பாகிஸ்தானில் மதமாற்றம் பெயரில் கிறிஸ்தவ சிறுவன் கொலை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இஸ்லாம் மதத்தை ஏற்க மறுத்த 13 வயது கிறிஸ்தவ சிறுவனுக்கு எதிராக நச்சுப் பொருளை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்திய மற்றொரு கட்டாய மதமாற்ற முயற்சி பாகிஸ்தானில் நடந்துள்ளது என்று தெரிவிக்கிறது ஆசிய செய்தி நிறுவனம்.
ஏப்ரல் 13, சனிக்கிழமையன்று, இலாகூர் நகரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், சாய்ம் என்ற சிறுவன் முடி வெட்டிக்கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய வேளை, அச்சிறுவனின் கழுத்தில் சிலுவை இருப்பதைக் கவனித்த காதர் கான் என்ற ஒரு முஸ்லீம் பாதுகாப்புக் காவலர் அவனைத் தடுத்து நிறுத்தி, சிலுவையுடன் கூடிய அந்தத் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டதுடன், அவனிடம் இஸ்லாமிய செபத்தை வாசிக்கும்படி வற்புறுத்தினார் என்றும், ஆனால் தானொரு கிறிஸ்தவன் என்று கூறி அதனைச் செய்ய அச்சிறுவன் மறுத்துவிட்டதாகவும், பின்னர் அந்தக் காவலர் அச்சிறுவனுக்கு நஞ்சு கொடுக்கும் முயற்சியில் நச்சுப் பொருளை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார் என்றும் அச்செய்திக் குறிப்புத் விவரிக்கின்றது.
சயீம் வீட்டிலிருந்து காணாமல் போன பல மணி நேரங்களுக்குப் பிறகு அவனது பெற்றோர்கள் இறந்துபோன தங்கள் மகனின் உடலைக் கண்டனர் என்றும், இதுகுறித்து புகார் தெரிவிக்க அச்சிறுவனின் தந்தை லியாகத் ரந்தவா காவல்துறையிடம் சென்றபோதும், அவர் அக்காவலர்களால் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டார் என்றும் தெரிவிக்கிறது அச்செய்திக் குறிப்பு.
அதேவேளையில், அதிகாரிகள் பல வற்புறுத்தலுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர் என்றும், ஆனால், அந்த ஆவணத்தின் நகல் சைமின் குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை என்றும் உரைக்கும் அச்செய்திக் குறிப்பு, பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், நடந்த சம்பவத்தின் பல பகுதிகள் சேர்க்கப்படாமல் மறைக்கப்பட்டுள்ளது என்றும் எடுத்துக்காட்டுக்காட்டுகிறது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நீதிக்கான குரல் அமைப்பின் தலைவர் ஜோசப் ஜான்சன் அவர்கள், பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கட்டாய மத மாற்ற சம்பவங்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், அச்சிறுவனின் கொலைக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த விடயத்தில் காவலர்கள் மிகுந்த அலட்சியம் காட்டுவதுடன், அச்சிறுவனின் பெற்றோருக்கு மிகவும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் உரைத்துள்ளார் ஜான்சன்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்