தேடுதல்

பஞ்சத்தால் வாடும் ஜிம்பாப்வே மக்களுக்கு திருஅவையின் உதவி பஞ்சத்தால் வாடும் ஜிம்பாப்வே மக்களுக்கு திருஅவையின் உதவி 

ஜிம்பாப்வே மக்களை பசிச் சாவுகளிருந்து காக்க ஆயர்கள் கோரிக்கை

ஜிம்பாப்வேயில் கால நிலை மாற்றம் தன் கொடூர முகத்தைக் காட்டியுள்ளதால் தங்கள் உயிர்நாடியான விவசாயத்தை இழந்து தவிக்கும் மக்களின் அவலநிலை விவரிக்க முடியாதது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஜிம்பாப்வே நாட்டில் விவசாய உற்பத்தி ஒரு பெரும் அழிவை சந்தித்துவரும் வேளையில், மக்களை பசிச் சாவுகளிலிருந்து காப்பாற்ற கத்தோலிக்க உதவி அமைப்புக்கள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

விவசாய உற்பத்தி தோல்வியால் ஏழைமக்கள் பெருமளவான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்ற ஜிம்பாப்வே ஆயர்கள், உணவு பாதுகாப்பின்மை மற்றும் பசிச் சாவுகளிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என உரைத்துள்ளனர்.

ஏற்கனவே பொருளாதார சிரம நிலைகளாலும், ஏழ்மையாலும், இளையோரிடையே வேலைவாய்ப்பின்மைகளாலும் துன்புறும் சமூகத்தை, இந்த வறட்சியும் தானிய உற்பத்தியின்மையும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளன என ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளனர் ஜிம்பாப்வே ஆயர்கள்.

கால நிலை மாற்றம் தன் கொடூர முகத்தைக் காட்டியுள்ளது எனக் கூறும் ஆயர்கள், தங்கள் உயிர்நாடியான விவசாயத்தை இழந்து தவிக்கும் கிராமப்புற மக்களின் அவலநிலை விவரிக்க முடியாதது எனவும் கூறியுள்ளனர்.

தேவையிலிருக்கும் மனிதர்களுக்கு ஒவ்வொருவரும் உதவவேண்டிய கடமையை உணர்ந்து நல்மனதுடைய கத்தோலிக்கர்கள் அனைவரும் உதவ முன்வரவேண்டும் எனவும் தங்கள் மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில் கேட்டுள்ளனர் ஆயர்கள்.

இத்துன்பவேளையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏழைமக்களின் துயர் துடைக்க நம் கரங்களை நீட்டவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர் ஜிம்பாப்வே ஆயர்கள்.

இதற்கிடையே, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு உட்பட பல்வேறு கத்தோலிக்க உதவி அமைப்புக்கள் அந்நாட்டு மக்களுக்கு உதவிகளை வழங்கும் பணிகளைத் துவக்கியுள்ளன.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான உணவுப் பொருட்கள், தாவர எண்ணெய் போன்றவை வழங்கப்படுவதோடு, கல்வி நிலையங்கள் வழியும் மதிய உணவு வழங்கப்படும் என கத்தோலிக்க உதவி அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 April 2024, 16:58