தடம் தந்த தகைமை – மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்!
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் (மத் 5 : 11-12).
நீதிக்கான நிலைப்பாட்டுடன் பயணிப்பது என்பது எளிதானதன்று, அது மிக மிகக் கடினமானது. அக்கடினமான பாதையைத் தேர்ந்தவர்தாம் இயேசு. ஆண்டுகொண்டிருந்த அரசியல் கூட்டமும், சமயக் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்தியவர்களும் கொண்டிருந்த அதிகாரத்தால் ஏழையர் வாழ்வு நசுக்கப்பட்டு, உறிஞ்சப்பட்டது. அந்த அடக்குமுறையிலிருந்து விடுவிக்கத் துணிந்த பலரும் பற்பல சித்திரவதைக்குள்ளாயினர்.
அவர்களது உயிரும் பறிக்கப்பட்டது. அச்சூழலிலும் அஞ்சாது வாழும் அகவுறுதிக்கு இயேசுவின் இவ்வார்த்தை ஓர் அகவிருந்து.
“யாவே உயர்த்துகிறார்” எனும் பெயர்ப் பொருள் கொண்ட இலிக்கியாவின் மகன் (எரே 1:1) எரேமியா ஏறத்தாழ கி.மு. 646-ல் பிறந்து இறைவாக்கினரானவர். தாம் வாழ்ந்த சமூகத்தில் அடிமைத்தனம் கொடிகட்டிப் பறந்ததையும் மனிதாபிமானம் மரணித்துப் போனதையும்
நீதிக் கண்களால் பார்த்து எதிர்க் குரல் தொடுத்தவர். அதற்காக அவர் ஏற்ற துன்பங்களால் 'துன்புறும் ஊழியன்' எனப் பெயரேற்றார். சாகுமளவு துன்புற்றாலும் கடையரின் விடுதலைக்காகப் போராடிய எரேமியாவின் மனநிலை நம் மனங்களை மணம் முடிக்கட்டும். நேரமும் பொறுமையும் போராளிகளின் பலம்.
இறைவா! நீதிப் பயணத்தில் நீர் என்னோடு உடன் பயணிக்கின்றீர் என உறுதியாக நம்பிச் செயல்பட ஊக்கம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்