விடை தேடும் வினாக்கள் - இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? என்ற இயேசுவின் கேள்வியை இன்றைய சிந்தனைப் பகிர்வுக்கு எடுத்துக்கொள்வோம்.
“இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை’ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘அவன் பேய்பிடித்தவன்’ என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று.” (மத் 11, 16-19) என உரைத்தார் இயேசு.
இயேசு, மனித மனம் காட்டும் முரண்பாட்டை எண்ணி இங்கு வருந்துவதைப் பார்க்கிறோம். சந்தைவெளியில் ஒரு குழு, மற்றொரு குழுவிடம், ”வாருங்கள், திருமணவிருந்தில் இசைக்கலாம்” என்று அழைப்புவிடுக்கிறது. மறுகுழுவோ ”மகிழ்ச்சியாக இருக்கும் மனநிலை இல்லை” என்று அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. மீண்டும் அந்த குழு, அடுத்த குழுவிடம், ”சரி, அடக்க வீட்டிலாவது ஒப்பாரி வைக்கலாம்” என்று சொன்னால், ”கவலையாக இருக்கும் மனநிலை இல்லை” என்று அதற்கும் மறுப்பு வருகிறது. எதைச்சொன்னாலும் அதை செய்யக்கூடாத மனநிலையையும், எதிலும் குற்றம் காணும் மனநிலையையும் இங்கு இயேசு படம்பிடித்துக் காட்டுகிறார்.
குழந்தை உள்ளம் அவசியம், ஆனால், சிறுபிள்ளைத்தனம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இயேசு இங்கே சுட்டிக்காட்டுவது அவரது தலைமுறையினரிடமிருந்த சிறுபிள்ளைத்தனத்தை. குழந்தை உள்ளம் இருந்தால் குறையின்றி வாழலாம். ஆனால் சிறுபிள்ளைத்தனமிருந்தால், எல்லோரையும் எல்லாவற்றையும் குறை சொல்லி குறையுள்ளதாக்கிவிடுவோம். நாம் அடிக்கும் மேளத்திற்கெல்லாம் மற்றவர்கள் அனைவரும் அதற்கேற்ப ஆடவேண்டும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம். சொல்லுவதற்கெல்லாம் ஆமாம் என்று தலையாட்ட வேண்டுமென்று எதிர்பார்ப்பதும் சிறுபிள்ளைத்தனமே. தலையாட்டுவதும் அறிவு முதிர்ச்சி பெற்றவரின் செயல் அல்ல. ஊரிலும் சமுதாயத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகளை ஆழ்ந்து சிந்திக்காது, அறிவியல் பார்வையில் அணுகாது, இறையியல் புலமையில் புரிந்துகொள்ளாது, தூய ஆவியின் துணையில் உய்த்துணராது, கூட்டத்தோடு கும்பலாக, தலையாட்டிப் பொம்மையாக செயல்படுகிறோமே, அது சிறுபிள்ளைத்தனம்.
