தேடுதல்

மணிப்பூரில் அமைதிவேண்டி பதாகைகளுடன் பெண்கள் மணிப்பூரில் அமைதிவேண்டி பதாகைகளுடன் பெண்கள்   (AFP or licensors)

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த கிறிஸ்தவக் கூட்டமைப்பு முயற்சி!

இரு தரப்பு தலைவர்களும் அமைதிக்கான இந்த முயற்சி அந்தந்த மக்களை நேர்மறையான மனதுடன் சென்றடைய ஒப்புக்கொண்டதால், இந்தச் சந்திப்பு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்துள்ளது : தலத்திருஅவை அதிகாரி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கிறிஸ்தவ அமைப்பு ஒன்றால் வழிநடத்தப்பட்ட குழுவொன்றின் தலைமையில் முதன்முதலாக, பூர்வகுடி கிறிஸ்தவர்களும் இந்துக்களும் இணைந்து வந்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 17, வெள்ளியன்று, அண்டை மாநிலமான அஸ்ஸாமின் குவஹாத்தியில் உள்ள சலேசிய சபை இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் குக்கி, மெய்தி ஆகிய இருசமூகங்களிலிருந்தும் ஏறத்தாழ 14 செல்வாக்குமிக்க பிரதிநிதிகள் பங்குபெற்றதாக தலத்திருஅவையின் அதிகாரி ஒருவர் கூறியதாக உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

இரு சமூகங்களுக்கிடையே அமைதியை ஏற்படுத்த அரசு எவ்வித முயற்சியும் எடுக்காத நிலையில், இரண்டு மதங்களையும் சேர்ந்த தலைவர்கள், அமைதியை மீட்டெடுப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதில் ஏறக்குறைய ஒரு நாள் முழுவதும் செலவிட்டனர் என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தலத்திருஅவை அதிகாரிகளில் ஒருவர் கூறிதாக அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

இரு தரப்பு தலைவர்களும் அமைதிக்கான இந்த முயற்சி அந்தந்த மக்களை நேர்மறையான மனதுடன் சென்றடைய ஒப்புக்கொண்டதால், இந்தச் சந்திப்பை குறிப்பிடத்தக்க திருப்புமுனை என்று விவரித்த அந்தத் தலத்திருஅவை அதிகாரி, நிச்சயமாக, அவர்களின் முயற்சிகள் நற்பயனைத் தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மணிப்பூர் மாநிலத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ சபையினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மணிப்பூர் அனைத்துக் கிறிஸ்தவ கூட்டமைப்பு (All-Manipur Christian Organisation) அமைதிக்கான இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2024, 15:07