தேடுதல்

செபமாலை செபமாலை   (ANSA)

இந்தோனேசியாவில் கத்தோலிக்க மாணவர்களை தாக்கிய நான்கு பேர் கைது!

Banten பகுதியில் மே 5, இஞ்ஞாயிறன்று, வீடு வீடாகச் சென்று செபமாலை செபித்துக்கொண்டிருந்த Pamulang பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 12 கத்தோலிக்க மாணவர்கள்மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் செபமாலை செபித்துக் கொண்டிருந்த கத்தோலிக்க மாணவர்களைத் தாக்கியதற்காக இஸ்லாமிய மதத்தினர் நால்வரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகக் கூறியுள்ளது யூகான் செய்தி நிறுவனம்.

தெற்கு டாங்கராங்கில் உள்ள காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கும் அந்த நால்வரையும் மே 7, இச்செவ்வாயன்று ஊடகங்கள் முன்  கொண்டுவந்ததாகவும், அவர்கள்மீது வழக்குத் தொடுப்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறியதாகவும் தெரிவிக்கிறது அச்செய்திக்குறிப்பு.

மேலும் சந்தேகத்திற்குரிய இந்த நால்வரும், செபமாலை செபித்துக்கொண்டிருந்த மாணவர்களை நோக்கி சத்தமான குரலில் மிரட்டும் தொனியில் கத்தினார்கள் என்றும், அவர்களுடன் வந்த மற்றவர்கள் கத்திகளை ஏந்தியவாறு அவர்கள்மீது தாக்குதலில் ஈடுபட்டனர் என்று காவல் துறையினர் தெரிவித்ததாகவும் உரைக்கிறது அச்செய்தி.

மே 5, இஞ்ஞாயிறன்று, Banten பகுதியில் வீடு வீடாகச் சென்று செபமாலை செபித்துக்கொண்டிருந்த Pamulang பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 12 கத்தோலிக்க மாணவர்கள்மீது அவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக மேலும் காவலர்கள் கூறினர் எனச் சுட்டிக்காட்டுகிறது அச்செய்தி நிறுவனம்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மக்களாட்சி மற்றும் அமைதிக்கான செட்டாரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹலிலி ஹசன் அவர்கள், இந்தச் சம்பவம் மத சுதந்திரத்தை மீறும் செயலாகும் என்று குறிப்பிட்டதுடன், சகிப்பின்மை மற்றும் வெறுப்பு என்பது அரசியலமைப்புக் காட்டும் மதச் சுதந்திரத்திற்கான உரிமைக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை இந்த வழக்கு காட்டுகிறது என்றும் தெரிவித்தார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2024, 15:33