தேடுதல்

குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி! குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி!  (AFP or licensors)

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் நீதி வேண்டும் : இலங்கை தலத்திருஅவை

உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்பில் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை மக்கள் அமைதியான இறைவேண்டல் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கு கொண்டனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இலங்கை கத்தோலிக்கத் தலத்திருஅவை அதிகாரிகள், ஏப்ரல் 21-ஆம் தேதி உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்பின் ஐந்தாமாண்டு நிறைவை நினைவுகூர்ந்துள்ள வேளை, ​​பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த பாரபட்சமற்ற மற்றும் நியாயமான விசாரணைக்கான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கிறது யூகான் செய்தி நிறுவனம்.

இந்நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், விரல் நீட்டுவதன் வழியாக அல்ல, உண்மையைக் கண்டறிவதன் வழியாக மட்டுமே,  இந்த நாடு குணமடையத் தொடங்கும் என்றும், இந்த அரசியல் நாடகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் இது என்றும் கூறியதாக உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் உரையாற்றிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், உண்மையும் நீதியும் தூக்கி எறியப்பட வேண்டிய விளையாட்டுப் பொருட்கள் அல்ல என்றும், இரப்பர் பந்தை எப்படி நீருக்கடியில் எப்போதும் அமுழ்த்திவைக்க முடியாதோ, அவ்வாறே நீதியையும் மறைத்துவைக்க முடியாது என்றும் விளக்கினார் என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அருள்பணியாளர்கள் மற்றும் இருபால் துறவு சபைகளின்  தலைவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி இறைவேண்டல் செய்தனர் என்றும், எந்தவொரு அரசியல்வாதியும் இந்நிகழ்வில் பங்கேற்பதற்குத் தலத்திருஅவைத் தலைவர்களால் அழைக்கப்படவில்லை என்றும் அச்செய்தி குறிப்பு குறிப்பிடுகிறது,

2019-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த இந்தக் குண்டுவெடிப்பில் 279 பேர் கொல்லப்பட்டதுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 April 2024, 13:56