தடம் தந்த தகைமை – செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள், (லூக் 6, 24) என்றார் இயேசு.
இந்த உலகம் எல்லாருக்கும் பொதுவானது. இங்கு எல்லாரும் இன்புற்று வாழ வேண்டுமென்பதே படைத்தவரின் நோக்கம். ஆனால் சிலர் கடவுளின் படைப்பைச் சூறையாடி, பெற்ற விளைவைப் பதுக்கி, உழைப்பவரை அடிமையாக்கி, உழைப்பிற்கும் தேவைக்குமேற்ற ஊதியம் வழங்காமல் தங்கள் வாழ்வை மட்டும் வளப்படுத்திக்கொண்டனர். இதனால் ஏற்றத்தாழ்வு தோன்றிற்று. செல்வர்கள் நல்லவர்கள் போலவும் ஏழையர் செல்லாக் காசு போலவும் நடத்தப்பட்ட அவலத்தில் எழுந்த அகச் சீற்றமே… “ஐயோ, கேடு” என்னும் இயேசுவின் ஆத்திரச் சொல்.
அளவுக்கு அதிகமான செல்வம் அநீதியானது. ஏனெனில் அது அநீதியாகச் சேர்க்கப்பட்டது. உழைப்பவர்க்குரிய ஊதியம் உரிய விகிதத்தில் கொடுக்கப்படாமல் அது இலாபமாக மாற்றப்படுகிறது. அது மட்டுமன்றி, அவ்வாறான செல்வம் சேரச் சேர, அடுத்து வாழும் மனிதரும், படைத்தக் கடவுளும் பாராமுக நிலைக்கு ஆளாகின்றனர். “பகிரப்படாத செல்வம் பாவமானது” என்ற புனித பேசிலின் பார்வை முற்றிலும் உண்மை
என நிரூபிக்கப்படுகின்றது. ஏழைகளின் கடின உழைப்புக்குக் கொடுக்காமல் சேர்த்த பணம், பணமல்ல, அது அவர்களது பிணம்.
இறைவா! பெறுவதெல்லாம் எனக்குத்தான் எனும் பேராசையின்றி, பகிர்ந்து வாழவே பெற்றேன், என்ற பண்பான உள்ளத்தைத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்