப் பெறவேண்டுமென்றால் நாமும் புது மனிதர்களாக மாறவேண்டும். இறப்பில் இருந்து உயிர்ப்பிற்குப் பயணிக்க வேண்டும், பாவத்தில் இருந்து புண்ணியத்திற்குச் செல்ல வேண்டும், இருளில் இருந்து வெளிச்சத்திற்குச் செல்ல வேண்டும். நமதாண்டவர் இறப்பில் இருந்து புது வாழ்வுக்கு சென்று விட்டார். அவரை நம்பியிருக்கும் நம் அனைவருக்கும் தனது உயிர்ப்பின் வழியாக புதிய வாழ்வை கொடுக்கிறார். புதிய வாழ்வை இறைத்துணையுடன் வாழ அருள் வேண்டுவோம். அவரது உயிர்ப்பின் பேரின்பத்தை நாமும் சுவைத்து பிறருக்கும் வழங்கக்கூடியவர்களாக மாற அருள்வேண்டுவோம்.

இன்றைய நமது பல்சுவையில் உயிர்ப்பின் பேரின்பம் பற்றியக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்பணி முனைவர் ஜார்ஜ் டோலின். அமலமரி தூதுவர் சபையின் துணைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் தந்தை அவர்கள், உரோம் இலாத்தரன் பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டங்களில் மேற்படிப்பையும், முனைவர் பட்டத்தையும் பெற்றவர். அமலமரி தூதுவர் சபையின் துணைத்தலைவர், இறையியல் பேராசிரியர், ஆலோசகர் என பல பணிகளைத் திறம்பட ஆற்றிவருபவர். பல்வேறு துறவற சபைகளுக்கு சட்ட ஆலோசகராக சீரும் சிறப்புமாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். துறவிகள், அருள்பணியாளர்களுக்கு தியானக் கருத்துக்களையும், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் வாழ்வில் முன்னேற ஊக்கமூட்டும் கருத்தரங்குகளையும் வழங்கி வருபவர். தந்தை அவர்களை உயிர்ப்பின் பேரின்பம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க அன்புடன் அழைக்கின்றோம்.

ஆண்டவர் இயேசுவை அன்பு செய்கிறவர்கள் உயிர்ப்பு அனுபவம் பெறுவது உறுதி. நாம் ஆண்டவர் இயேசுவை அன்பு செய்பவர்களா? இல்லை அவரால் அன்பு செய்யப்பட்டவர்களா? இல்லை என்னை  அன்பு செய்கிறாயா என கேட்கப்படுபவர்களா? சிந்திப்போம். அன்பைப் பெற்றவர்களுக்கும், பிறருக்குக் கொடுப்பவர்களுக்கும் மட்டுமே உயிர்ப்புப்பெருவிழா பொருத்தமானதாக இருக்கும்.

மகதலா மரியாள் போல ஆண்டவரைத் தேடும் நல்ல உள்ளம் வேண்டுவோம். ஆண்டவரைக் காணவில்லை என்றதும் பதறித் துடித்து கண்டடைய ஓடிய, பேதுரு போல ஆண்டவரோடு வாழ்பவர்களாக மாறுவோம். ஆண்டவரின் உடல் சுற்றப் பட்டிருந்த துணியைக் கொண்டே அவர் உயிர்த்ததை நம்பிய அன்புச்சீடர் போல நம்பிக்கை உடையவர்களாவோம். அன்பில் நிலைத்து நிற்போம் அன்பு எதில் உள்ளது எனக் கூர்ந்து கவனிப்போம். அன்போடு உடன் பயணிப்போம். ஆண்டவர் இயேசு தரும் உயிர்ப்பின் பேரின்பத்தை நாமும் சுவைத்து பிறரும் சுவைக்க அருள்வேண்டுவோம்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2024, 15:30