தேடுதல்

சிலுவையை ஏந்தியுள்ள கிறிஸ்தவப் பெண் சிலுவையை ஏந்தியுள்ள கிறிஸ்தவப் பெண்   (ANSA)

தெய்வநிந்தனையின் பெயரில் பாகிஸ்தானில் கிறிஸ்தவர்மீது தாக்குதல்!

24 கோடியே 10 இலட்சம் மக்கள் வாழும் தெற்காசிய நாடான பாகிஸ்தானில் 1.59 விழுக்காட்டிற்கும் குறைவான கிறிஸ்தவர்களே உள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் தெய்வநிந்தனையின் பெயரில் இரண்டு கிறிஸ்தவ வீடுகள் மற்றும் ஒரு காலணி தொழிற்சாலைமீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ காலணித் தொழிற்சாலை உரிமையாளர் நசீர் மசிஹ் அவர்கள், முஜாஹித் காலனியில் உள்ள அவரது குடியிருப்பு பகுதியில் திருக்குரானின் பக்கங்களை எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 400-க்கும் மேற்பட்ட கும்பலால் தாக்கப்பட்டார் என்றும், மே 25, இச்சனிக்கிழமையன்று, இச்சம்பவம் நிகழ்ந்தது என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

இதுகுறித்து மே 26, இஞ்ஞாயிறன்று, யூகான் செய்தி நிறுவனத்திடம் கூறிய வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாநிலத்திலுள்ள ஹசாரா பிரிவின் அமைதிக் குழுத் தலைவர் நோஷர்வான் இக்பால் அவர்கள், நாங்கள் எங்கள் கிறிஸ்தவ சமூகத்திற்கு நீதி கேட்கின்றோம் என்றும், இம்மாதிரியான சோகங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

மசிஹ் அவர்கள், திருக்குரானை அவமதித்து, முஸ்லீம்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதன் வழியாக, மத வெறுப்பைப் பரப்பினார் என்றும், அமைதிக்குப் பங்கம் விளைவித்தார் என்றும், அவர்மீது முஹம்மது ஜஹாங்கீர் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் தெய்வநிந்தனைத் தொடர்பாக கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டதால், சர்கோதாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்கள், அவர்களில் பாதிபேர் கத்தோலிக்கர்கள் வேறு இடங்களுக்குத் தப்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை செய்பவர்களுக்குத் தூக்குத் தண்டனை உண்டு. ஆனால், அரசால் யாரும் இதுவரை தூக்கிலிடப்படவில்லை. மேலும் 24 கோடியே 10 இலட்சம் மக்கள் வாழும்  தெற்காசிய நாடான பாகிஸ்தானில், 1.59 விழுக்காட்டிற்கும் குறைவான கிறிஸ்தவர்களே உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 May 2024, 16:01