தேடுதல்

கானடா கோவில் கானடா கோவில்  (AFP or licensors)

கியூபெக் ஆயர்கள்:பசியால் துன்புறுவோரின் குரலுக்குச் செவிமடுங்கள்

2023ஆம் ஆண்டில் கியூபெக் மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினர் அங்குள்ள உணவு வங்கிகளைப் பயன்படுத்தினர். இது 2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 73 விழுக்காடு அதிகம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பசியால் துன்புறுவோரின் குரலுக்குச் செவிமடுப்பதுடன், அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிச் செய்யவேண்டியது கிறிஸ்தவ சமூகங்களின் கடமை என அழைப்புவிடுத்துள்ளனர் கானடாவின் கியூபெக் ஆயர்கள்.

கியூபெக் பகுதியில் நிலவி வரும் உணவு நெருக்கடிக் குறித்து அப்பகுதி கிறிஸ்தவ சமூகங்களும் தனியார்களும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, நற்செய்தியின் ஒளித்துணையுடன் அனைவருக்கும் உணவு கிடைக்க தேவையானவற்றை ஆற்றவேண்டும் என கேட்டுள்ளனர் ஆயர்கள்.    

2023ஆம் ஆண்டில் கியூபெக் மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினர் அங்குள்ள உணவு வங்கிகளைப் பயன்படுத்தியதாகவும், இது 2022ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 30 விழுக்காடு அதிகம் எனவும், 2019ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 73 விழுக்காடு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக் பகுதி மக்களிடையே உணவு நெருக்கடி மட்டுமல்ல, உறைவிடமின்மை, பணவீக்கம் போன்றவையும் துயர்களை வழங்கிவருவதாக தெரிவிக்கும் ஆயர்கள், குறைந்த விலையில் சத்தான உணவைப் பெறுவது குடிமக்களின் உரிமை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மே மாதம் முதல் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இச்செய்தியை வெளியிட்டுள்ள ஆயர்கள், கியூபெக் பகுதியில் ஒரு வேலையைப் பெற்றிருப்பது என்பது மட்டும் ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு போதுமான உணவை வழங்குவதாக இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சமூகத்தின் ஏனைய மக்களுடன் இணைந்து கிறிஸ்தவர்கள், நீதியான ஒரு சமூகத்தின் நம்பிக்கைகளை உயிரோட்டமுடையதாக வைக்க உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர் கானடாவின் கியூபெக் ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 April 2024, 15:44