கிறிஸ்தவ செவிலியர்கள் மேலதிகாரிகளால் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மே 12, இஞ்ஞாறன்று, உலக செவிலியர் தினம், பாகிஸ்தானின் பைசலாபாத் மதீனா நகரிலுள்ள பங்குத்தளத்தில் கொண்டாடப்பட்ட வேளை, அதன் பங்குத்தந்தை காலித் ரஷீத் அசி அவர்கள், 16 செவிலியர்கள் மற்றும் 25 பேறுகால உதவியாளர்களையும், மக்களை குணப்படுத்துவதற்கான அவர்தம் உபகரணங்களையும் ஆசீர்வதித்ததாக உரைக்கின்றது ஆசிய செய்தி நிறுவனம்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி நலப் பணியாளர்கள், மாணவர்கள், அன்னையர்கள் உட்பட ஏறத்தாழ அறுபது பேர் கலந்துகொண்டனர் என்றும், அப்பங்குத்தளத்தின் தலைமை செவிலியராக இருக்கும் அருள்சகோதரி அல்வினா அவர்கள் இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார் என்றும் கூறுகிறது அச்செய்தி நிறுவனம்.
ஃபிரான்சிஸ்கன் துறவு சபையைச் சேர்ந்த அருள்சகோதரி அல்வினா, ஆயர் ஜோசப் இந்திரியாஸ் ரெஹ்மத் தலைமையிலான பைசலாபாத் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் உதவியுடன் ஏழைகளுக்கு 30 ஆண்டுகளாகத் தனது மருத்துவ மருந்தகத்தில் இருந்து சமூகத்திற்குப் பணியாற்றி வருகிறார் என்றும் தெரிவிக்கிறது அச்செய்திக் குறிப்பு.
இதுகுறித்துப் பேசிய பங்குத் தந்தை அசி அவர்கள், உலகத்தின் அனைத்து செவிலியர்களின் மகத்தான பணிகளுக்காக அவர்களைப் பாராட்டுவதாகக் கூறியதுடன், மெசியாவாகிய இயேசுவைபோல, துயருறும் மக்களுக்காக உதவுகிறார்கள் என்றும், கோவிட் நோய்த்தொற்றின்போது அவர்கள் ஆற்றிய பணி அளப்பரியது என்றும் கூறியுள்ளார்.
இச்சபையின் சகோதரிகள் அனைவரும் வானதூதர்களைப்போல வாழ்கிறார்கள், மக்களை காப்பாற்றி அவர்களைப் புதிய வாழ்விற்கு மீண்டும் கொண்டு வருகிறார்கள் என்றும் புகழாரம் சூட்டியுள்ள பங்குத் தந்தை அசி அவர்கள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வரலாற்றில் அவர்களின் பணியை நான் எப்போதும் பாராட்டியும், போற்றியும் வருகிறேன் என்றும் உரைத்துள்ளார்.
நாங்கள் அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பியுள்ளோம் என்றும், அவர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள பங்குத்தந்தை அசி அவர்கள், செவிலியர்கள் பணியிடத்தில் துன்புறுத்தப்படுகிறார்கள், குடும்பங்கள் மற்றும் முதியவர்களிடமிருந்து கடுமையான வார்த்தைகளை சகித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள், அவர்கள் நமது உடநலனுக்காகக் கடுமையாக உழைக்கிறார்கள் என்று கூறியுள்ளதுடன், அரசு அவர்கள் மீது அதிகளவில் அக்கறை கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இந்நாள் குறித்து உரையாற்றிய அருள்சகோதரி அல்வினா அவர்கள், இந்த நாளில் நான் கிறிஸ்தவ செவிலியர்களை ஊக்குவிக்கிறேன் என்று கூறி உற்சாகப்படுத்திதுடன், அவர்கள் குறைந்த சலுகை பெற்றவர்கள் என்பதை நான் அறிவேன், மேலும் பல வேளைகளில் அவர்கள் மருத்துவமனைகளில் தங்கள் மேலதிகாரிகளால் ஊக்கப்படுத்தப்படுவதில்லை என்ற தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார். (ASIAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்