இயேசுவையும், திருமுழுக்கு யோவானையும் மக்கள் எப்படிப் பார்த்தனர் என்பதற்கு இயேசு இந்த விளக்கத்தைக் கொடுக்கிறார். இரண்டு பேருமே வெவ்வெறான மனநிலை உடையவர்கள். இரண்டு பேருமே, வேறு வேறு கண்ணோட்டத்தில் நற்செய்தியைப் போதித்தவர்கள். ஆனால், இரண்டு பேரிலும் மக்கள் குறைகண்டனர். இரண்டு பேரையும் மக்கள் வசைபாடினர். இரண்டு பேரையும் அதிகாரவர்க்கத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய முரண்பாட்டை இயேசு வருத்தத்தோடு குறிப்பிடுகிறார். அவர்களின் செயல்பாடு, உண்மையை ஏற்றுக்கொள்ளத் தாங்கள் தயாராக இல்லை என்பதைக் குறித்துக் காட்டுவதாக இயேசு சொல்கிறார். எதையும் குற்றம் காண வேண்டும் என்கிற அவர்களின் மனப்போக்கு, சரியானது அல்ல என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். நற்செய்தியில் திருமுழுக்கு யோவானுடைய போதனைக்கும், இயேசுவின் போதனைக்கும் செவிமடுக்காமல், யூதர்கள் அவர்களைப் பேய்பிடித்தவன் என்றும், பெருந்தீனிக்காரன் என்றும் விமர்சிக்கின்றார்கள். யூதர்கள் கடவுள் கற்றுக்கொடுத்ததற்கும் செவி மடுக்கவில்லை; அவருடைய திருமகன் இயேசு கற்றுக் கொடுத்தற்கும் செவி மடுக்கவில்லை. திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் தோன்றி, ஒட்டக மயிராடை அணிந்து, காட்டுத்தேனும் வெட்டுக்கிளியும் உண்டவராக வந்தார் (மத் 3:1-4). அவருக்குப் பேய்பிடித்துவிட்டது என்று கூறி அவரை ஏற்க மறுத்தார்கள். இயேசுவோ, விருந்துகளில் கலந்துகொண்டு மக்களோடு உணவருந்தியவராக வந்தார். அவரைப் பார்த்து, ''பெருந்தீனிக்காரன், குடிகாரன்'' என்றெல்லாம் குறை கூறி ஏற்க மறுத்தார்கள் (மத் 11:19). அம்மக்கள் காலத்தின் அறிகுறிகளைக் கண்டு உணர்ந்து, கடவுள் அவர்களுக்கு அறிவித்த செய்தியைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என இயேசு வருத்தம் கொள்கிறார்.
திருமுழுக்கு யோவான் ஒருவிதமான தவ வாழ்க்கையை வாழ்ந்தவர். தன்னை முழுமையாக வருத்திக் கொண்டவர். ஆடம்பரங்களை விரும்பாதவர். தனிமையை விரும்பி, தனிமையாக வாழ்ந்தவர். இயேசு மக்களோடு மக்களாக, மக்களில் ஒருவராக வாழ்ந்தவர். இரண்டு பேரையும் மக்கள் குறைகூறினார்கள். ஒருவரில் காணப்பட்ட குறை மற்றவரில் இல்லை, எனினும் இருவரையும் குறைசொல்ல அவர்கள் தயங்கவில்லை. தன் காலத்து மக்களை இயேசு நன்றாக அறிந்து வைத்திருந்தார். அவர்களிடமிருந்த குறை காணும் மனநிலையையும், எதிர்மறையான பார்வையையும் அவர் தெரிந்திருந்தார். அவற்றைச் சுட்டிக்காட்டி, நேர்மறையாகச் சிந்திக்க அழைப்பு விடுக்கிறார். இயேசு காலத்தைய யூதர்கள் இயேசுவிடமும் குறை கண்டனர். அவரது முன்னோடியான திருமுழுக்கு யோவானிடமும் குறை கண்டனர். இருவரும் எதிரெதிரான செயல்பாடுகளைக் கொண்டிருந்தனர். ஆனால், இருவரையும் ஒரே விதமாகப் புறக்கணித்தனர். இது அவர்களின் உள்மனக் குறைபாட்டையே எடுத்துக்காட்டுகிறது.
