தேடுதல்

விவிலிய துணையுடன் செபித்தல் விவிலிய துணையுடன் செபித்தல்  (©4Max - stock.adobe.com)

தடம் தந்த தகைமை - கையை நீட்டும்

உறுப்புக் குறையோடு வாழ்ந்தவருக்கு நலமும், மனக்குறையோடு அங்கிருந்தவர்களுக்கு மனநலமும் கொடுத்து நேயத்தை நிலைப்படுத்துகின்றார் இயேசு. நலிந்தவர்களைத் தூக்கிவிட நம் கைகளும் நீளட்டும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

கை சூம்பியவரை நோக்கி இயேசு கையை நீட்டும் என்றார்.

பிறர் கேட்டு ஈவதிலும் கேளாமலே ஈவதுதான் உண்மை தானம். அதனையே இயேசு தொழுகைக்கூடத்தில் நிறைவேற்றினார். மாற்றுத்திறனாளர்கள் மதிப்புப் பெறத் தகுதியற்றவர்கள் என்ற மனப்பாங்கு கொண்டிருந்த மனிதர் மத்தியில் இயேசு செய்தது ஓர் அருஞ்செயல் மட்டுமன்று, மாற்றுப் பார்வைக்கான ஒரு மதிப்பீட்டுச் செயல். மனிதர் எல்லாரும் கடவுள் முன் சமம் எனச் சாதிக்க ஓய்வுநாளில் மேற்கொண்ட சவாலான செயல். இங்கே, கை சூம்பியதால் கடையராக்கப்பட்டவரோ, அவருக்காக வேறு எவருமோ எந்தப் பரிந்துரையையும் இயேசுவிடம் எழுப்பியதாகத் தெரியவில்லை. அம்மனிதரின் சூம்பிய கை நலப்படுத்தலை வைத்துச் சூழ்ச்சிகள் புனையத் துணிந்தவர்களின் சட்ட சூத்திரங்களைச் சுக்குநூறாக்க வேண்டும் என்பதும் இயேசுவின் ஆசை. எனவே உறுப்புக் குறையோடு வாழ்ந்தவருக்கு நலமும், மனக்குறையோடு அங்கிருந்தவர்களுக்கு மனநலமும் கொடுத்து நேயத்தை நிலைப்படுத்துகின்றார். நலிந்தவர்களைத் தூக்கிவிட நம் கைகளும் நீளட்டும். நன்மை செய்ய நாளும் ஆளும் பார்க்கத் தேவையில்லை.

இறைவா! நான் பெற்ற கைகள் நன்மை செய்யவே. அவற்றைப் பெறுவதற்கென நீட்டாமல் பகிர்வதெற்கென நீட்டும் மனம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2024, 10:15