தேடுதல்

இத்தாலிய ஆட்டிச நிறுவன அங்கத்தினர்களுடன் திருத்தந்தை இத்தாலிய ஆட்டிச நிறுவன அங்கத்தினர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

வாரம் ஓர் அலசல் - ஏப்ரல் 2. உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்

ஆட்டிசம் ஒரு நோய் அல்ல, அது ஒரு குறைபாடு என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியம். இது ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பொதுவாக குழந்தை பிறந்து 3 அல்லது 4 மாதங்களில் இருந்து, வெளிநபர்கள் தூக்கும்போது அழ ஆரம்பிக்கும். குழந்தை முகத்தை அடையாளம் காண ஆரம்பிடிச்சு என பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் வளர வளர நம் கண்களைப் பார்த்து பேச வேண்டும். நம் குரலை கேட்டால் திரும்பிப் பார்க்க வேண்டும். அதே சமயம் குழந்தைகள் வளர வளர இந்த செயல்பாடுகளும் படிப்படியாக அதிகரிக்கும். ஆனால் அப்படியில்லாமல், குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பின்னரும் நம் கண்களைப் பார்த்து பேசாவிட்டால், எவ்வளவு கூப்பிட்டாலும் பார்க்காவிட்டாலோ, அல்லது மற்ற குழந்தைகளை அடிப்பது போன்ற முரட்டுத்தனமான செயல்களில் ஈடுபட்டாலோ, பெற்றோர் குழந்தைகளை கண்டிப்பதை விட முக்கியம் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை அறிய முன்வரவேண்டியது.

குழந்தைகளின் பேச்சாற்றலில் சிரமம், மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள இயலாமை, தன் உணர்வுகளை சரியாக  வெளிப்படுத்த இயலாமை போன்றவைகளை உங்கள் குழந்தைகளில் நீங்கள் காண நேர்ந்தால் முதலில் குழந்தைகளை புரிந்துகொள்ள முயலுங்கள். இன்றைய ஆய்வுகளின்படி, உலகில் பிறக்கும் ஒவ்வொரு 160 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இத்தகைய பாதிப்புக்கள் உள்ளன. இதனை ஆட்டிசம் சின்றம் குறைபாடு என்றழைக்கின்றனர்.

இது ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிசம் ஒரு நோய் அல்ல, அது ஒரு குறைபாடு என்பதை முதலில் புரிந்து கொள்வது அவசியம். குழந்தையின் 10 முதல் 18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும்.

இக்குறைபாட்டுக்கு என்ன காரணம் என்று இதுவரை மருத்துவ உலகம் உறுதியாக கண்டுபிடிக்கவில்லை. மேலும் இக்குறைபாட்டுக்கு முறையான சிகிச்சை முறையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், முறையான பயிற்சிமுறைகள் இருக்கும் அதேவேளை, இக்குறைபாடு குறித்த மருத்துவ ஆய்வுகள் முழுமூச்சுடன் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வழிகாட்டலில் 2008ஆம் ஆண்டிலிருந்து உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 2ஆம் நாள் சிறப்பிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில், இந்த செவ்வாய்க்கிழமையன்று, ஏப்ரல் 2ஆம் தேதி, 17வது முறையாக இதை உலக நாடுகள் கடைப்பிடிக்கின்றன. இந்த ஆண்டின் இந்த நாளுக்கானத் தலைப்பாக,  ‘தொடர்ந்து உயிர் வாழ்ந்தால் போதும் என்பதிலிருந்து வெற்றிகொடி நாட்டும் வாழ்வை நோக்கி நகர்தல் : அதில் விழிப்புணர்வு, ஏற்றுக்கொள்ளல் மற்றும்  பாராட்டல்’ என்பது எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டிசம் என்றால் என்ன

ஆட்டிசம் என்பது குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறைவதால் ஏற்படுகிற நோய் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது குழந்தைகளைப் பாதிக்கின்ற மூளை நரம்பு வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று. குழந்தையின் வளர்ச்சிப்படிகளில் தாமதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிந்தால் போகப் போகச் சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் எண்ணிவிடக்கூடாது. அதே வேளையில் இவற்றில் ஒருசில அறிகுறிகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது என்றும் கணித்துவிடக்கூடாது. பல அறிகுறிகள் இருந்து குழந்தையின் இயல்பான திறமைகள் பாதிக்கப்படுகின்றன என்றால் மருத்துவ ஆலோசனைப் பெறுங்கள்.. ஆட்டிசம் உள்ள குழந்தைக்கு மூன்று வயதுக்கு முன்னரே மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைகளை மேற்கொண்டால் அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம்.