முரண்பாடுகளின் உலகம் நாம் வாழக்கூடியது. இங்கே குறைகள் சொல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகம். நல்லவற்றைப் பாராட்ட வேண்டும் என்பதோ, திருத்துவதற்காகவே குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதோ, இங்கேயிருக்கிற மனிதர்களுக்கு பழக்கமல்ல. ஒருவர் எதைச்செய்தாலும் அதில் எப்படி குற்றம் கண்டுபிடிக்கலாம் என்கிற மனப்பான்மை தான், இன்றைய தலைமுறையினரிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால்தான், இயேசு கேட்கிறார், இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? என்று. இன்றைய மக்கள் விழுமியங்களுக்காக வாழவில்லை. மதிப்பீடுகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. தங்களது சுயநலத்தோடு நீதியை கொன்று கொண்டிருக்கிறார்கள். நீதியையும், உண்மையையும் தங்களுக்கு ஏற்றாற்போல சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இரட்டை மனப்பாங்கை, இயேசு கண்டிக்கிறார்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இவைகளுக்கு நல்ல உதாரணங்களாகும். ஆளும் அரசு பொதுமக்கள் பயன்படுத்தும் சேவைக்கட்டணத்தை உயர்த்துகிறபோது, எதிர்க்கட்சிகள் கிளர்ந்தெழுகின்றன. இது தவறு என்று, மக்களை தூண்டிவிட்டு, அரசுக்கெதிராகப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற அரசாக மாறுகிறபோது, அதே தவறைச் செய்கிறார்கள். எது தவறு என்று வீதியில் இறங்கி போராடினார்களோ, அதே தவறைச் செய்கிறார்கள். ஆளும் அரசு, எதிர்க்கட்சியாக மாறுகிறபோது, தாங்கள் செய்ததை, மற்றவர் திருப்பிச் செய்யும்போது, அவர்களும் கூப்பாடு போடுகிறார்கள். ஆக, தங்களது சுயநலத்தை மையமாக வைத்து ஆட்சி செய்யும் இந்த அரசுகளால், மக்கள் முழுவதுமாகப் பாதிக்கப்படுகிறார்கள். மக்களை மையப்படுத்தாத எந்த அரசுகளும், கேலிக்கூத்தானவைகளே.
இன்றும் கூட இந்நிலை மாறவில்லை என்றுதான் கூற வேண்டும். இயேசு உலகுக்கு அறிவித்த செய்தி என்னவென்பதை அறிந்துகொள்ள மறுக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் காட்டுகின்ற காரணங்கள் பல. இயேசு அறிவித்த செய்தி வேறு சமயங்களிலும் இருக்கிறதே என்பது ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது. இயேசுவின் போதனைப்படி கிறிஸ்தவர்கள் நடக்கிறார்களா என்றொரு கேள்வியைக் கேட்போரும் இருக்கின்றார்கள். இந்நிலையில் இயேசுவை நாம் இருபத்தோராம் நூற்றாண்டு மன நிலைக்கு ஏற்ப அறிவிப்பது எப்படி என்பது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. பிற சமயங்களில் தலைசிறந்த போதனைகள் உண்டு என்பதை நாம் மறுக்கமுடியாது. அதுபோலவே, உலகில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இயேசுவின் போதனைப்படி நடக்கிறார்கள் எனவும் கூற இயலாது. ஆனால் இக்காரணங்களைக் காட்டி இயேசு பற்றி அறிய மறுப்பது சரியல்ல. உலகில் வாழ்ந்த மாபெரும் மனிதருள் ஒருவர் இயேசு. அவர் அறிவித்த செய்தியைக் கேட்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட பல்லாயிரம் மக்கள் வரலாற்றில் வாழ்ந்திருக்கின்றார்கள். எனவே, இயேசு அறிவிக்கின்ற செய்தி என்னவென்று அறிகின்ற பொறுப்பு எல்லாருக்குமே உண்டு. அதே நேரத்தில் பல கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனையைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி அப்போதனையை ஒதுக்கிவைப்பதும் முறையல்ல.
