தேடுதல்

தனது சீடர்களுக்குப் படிப்பினைகள் வழங்கும் இயேசு தனது சீடர்களுக்குப் படிப்பினைகள் வழங்கும் இயேசு  

பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு : சமநிலைப்படுத்தும் கடவுளின் அன்பு!

இயேசுவின் அன்புக்கட்டளை வறியவர், துன்புறுவோர், துயருறுவோர், புறக்கணிக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், அடிமைப்படுத்தப்பட்டோர், உடல் உள்ள ஊனமுற்றோர் ஆகிய அனைவரையும் ஏற்று அன்புசெய்ய பணிக்கிறது.
பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு : சமநிலைப்படுத்தும் கடவுளின் அன்பு!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I.   திப 10:25-26, 34-35,44-48     II. 1 யோவா 4:7-10     III.  யோவா  15:9-17)

நம் இந்திய நாட்டில் தற்போது பொதுத்தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகின்றது. தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் வெறுப்பு, வன்முறை, மதப் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக செய்திகள் வருகின்றன. அதுவும் நாட்டை ஆளும் நமது பிரதமர் மோடியே எல்லைமீறி தரம் தாழ்ந்து மதப் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார் என்று பல்வேறு திசைகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி இராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மன்மோகன் சிங் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்ததாகவும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துகளை மறுபகிர்வு என்று கூறி பறித்து நாட்டிலும் அத்துமீறி ஊடுருவியவர்களுக்கும் வழங்கும் என்று கூறினார். மேலும், கடந்த காலங்களில் நாட்டில் அத்துமீறி ஊடுருவியவர்கள், அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு நாட்டின் வளம் மற்றும் செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கீட்டு கொடுத்ததாகவும் தெரிவித்தார். தேவைப்பட்டால் நாட்டில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தைக் கூட காங்கிரஸ் கட்சி பறித்துக் கொள்ளும் என்றும் கூறினார். அதுமட்டுமன்றி, குஜராத்தின் பனஸ்கந்தா மற்றும் சபர்கந்தா பகுதி கிராமப்புற மக்களின்  முக்கிய வருமானம் மற்றும் வாழ்வாதாரமாக பால் பண்ணை தொழில் உள்ளது. இங்குப் பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 55 விழுக்காடு பரம்பரை வரி விதிக்கப்படும். உதாரணமாக, உங்களிடம் 10 ஏக்கர் நிலம் இருந்தால், அதை உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் ஒப்படைக்க விரும்பினால், அதில் பாதியை அரசு கையகப்படுத்தும். அதேபோல, உங்களிடம் இரண்டு எருமை மாடுகள் இருந்தால், அவற்றை உங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்ல நீங்கள் விரும்பினால், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அதில் ஒரு எருமை மாட்டை அரசு பறித்துவிடும்" என்று காங்கிரஸ் கட்சியை தாக்கிப் பேசியுள்ளார். வாசகப் பெருமக்களே, இங்கே நாம் தனிப்பட்ட ஒரு கட்சியை ஆதரிப்பதாகப் பொருள்கொள்ள வேண்டாம். மாறாக நாட்டின் உயர்ந்த பொறுப்பிலிருக்கும் ஒரு தலைவர் இப்படி பேசுவது அவருக்கு உகந்ததல்ல என்பதுடன் இது மக்களிடையே வீணான பிரிவினைகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தும் என்ற ஆதங்கத்தில்தான் அவரின் கருத்துக்களை இங்கே முன்வைக்க விரும்புகின்றேன். மேலும் இத்தகையதொரு கருத்தை யார் கூறியிருந்தாலும் அது தவறுதான் என்பதையும் நம் மனங்களில் நிறுத்துவோம்.

