தடம் தந்த தகைமை – யூதாவின் அரசனான யோராம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இஸ்ரயேல் அரசன் ஆகாபின் மகன் யோராம் ஆட்சியேற்ற ஐந்தாம் ஆண்டில் யூதாவின் அரசன் யோசபாத்தின் மகன் யோராம் யூதா நாட்டின் அரசனானான். அவன் தன் முப்பத்திரண்டாம் வயதில் அரசனாகி எட்டு ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி புரிந்தான். அவன் ஆகாபின் மகளை மணந்தவன்; ஆதலால், ஆகாபின் குடும்பத்தவரைப்போல இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்தான்; ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். ஆயினும், ஆண்டவர் தம் அடியான் தாவீதை முன்னிட்டு யூதாவை அழிக்க விரும்பவில்லை; ஏனெனில், அவர்தம் மைந்தராம் குல விளக்கை எந்நாளும் காப்பதாக அவருக்கு வாக்களித்திருந்தார்.
யோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, தங்களுக்கென ஓர் அரசனை நியமித்துக் கொண்டனர். ஆனால், யோராம் சாயிருக்குத் தன் தேர்ப்படைகள் அனைத்தோடும் சென்றான். ஏதோமியர் அவனையும் அவனுடைய தேர்ப்படை தலைவர்களையும் சூழ்ந்து கொண்டனர். அவன் இரவில் எழுந்து ஏதோமியரை வெட்டி வீழ்த்தினான். மக்கள் தம்தம் கூடாரத்திற்கு தப்பி ஓடினர். எனவே, இந்நாள் வரை ஏதோமியர் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்துகொண்டே இருக்கின்றனர். அதே காலத்தில் லிப்னாவும் கிளர்ச்சி செய்தது. யோராமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. யோராம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பதிலாக அவன் மகன் அகசியா அரசனானான்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்