நம்முடைய வாழ்க்கையிலும் பலர் நம்மை ஏசுவர், பேசுவர். அவற்றை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு இலக்கில் மட்டுமே கவனத்தை வைத்து, அதை நோக்கி விரைந்தோம் என்றால், நமக்கு வெற்றியானது நிச்சயம் கிடைக்கும். நம்முடைய வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் உதவாத விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் கடந்துபோவதுதான் வெற்றிக்கான தலைசிறந்த வழியாகும். திருமுழுக்குக் யோவானும் இயேசுவும் நமக்கு அத்தகைய பாடத்தைக் கற்றுத் தருகின்றார்கள். யூதர்கள் தங்களை விமர்சிக்கின்றார்களே என்பதற்காக திருமுழுக்கு யோவானும் சரி, இயேசுவும் சரி, தாங்கள் எடுத்த காரியத்திலிருந்து, இலட்சியத்திலிருந்து பின்வாங்கவில்லை என்பதுதான் நாம் இங்கே கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கின்றது. பலநேரங்களில் யாராவது நம்மை விமர்சித்துவிட்டால் அல்லது தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டிவிட்டால், நம்முடைய அத்தனை முயற்சியையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, மூலையில் ஒடுங்கிப் போய்விடுகின்றோம். குறைகூறுதல், குற்றஞ்சாட்டுதல் போன்ற செயற்பாடுகள் மனிதர் மத்தியில் நேற்று இன்று தோன்றிய செயலல்ல. நமது ஆதிப்பெற்றோரான ஆதாம் ஏவாளின் நாட்களிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது. ‘உண்ண வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின மரத்தின் கனியைப் உண்டாயோ?’ என்று இறைவன் ஆதாமிடம் கேட்டபோது (துநூ.3:11), ‘நீர் எனக்குத் தந்த பெண்ணே எனக்கு உண்ணக் கொடுத்தாள்’ என்று ஏவாளின் மீது பழியைப் போட்டுவிடுகிறார் ஆதாம். இறைவன் ஏவாளைக் கேட்டபோது, ‘பாம்பு என்னை வஞ்சித்தது; நான் உண்டேன்’ என்று பாம்பைக் குற்றஞ்சாட்டிவிட்டார் ஏவாள். அந்நாளிலிருந்தே குறைகூறும் மனப்போக்கு மனிதனில் செயல்பட ஆரம்பித்துவிட்டது. அது இன்றும் மனிதரை தொடர்ந்து பற்றிப் பிடித்துள்ளது.
‘உன்னைப்போல உன் அயலானையும் நேசி’ என்று ஆண்டவர் கற்றுக்கொடுத்த கட்டளையை நாம் மறக்கும்போது, இந்தக் குறை கூறும் பழக்கம் நமக்குள் தலைதூக்குகிறது. குறை கூறிக்கொண்டிருப்பதே சிலருடைய பொழுதுபோக்காகி விடுகிறது. அதுமட்டுமல்ல, தன் பிழைகளை மறைக்க முயல்கிறவனே அடுத்தவன் குறைகளை அதிகமாகப் பெரிதுபடுத்துகிறான்.
பிறரைக் குற்றப்படுத்துகின்ற ஒவ்வொருவரும் தன்னைத்தானே, உண்மையாக ஆராய்ந்து பார்த்தால், வாயடைத்துவிடுவோம். நம்மிலே தவறுகளை வைத்துக்கொண்டு பிறரைத் தவறாக எடைபோடுவது தவறு. பிறர் செய்யும் தவறுகள் நமது வாழ்வில் இல்லை என்று உறுதியாகச் சொல்லமுடியுமா? உங்களுள் குற்றமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும் என்றார் இயேசு. அமைதியாக சிந்தித்தால், பிறரின் தவறுகள் மன்னிப்பதற்கு ஏதுவானவைகள் என்பதை உணருவோம். முதலில் நமது வாழ்வை ஆராய்ந்து பார்த்து, அதிலுள்ள குறைகளை நீக்கும்படி இறைவேண்டல் செய்வோம்.
குறை சொல்பவர்களைப் பார்த்து முடங்கி விடாமல், நம் பாதையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதேவேளை, "தந்தையே! இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள்" என்று இயேசு ஜெபித்ததுபோல நாமும் ஜெபிக்கப் பழக வேண்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்