தேடுதல்

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் விண்ணரசைப் பெறுவர் நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் விண்ணரசைப் பெறுவர்  (©Renáta Sedmáková - stock.adobe.com)

தடம் தந்த தகைமை – நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர்

நீதியில் நிலைத்தப் பணிகளின் பாதையிலே நிறைய பேர் நடந்ததில்லை, அவ்வாறு நடந்தாலும் அவர்களை வீழ்த்திய வரலாறுகளே உலகில் ஏராளம்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது, என்றார் இயேசு.

நீதியில் நிலைத்தப் பணிகளின் பாதையிலே நிறைய பேர் நடந்ததில்லை, அவ்வாறு நடந்தாலும் அவர்களை வீழ்த்திய வரலாறுகளே உலகில் ஏராளம். நீதிக்காக ஒருவர் துன்புறுத்தப்படுகிறார் எனில் அவர் கடவுளுக்காகத் துன்புறுகின்றார் என்றே ஏற்க வேண்டும். ஏனெனில் கடவுளின் பெயர் 'அன்பு' என்பதுபோல அவரது இன்னொரு பெயர் 'நீதி'. இயேசுவின் இயக்கம் சார்ந்த ஒவ்வொருவரும் அவரை நேசிப்பது போல நீதியையும் நேசிக்கக் கடன்பட்டவர்கள். அந்த நேசித்தல் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் நறுமணமாய் வீச வேண்டும்.

தென் அமெரிக்காவில் எல்சால்வேடோர் மறைமாவட்டப் பேராயராகப் பணியாற்றிய ஆஸ்கர் ரொமேரோ, உரிமை பறிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் நீதிக்காகக் குரல் உயர்த்தினார். அரசும் திரு அவையும் கைகோர்த்து பல இடர்களை அவருக்குத் தடைகளாகக் கொடுத்தன. நீதிக்காக உழைப்பது புனிதமானது என அவர் உளமார உணர்ந்தார். 1980, மார்ச் 24 அன்று அவர் சுடப்படுவதற்கு முந்தைய சில நிமிடங்களுக்கு

முன்பாக 'நியாயத்திற்காகச் சாவது ஓர் அருள்அடையாளம். நீதி காக்கும் பணியில் உயிரையும் இழக்கத் துணியும் மனிதர்கள் நமக்குத் தேவை' என மக்கள் மத்தியில் மறையுரையாற்றினார். அவரது கொலை அந்த மக்களுக்கான நீதியைக் கொணர்ந்தது. அநீதியை எதிர்க்க முடிந்தவர் அதை எதிர்க்காவிடில் அநீதிக்குத் துணை போகிறார். இறைவா! நீர் நீதி வழியாக சமவுலகை உருவாக்க விரும்புபவர். அந்த நீதிப் பார்வையை என் இதய விழிகள் ஏந்தி வாழ வரம் பொழியும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2024, 12:17