சத்தீஸ்கரில் இறந்த கிறித்தவரை நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் உறுதி!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அண்மையில் இறந்த பூர்வகுடி கிறிஸ்தவர் ஒருவரை முறையாக அடக்கம் செய்வதை உறுதிசெய்வதில் இந்திய நீதிமன்றம் தலையிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது யூகான் செய்தி நிறுவனம்.
இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் அவரது கிராமத்தில் வசிப்பவர்கள் இறந்த கிறிஸ்தவர் அடக்கம் செய்யப்படுவதை எதிர்த்த வேளை, இந்த விடயத்தில் நீதிமன்றம் தலையிட்டதாக அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
54 வயதானI svar Korram என்ற பூர்வகுடி கிறிஸ்தவர், மத்திய சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தின் தலைமையகமான ஜக்தல்பூர் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏப்ரல் 25 அன்று இறந்தார் என்றும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
மேலும் மலைப்பாங்கான, காடுகளை ஒட்டிய மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமான அவரது சொந்த ஊரான சிந்த்பஹரைச் சேர்ந்த கிராம மக்கள், இறந்த அவரது உடலை ஊருக்குள் திரும்பக் கொண்டு வர வேண்டாம் என்றும், கிறிஸ்தவ சடங்குகளின்படி அடக்கம் செய்ய வேண்டாம் என அவரது குடும்பத்தினரிடம் கூறினர் என்றும் அச்செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து யூகான் செய்தி நிறுவனத்திடம் பேசிய பெந்தக்கோஸ்து சபையின் ஆயர் Vijay Kumar Thobi அவர்கள், இந்தப் பகுதியில் பூர்வகுடி கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை, இறந்த அந்தக் கிறிஸ்தவரை அவரது கிராமத்தில் அடக்கம் செய்ய உத்தரவிடக் கோரி பிலாஸ்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்தோம் என்று கூறிய ஆயர் Thobi அவர்கள், இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், இறந்த கிறிஸ்தவரை அவரது கிறிஸ்தவ மத நம்பிக்கையின்படி அவரது மூதாதையர் இடத்தில் அடக்கம் செய்வதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்