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள், கடவுளின் அன்பு அனைவரையும் சமநிலைப்படுத்துகிறது என்ற கருத்தை முன்வைக்கின்றன. கடவுளின் பார்வை வேறு மனிதரின் பார்வை வேறு. மனிதர் புறத்தே பார்க்கின்றார், ஆனால் கடவுள் அகத்தே பார்க்கின்றார். மனிதர்தான், நீ ‘வேறு மதம் நான் வேறு மதம்’ என்று வேற்றுமைப் பார்க்கின்றனர். ஆனால் கடவுளின் அன்பு அனைத்துலக மக்களையும் ஒரே தளத்தில் ஒன்றிணைகிறது. கடவுளின் இந்த ஒன்றினணைக்கும் அன்பை புரிந்துகொண்டவர்கள் மத வேறுபாடுகளைக் கடந்து வாழ்கின்றனர். நம் இந்தியாவில் அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும்தான் மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதாக அறிகிறோம். ஆனால் இங்குதான் இஸ்லாமிய திருவிழாவைக் கொண்டாடும் இந்துக்களும், இந்துக்களின் திருவிழாவைக் கொண்டாடும் இஸ்லாமியர்களும் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நமது தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டைக்கு அருகிலிருக்கும் காசவளநாடு புதூர் கிராமத்தில் கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துமக்கள் அல்லாவுக்கு விழா எடுத்துக் கொண்டாடி வருகின்றனர் என்றும், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் மொஹரம் திருநாள் அன்று இந்த விழாக் கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வெளியாகியிருந்தது.

