தேடுதல்

ஒளி பகிரப்படும்போது குறைவுபடுவதில்லை. ஒளி பகிரப்படும்போது குறைவுபடுவதில்லை.  (ANSA)

தடம் தந்த தகைமை – நீங்கள் உலகிற்கு ஒளியாய்......

நாம் பேரொளியாம் கடவுளிலிருந்து சிறு ஒளியாகப் பிறந்தவர்கள். ஒளித் துளிகளாம் நம் உணர்வு, எண்ணம், மொழி, மூச்சு, அசைவு யாவும் மலைமேல் காணும் நகர் போலாக வேண்டும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும் (மத்தேயு 5:14-15) என்றார் இயேசு.

கடவுளின் முதல் படைப்பு ஒளி (தொநூ 1:3). தம் படைப்பில் ஒளி எத்துணை இன்றியமையாததென அறிந்தே அவர் இச்செயலைச் செய்தார். அவ்வாறே மனிதர் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தவே நம்மை ஒளியோடு ஒப்பிட்டுள்ளார் இயேசு. இருளை அழிக்கும் வல்லமை கொண்டுள்ள ஒளியைப் போல, மனிதர் நாம் நம் நற்செயல்களால் தீமை எனும் இருளகற்றி ஒளிர வேண்டும் என்பதே இயேசுவின் ஆசை.

மரணப் படுக்கையில் வயதான ஒரு துறவி. சூழ நின்ற ஏனைய இளந்துறவிகள் அழுது நிற்க, மூச்சை இழுத்து 'ஏன் அழுகிறீர்கள்?' என மெல்லக் கேட்டார். 'நீர் ஒளி, உம் ஒளியில் யாம் அணிவகுத்தோம்' என இளந்துறவியர் பதில் மொழிய, 'இனி நீங்களே ஒளியாகுங்கள்' என ஒளியின் வார்த்தைகள் உதிர்த்து உயிர் துறந்தார் பெரிய துறவி.

நாம் பேரொளியாம் கடவுளிலிருந்து சிறு ஒளியாகப் பிறந்தவர்கள். ஒளித் துளிகளாம் நம் உணர்வு, எண்ணம், மொழி, மூச்சு, அசைவு யாவும் மலைமேல் காணும் நகர் போலாக வேண்டும். நம் செயல்பாடு ஒவ்வொன்றும் ஓர் ஒளித் துளி.

இறைவா! என்றும் எங்கும் உம்மை ஒளிரச் செய்ய உள்ளொளி தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2024, 12:03