தேடுதல்

கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்தல் கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்தல்  

நேர்காணல் - கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்த விழா

விவிலியத்தில் நாம் காணும் ஆதாம் ஏவாள் முதல் திருத்தூதர்கள் வரை அனைவரும் இறைவனுடனான சந்திப்பிற்குப் பின் எல்லையற்ற வகையில் ஒரு மாற்றத்தைப் பெற்றனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்புக்குரியவர்கள் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும் தருணம் வார்த்தையில் விளக்க இயலாதது. சந்திப்புக்கள் பலரது வாழ்வில் ஓர் எதிர்பாராத மாற்றத்தைக்  கொணர்ந்துள்ளன. விவிலியத்தில் நாம் காணும் ஆதாம் ஏவாள் முதல் திருத்தூதர்கள் வரை அனைவரும் இறைவனுடனான சந்திப்பிற்குப் பின் எல்லையற்ற வகையில் ஒரு மாற்றத்தைப் பெற்றனர். இலக்கியத்திலும் வரலாற்றிலும் நாம் காணும் அரிய தலைவர்களின் சந்திப்புக்கள் உலக வரலாற்றில் ஏற்படுத்தியுள்ள பல தாக்கங்களையும் நாம் அறிவோம். ஆக சந்திப்புக்கள் வாழ்க்கையை வளப்படுத்துகின்ற உரங்கள். அவ்வகையில் இன்றைய நாளில் நம் தாயாம் திருஅவையானது கன்னி மரியா எலிசபெத் அம்மாவைச் சந்தித்த திருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது.

இறைமகனை ஈன்றெடுப்பாய் என்ற செய்தி கபிரியேல் வானதூதரால் எடுத்துரைக்கப்பட்ட போதிலும் தனது உறவினரான எலிசபெத்து கருவுற்றிருப்பது அறிந்து அவரைக் காண அவருக்கு உதவிகள் செய்ய விரைகின்றார் கன்னி மரியா. இறைவனின் தாய் என்ற பெருமிதமனப்பான்மை இல்லாமல் தாழ்நிலையில் இருப்பவர்களோடும் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களோடும் தனது உடனிருப்பை அளிக்கின்றார். அன்னை மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த விழாவானது கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. 1263 ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கன் சபையினரால் மட்டும் கொண்டாடப்பட்ட இவ்விழா, அதன்பிறகு திருஅவை முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இன்றைய நம் நேர்காணலில் இவ்விழா பற்றிய தனது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்பவர் அருள்தந்தை டோமினிக். இயேசு சபையை சார்ந்த அருள்தந்தை டோமினி அவர்கள் சென்னையிலுள்ள LIBA வில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகின்றார். அருள்தந்தை அவர்களை மரியா எலிசபெத் அம்மாவைச் சந்தித்த விழா பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

நேர்காணல் - கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்த விழா

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 May 2024, 08:06