மீண்டும் கட்டியெழுப்பப்படும் எருசலேம் திருக்கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் எருசலேம் திருக்கோவில்  

தடம் தந்த தகைமை : மீண்டும் எழுப்பப்பட்ட எருசலேம் திருக்கோவில்!

ஆண்டவரின் இல்லம் அடித்தளம் இடப்பட்டதைக் குறித்து எல்லா மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்து மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அந்நாட்களில், பாரசீக மன்னர் சைரசு அவர்களுக்குக் கொடுத்திருந்த அனுமதியின்படி, கொத்தர்களுக்கும் தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். கேதுரு மரங்களை லெபனோனிலிருந்து யோப்பா கடலுக்குக் கொண்டுவரச் சீதோன், தீர் நகரத்தினருக்கு உணவு, பணம், எண்ணெய் ஆகியன கொடுத்தார்கள். அவர்கள் எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் தளத்திற்கு வந்தடைந்த இரண்டாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில், செயல்தியேலின் மகன் செருபாபேல், யோசதாக்கின் மகன் ஏசுவா, அவருடைய சகோதர குருக்கள், லேவியர்கள், மற்றும் அடிமைத்தனத்திலிருந்து எருசலேமுக்குத் திரும்பி வந்தவர்கள் அனைவரும் கோவில் வேலையைத் தொடங்கினர். ஆண்டவரின் இல்ல வேலையைக் கண்காணிக்க இருபதும், அதற்கு மேற்பட்ட வயதுமுடைய லேவியர்களை நியமித்தனர்.

கட்டுபவர்கள் ஆண்டவரின் கோவிலுக்கு அடித்தளம் இட்டபோது இஸ்ரயேலின் அரசர் தாவீது உரைத்தபடி குருக்கள் தங்களுக்குரிய ஆடை அணிந்துகொண்டு, எக்காளத்தோடும், ஆசாபின் புதல்வரான லேவியர் கைத்தாளங்களோடும் ஆண்டவரைப் புகழ்ந்தனர். அவர்கள் ஆண்டவரைப் புகழ்ந்து நன்றி கூறி, “அவர் நல்லவர், ஏனெனில் அவர் இரக்கம் இஸ்ரயேல்மீது என்றென்றும் உள்ளது” என்று பாடினர். ஆண்டவரின் இல்லம் அடித்தளம் இடப்பட்டதைக் குறித்து எல்லா மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்து மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர். முதல் கோவிலைக் கண்டிருந்த குருக்கள், லேவியர், குலத்தலைவர்கள், மூப்பர்கள் பலர் இந்தப் புதிய கோவிலின் அடித்தளத்தைக் கண்டபோது, உரத்த குரலில் அழுதனர். வேறு பலர் மகிழ்ச்சியாலும் ஆர்ப்பரிப்பாலும் குரல் எழுப்பினர். நெடுந்தொலைவு கேட்குமளவுக்கும் மக்கள் பெருங்கூக்குரல் எழுப்பியதால், மகிழ்ச்சிக் குரலொலியை அவர்களின் அழுகைக் குரலிலிருந்து பிரித்துணர எவராலும் இயலவில்லை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2024, 15:06