அவ்வாறே விழுப்புரம் மாவட்டம் மேல் நாரியப்பனூர் புனித அந்தோணியார் திருத்தலம் பற்றி நாம் அறிவோம். இங்கு நடைபெறும் ஆண்டுத் திருவிழாவில் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து மதங்களையும் சார்ந்தவர்கள் அணிதிரண்டு வந்து வேண்டுதல் செலுத்துகின்றனர். இந்தத் திருத்தலத்தின் வரலாறு ஒரு சிறப்புமிக்கது. இச்சிற்றூரில் பிற மதத்தை தழுவிய மூன்று ஆதிதிராவிட குடும்பங்கள் பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்தனர். இவர்களுள் குஞ்சான் - மொட்டச்சி என்னும் தம்பதியினர் பிள்ளை பெறுவதற்காக வேண்டுதலுடன் நீண்ட முடி வளர்த்துக் கொண்டனர் என்று இச்சிற்றூரின் வரலாறு விரிகிறது. ஆனால் பின்னர் ஒரு சம்பவத்தின் காரணமாக குஞ்சான் பாதிக்கப்பட்டதாவும், கனவில் ஒரு காட்சி கண்டு அடுத்த நாள் வழியில் ஓர் அந்தோனியார் சுரூபத்தைக் கண்டு அதை வாங்கிக்கொண்டு வந்து அதைத் தன்னுடைய நிலத்தில் ஒரு குடிசையைக் கட்டி அதனுள் அச்சுரூபத்தை வைத்து இந்து முறைப்படி பூசை செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. அவர்களுடன் அந்த இரண்டு ஆதிதிராவிட குடும்பத்தினரும் சேர்ந்து வழிபட்டுள்ளனர். விரைவில் குஞ்சான் குடும்பத்தாரும், அந்த இந்துக் குடும்பத்தாரும் பிள்ளைபேறு பெற்று மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர். பல இந்துக் குடும்பத்தினர் இதை அறிந்து அந்தோணியாரை “பதுவா” என்று அழைத்தனர். அதன்பிறகு அருள்தந்தையர்களின் வழிநடத்துதலில் அப்பக்தி முயற்சி சிறிது சிறிதாக வளர்ந்து இன்று மிகப்பிரமாண்ட விழாவாக நடைபெறுவதாக அதன் வரலாறு முடிகிறது. யாருக்கு, எப்போது, எதன் வழியாகத் தன்னை வெளிப்படுத்தவேண்டுமென கடவுளுக்குத் தெரியும், ஆனால் மனிதர்தான் மதியற்ற முறையில் தங்களுக்குள் மதத்தின் பெயரால் போர்களையும் பிரிவினைகளையும் ஏற்படுத்திக்கொண்டு அழிவுறுகின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் கொர்னேலியு என்னும் பிற இனத்தவர் பற்றி கூறப்பட்டுள்ளது. செசரியா நகரில் கொர்னேலியு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் இத்தாலியா எனப்பட்ட படைப்பிரிவில் நூற்றுவர் தலைவர். அவர் இறைப்பற்றுள்ளவர்; தம் வீட்டார் அனைவருடனும் கடவுளுக்கு அஞ்சி நடந்தவர்; மக்களுக்கு இரக்கச் செயல்கள் பல புரிந்தவர்; இடைவிடாது கடவுளிடம் மன்றாடி வந்தவர் என்று அவரைப்பற்றி நற்சான்று கூறப்படுகிறது. இப்படிப்பட்டவர் தூய ஆவியாரால் தூண்டப்பட்டு பேதுருவைச் சந்திக்கின்றார். அப்போது பேதுரு பேசத் தொடங்கி, “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" என்கின்றார். அதாவது, கடவுளை யார் நம்பினாலும் அவர்களுக்கு மீட்பு உண்டு என்கின்றார். பின்னர் கொர்னேலியுவின் இல்லத்திற்குச் சென்று அருளுரை ஆற்றும்போதுதான் இந்த அதிசயம் நிகழ்கிறது. அதாவது, பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கி வந்தது. பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையுடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்; ஏனென்றால், அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள். பேதுரு, “நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?” என்று கேட்கின்றார். ஆக, மீட்புப் பெற யாருக்கும் தடையில்லை. இறைநம்பிக்கை ஒன்றுதான் தேவை. அந்த ஆழமான இறைநம்பிக்கை கொர்னேலியுவுக்கும் அவர் குடும்பத்தார் அனைவருக்குமே இருந்தது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளிடமிருந்து வரும் அன்பு அனைவருக்குமானது என்பதை வலியுறுத்துகின்றார் யோவான். அன்பு கடவுளிடமிருந்து வருவதால், நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டுமென அறிவுறுத்துகின்றார். மேலும், கடவுள் அன்பாய் இருப்பதால், நாம் அனைவருமே வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார் என்றும் உரைக்கின்றார். "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" (காண்க யோவா 3:16) என்று இயேசு நிக்கதேமிடம் கூறிய அதே வார்த்தைகளைக் கூறி கடவுளின் அன்பு அவர்மீது நம்பிக்கைக்கொள்ளும் அனைவருக்கும் உரியது என்று எடுத்துக்காட்டுகிறார் யோவான். இறுதியாக, கடவுள் நம்மீது கொண்டுள்ள இந்த அன்பை நாமும் ஒருவர் மற்றவர்மீது வெளிப்படுத்துவதற்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்று நமக்குரிய பொறுப்பினையும் எடுத்துக்காட்டுகின்றார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் வார்த்தைகள் கடந்த வார நற்செய்தியின் தொடர்ச்சியாக அமைகின்றது. “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை“ என்று, தனது சீடர்களின் பாதங்களைக் கழுவியபிறகு கொடுத்த புதிய கட்டளையை இங்கு மீண்டும் நினைவுபடுத்துகின்றார் இயேசு. அவரின் இந்தக் கட்டளையை நாம் நிறைவேற்றவேண்டுமெனில் திராட்சைச் செடியாகிய அவரில் மிகுந்த கனிதரும் கொடிகளாக இணைந்திருக்க வேண்டுமென அழைப்பு விடுகின்றார். இதையே சுருக்கமாக 'என் அன்பில் நிலைத்திருங்கள்’ என்கின்றார். அடுத்து அவர் சொல்லும் கருத்து இந்த அன்பின் உச்சசத்தைக் காட்டுகிறது. "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில், தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்" என்று கூறுகின்றார் இயேசு. 'பணியாளர்’ அல்லது ‘ஊழியர்’ என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த பெயர்தான். இஸ்ரயேல் மக்களை வழிநடத்திய மோசே ஆண்டவரின் ஊழியர் என்று அழைக்கப்பட்டார் (காண்க. இச 34:5), அவருக்குப் பின்பு அம்மக்களை வழிநடத்திச் சென்று கானான் நாட்டில் குடியமர்த்திய யோசுவாவும் ஆண்டவரின் ஊழியராகக் கருதப்பட்டார் (காண்க. யோசு 24:29),. பிற்காலத்தில் இஸ்ரயேல் மக்களை 40 ஆண்டுகள் ஆட்சி செய்த தாவீது அரசரும் ஆண்டவரின் ஊழியர் என்றே அழைக்கப்பட்டார் (காண்க திபா 89:20). இறுதியாக, கடவுளின் ஊழியனாகத் புனித பவுலடியாரும் தன்னைக் காட்டிக்கொள்கிறார் (காண்க உரோ 1:1, தீத் 1:1, பிலி 1:2). ஆனால் இயேசு, “இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன், நண்பர்கள் என்பேன்” என்று உரைக்கின்றார். அப்படியென்றால் தலைவருக்கும் பணியாளருக்கும் இடையே ஓர் இடைவெளி இருக்கும், தலைவரிடம் விருப்பப்பட்டதையெல்லாம் பணியாள் பேசிவிடவும் முடியாது. எதனையும் உரிமையுடன் செயல்படுத்திவிடவும் முடியாது. மேலும் தலைவர் தவறு செய்யும் பட்சத்தில் பணியாள் அதனை உரிமையுடன் சுட்டிக்காட்டவும் முடியாது. எல்லாவற்றிலும் தலைவர் சொல்வதைக் கடைபிடிப்பதே ஊழியனின் தலையாயக் கடைமையாக இருக்கும். ஆனால் நண்பர்களுக்குக்கிடையே இவையெல்லாம் சாத்தியமே. இங்குதான் இயேசுவின் சமநிலையான அன்பு வெளிப்படுகிறது. இந்தச் சமநிலையான அன்பில்தான் உண்மையான உயிர்த்தியாகம் இருக்கும். இதனை உணர்த்தும் விதமாகவே, "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" என்கின்றார். சொன்னது மட்டுமல்லாது அதனை செயலிலும் நிறைவேற்றிக்காட்டினார்.