ஆட்டிசத்தின் அறிகுறிகள்

குழந்தைகள் பொதுவாக நம்முடைய முகபாவனைகளுக்கு ஏற்றாற்போல் தானும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும். உதாரணமாக, இயல்பான நிலையில் இருக்கக் கூடிய ஒரு ஆறு மாத குழந்தையை பார்த்து புன்னகைத்தால் அந்த குழந்தையும் அதே உணர்வை பிரதிபலிக்கும். குரலை சற்று கடுமையாக்கினால் அழத் தொடங்கும். ஆனால் ஆட்டிசம் அறிகுறி உள்ள குழந்தைகள் இதுபோன்ற உணர்வுகளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய தனி உலகில் இருப்பார்கள். பெயரை அழைத்தவுடன் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மூன்று  அல்லது நான்கு முறை அழைத்த பின்பு மட்டுமே திரும்பிப்  பார்ப்பார்கள். அதிகமாக பேச மாட்டார்கள், தனிமையை அதிகம் விரும்புவார்கள். எதிரில் பேசுபவரின் கண்ணைப் பார்த்து பேச மாட்டார்கள். சிலர், கையில் கிடைத்த பொருட்களைப் போட்டு உடைப்பார்கள். சில நாட்களில் அதீத மகிழ்ச்சியாக இருப்பார்கள். சில நாட்களில் சோகமாக காணப்படுவார்கள். சொன்ன வார்த்தையையோ வாக்கியத்தையோ திரும்பத் திரும்ப கூறுவார்கள். பொதுவாக தன் வயதையொத்த குழந்தைகளுடன்கூட இணைந்திருக்கமாட்டார்கள். விரல்களை ஆட்டிக்கொண்டே இருப்பது, தலையை ஆட்டுவது, விரைவில் கோபம் கொள்வது, ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டுமே பயன்படுத்துவது என்பன போன்ற அறிகுறிகள் இவர்களில் காணப்படும். இந்த குறைபாடு பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கேத் தோன்றுகிறது. ஆண் குழந்தைகளோடு ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்கு பெண் குழந்தைகளிடமும் இது காணப்படுகிறது.

குறைபாட்டிற்கான அடிப்படை என்ன ?

ஆட்டிசத்துக்கு இதுதான் காரணம் என்பது இதுவரை துல்லியமாக கண்டறியப்படவில்லை. ஆனால், எவை எல்லாம் ஆட்டிசம் குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் என்ற பொதுவான கணிப்புதான் உள்ளது. மரபணுவில் உள்ள பிரச்னைகள், குழந்தையின் தாய் அவரது கர்ப்ப காலத்தில் சரியான மருத்துவ சிகிச்சை பெறாதது, குழந்தையின் எடை பிறக்கும்போது மிக குறைவாக இருப்பது, வயதான காலத்தில் குழந்தைப் பெறுவது, கர்ப்ப காலத்தில் தவறான மருந்துகளை உட்கொள்வது அல்லது குழந்தை வயிற்றில் இருக்கும்போது குழந்தை மற்றும் தாய் வைரஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாவது போன்றவை சில காரணங்களாக கருதப்படுகின்றன.

நெருங்கிய உறவில் திருமணமான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறுகின்றனர். கர்ப்பிணியிடம் காணப்படும் மனஅழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைபிடித்தல், வலிப்பு நோய் மற்றும் மன நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிடுதல் போன்ற காரணிகள் இந்தக் குறைபாடு ஏற்படுவதை ஊக்குவிக்கின்றன என்கிறது அண்மை ஆய்வு ஒன்று.

உலக நிலை

அமெரிக்காவில் 166 பேரில் ஒருவருக்கும், சுவிட்சர்லாந்தில் 100 பேரில் ஒருவருக்கும் இந்த ஆட்டிசம் குறைபாடு காணப்படுகிறது. உலகளவில் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இந்தியாவிலும் 2003ஆம் ஆண்டு ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக இருந்தது. இன்று பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக நம்பப்படுகிறது.

உலகம் முழுவதும் ஏறக்குறைய 1 கோடி குழந்தைகள் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 198 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 68 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றதாம்.

