தேடுதல்

மணிப்பூரில் ஆலங்கட்டி மழைப் பாதிப்புகள் மணிப்பூரில் ஆலங்கட்டி மழைப் பாதிப்புகள்   (ANSA)

இந்தியாவின் மணிப்பூரில் பேரழிவை ஏற்படுத்திய ஆலங்கட்டி மழை!

இந்த ஆலங்கட்டிப் பெருமழையின்போது வீசிய பெருங்காற்றின் காரணமாக வீட்டின் கூரைகள் பறந்ததால் மலைப்பகுதிகளில் குறைந்தது 6 கிறித்தவக் கோவில்கள் சேதமடைந்துள்ளன.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மே 5 , இஞ்ஞாயிறன்று, ஆலங்கட்டி மழை பெய்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும், கிறிஸ்தவ வழிப்படுத் தளங்கள் உட்பட 15,000-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்தன என்றும் தெரிவிக்கிறது யூகான் செய்தி நிறுவனம்.

இந்த இயற்கைப் பேரிடர் குறித்து வெளியான முதற்கட்ட அறிக்கையில், ஒருவர் இறந்துவிட்டதாகவும், 15,425 வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் மாநில முதல்வர் N.பிரேன் சிங் தெரிவித்தார் என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

மே 6, இத்திங்களன்று, செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் N.பிரேன் சிங், நிவாரணப் பொருட்களை ஏற்பாடு செய்வதற்கான நிதி உதவியை மாநில அரசு அனுமதித்துள்ளது என்றும், வீடுகள் சேதமடைந்த மக்களைத் தங்க வைப்பதற்காக 42 நிவாரண முகாம்களை அரசு திறந்துள்ளது என்றும், மலையக மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மே 7, இச்செவ்வாய்க்கிழமை வரை மூடப்படும் என்றும் கூறினார் என்றும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.

இந்த ஆலங்கட்டிப் பெருமழையின்போது வீசிய பெருங்காற்றின் காரணமாக வீட்டின் கூரைகள் பறந்ததால் மலைப்பகுதிகளில் குறைந்தது 6 கிறித்தவ கோவில்கள் சேதமடைந்துள்ளன என்று, தனது பெயர் வெளியிட விரும்பாத தலத் திருஅவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்றும் தெரிவிக்கிறது அச்செய்திக் குறிப்பு.

சேதப் பாதிப்புகள் குறித்து நாங்கள் இப்போது கணக்கு எடுத்து வருகிறோம் என்றும், மேலும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு இயற்கைச் சூழல் உகந்ததாக இல்லை என்றும் கூறிய அந்தத் தலத்திருஅவை அதிகாரி, எவ்வாறாயினும், இன வன்முறையில் ஏற்கனவே அனைத்தையும் இழந்த எங்கள் மக்களுக்கு உதவ நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று அச்செய்தி நிறுவனத்திடம் உறுதியளித்ததாகவும் குறிப்பிடுகிறது அச்செய்திக் குறிப்பு. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2024, 15:28