இரத்த உறவில் இருக்கும் புனிதத்தைவிட நட்பில் இருக்கும் புனிதம் சிறந்தது. மேலும் நட்பு என்பது நாடு, மதம், இனம், குடும்பம் மற்றும் உறவு கடந்தது. சவுல் அரசரின் மகன் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் இருந்த நட்பு இத்தகையதுதான். யோனத்தான் தன் தந்தையின்மீது மீது கொண்டிருந்த அன்பைவிட தாவீதின் மீது கொண்டிருந்த நட்பில்தான் புனிதம் சிறந்து விளங்கியது. இந்தப் புனித நட்பிற்காகத் தன் தந்தையைப் பகைத்துக்கொள்ளவும் அவன் தயங்கவில்லை. மேலும் தனது உயிர்நண்பன் யோனத்தான் போரிலே உயிர்துறந்தான் என்பதைக் கேள்வியுற்றதும் கதறியழுகின்றார் தாவீது. சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது நீ பொழிந்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ! (காண்க 2 சாமு 1:26). இதைத்தான் இன்றைய கவிஞர், 'நட்பைக்கூட கற்பைபோல எண்ணுவேன்' என்கின்றான். ஆக, இந்த வார்த்தைகள் வழியாக, அன்பின் உச்சநிலை என்பது பொருள்களைக் கொடுப்பதில் அல்ல, மாறாக அது ஒருவர் தம் உயிரையே கொடுப்பதில்தான் அடங்கியிருக்கின்றது என்பதையும் அதுவும் புனித நட்பில்தான் வெளிப்படும் என்பதையும் எடுத்துக்காட்டவே ‘நண்பர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் இயேசு. இந்தப் புனிதத்துவம் நிறைந்த நட்பு கனிகொடுப்பதில் வெளிப்பட வேண்டும் என்பதைக் காட்டவே, "நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்" என்று எடுத்துக்காட்டுகிறார் இயேசு.

இயேசுவின் அன்பு மிகவும் பரந்து விரந்தது, ஆழமானது. அது எல்லாரையும் உள்ளாகியது. அந்த அன்புக்கு முன்னால் எவ்வித வேறுபாடும் கிடையாது. அவ்வன்பு அனைத்தையும் கடந்தது. இயேசுவின் இந்த அன்பு கிறித்தவ மக்களை மட்டுமல்ல, அனைத்து மனிதரையும் அன்பு செய்ய பணிக்கிறது. அதாவது, ஏழையர் எளியவர், வறியவர், துன்புறுவோர், துயருறுவோர், புறக்கணிக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், அடிமைப்படுத்தப்பட்டோர், உடல் உள்ள ஊனமுற்றோர் ஆகிய அனைவரையும் ஏற்று அன்புசெய்ய அவரது அன்பு நமக்கு அழைப்புவிடுக்கிறது. ஆகவே, சவால்களும், சங்கடங்களும், தற்கையளிப்புகளும் நிறைந்த இந்த வகை பணிகளுக்கு நம்மை நாமே முழுமையாக அர்ப்பணிக்க வேண்டுமெனில், இயேசுவின் புதிய அன்புக் கட்டளையை கடைபிடித்து நாமும் அவரது உண்மை நண்பர்களாக வாழ வேண்டும். இதற்காக இந்நாளில் இறையேசுவிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2024, 13:57