குணப்படுத்தல்

ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு மருந்துகள், குணநலன் சார்ந்த கல்வி, உளவியல் சார்ந்த நுட்பங்களைக் கற்பித்தல் ஆகியவற்றுடன் சமூக தொடர்புத் திறன், நேர்மறையான நடத்தை செயல்பாடு, மற்றும் செயல்திறன் மேம்பாடு உள்ளிட்ட வழிகளில் சிகிச்சை அளிப்பது நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

ஆட்டிசத்துக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமிலை. அன்பு ஒன்றே மருந்து. இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான் நம்மை நெருங்கி வருவார்கள். அதனால் இவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும். பூங்கா, கோவில், கடற்கரை, பொருட்காட்சி என்று பல இடங்களுக்கு இவர்களை அழைத்துச் செல்லவேண்டும். குழந்தைக்குப் புரிகிற விதமாக நிறையப் பேச வேண்டும். நீச்சல், இருசக்கர வாகனம் ஓட்டுதல் போன்றச் சிறு சிறு பயிற்சிகள் தரப்பட வேண்டும். இப்பயிற்சிகள் அவர்களின் உடல்திறனை அதிகப்படுத்துவது மட்டுமன்றி, தன்னுடைய வேலைகளைத் தானே சுயமாகச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தரும்.

இதையெல்லாம்விட முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது, தன் குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது என்பதை சில பெற்றோர் ஏற்க மறுப்பது. இதனால் அக்குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதைவிடுத்து, குழந்தைகளை பெற்றோர் அப்படியே ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பெற்றோரின் கவனிப்பு மற்ற சாதாரணக் குழந்தைகளை விட கூடுதலாக தேவைப்படும். இவர்களை பெற்றோர் பொறுமையுடன் கையாள வேண்டும். மற்ற குழந்தைகளுடன் பழகுவதை ஊக்குவித்து உதவி செய்ய வேண்டும். இந்த குழந்தைகளுக்கு ஒரு விடயத்தை சில முறை அல்லது பலமுறை கூடுதலாக விவரிக்க வேண்டியிருக்கும். படங்கள் மற்றும் பொருட்களை அவர்கள் கையில் கொடுத்து உணர வைக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த திறன் என்ன என்பதை கண்டறிந்து அதில் பயிற்சி அளிக்க முன்வரவேண்டும்.

நம் பங்களிப்பு

பெற்றோரின் பங்களிப்புக் குறித்துக் கண்டோம். இப்போது நம் பங்களிப்பு என்ன என்பதை தெரிந்துகொள்வோம். பொதுவெளியில் ஓர் ஆட்டிச பாதிப்புக் குழந்தையை எதிர்கொண்டால் அவரின் பெற்றோரிடம் விசாரணைகளையோ, அறிவுரைகளையோ தவிர்க்கலாம்.

நம் வீட்டுக் குழந்தைகள், சக வயதுடைய இவர்களை விநோதமாகவும், கேலியாகவும் பார்க்காமலிருக்கக் கற்றுக்கொடுப்போம். குறைபாடுகள் இருந்தாலும் இவர்களும் சக மனிதர்களே என்பதை நம் பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்துவோம்.

ஒவ்வோர் ஆட்டிச குழந்தையிடமும், ஒவ்வொரு தனித்திறன் இருக்குமென்பதால் அவர்களின் தனித்திறன் என்ன என்று கண்டறிய பெற்றோருக்கு உதவி அக்குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணர உதவுவோம்.

`அன்பும் அறமும் நிறைந்த சமூகமாய் நாம் திகழ வேண்டும்’ என்பதை உணர்ந்து, இக்குழந்தைகளை முறையான வசதிகளுடன், இன்முகத்துடன் நாம் வரவேற்கத் தொடங்குவது, காலத்தின் கட்டாயம், மற்றும் மனிதத்தின் அடையாளமும்கூட என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகள் சமவயது உடைய குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அதை மேலும் வளர்க்கும் வழிமுறைகளை அறியாதவர்களாக இருப்பார்கள். அதற்காக நல்ல உறவை உருவாக்கிக்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை என்று கூறிவிட முடியாது; அதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு தெரியாது, அவ்வளவுதான்! சமூக உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல்கள் அவர்களுக்கு கற்றுத் தருவது முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு பணி ஆகும்.

இந்தக் குழந்தைகளுக்கு கணனி, மடிக்கணனி, அலைபேசி, தொலைக்காட்சி போன்ற மின்னணுக் கருவிகளில் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால், இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு இவர்களைப் பெரிதும் பாதிக்கும் என்பதால் கவனமாக இவைகளைத் தவிர்க்கவேண்டும்.

அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல், ஆதரவளித்தல், அவர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அவர்களுக்கான உரிமைகளுக்காக வாதாடுதல் என்ற நிலைப்பாட்டிற்கு நாம் சமூகப் பொறுப்புணர்வுடன் தயாராக இருக்க வேண்டும். இந்த மாற்றம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த உதவும். ஆட்டிசம் குறைபாடுடையோர் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்த்து, அரவணைக்கவும், அவர்களை நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பங்களிப்பவர்களாக உருவாக்கவும் உதவும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 April 2024, 14:46