தடம் தந்த தகைமை – என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
“எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்” என கேட்டுக்கொண்டார் இயேசு.
பெருங்குற்றம் இழைத்துத் தண்டனை பெறுவதை ஏற்கலாம். எக்குற்றமும் செய்யாமல் கொடும் சிலுவைச் சாவை ஏற்பதை நினைந்து இயேசு துக்கம் கொண்டார். கொடிய சித்திரவதைகளை நினைக்க நினைக்க அவரது மனம் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்தது. ஆயினும் தந்தையின் திருவுள நிறைவேற்றலில் அவர் பின்வாங்கவில்லை. அந்நேரத்திலும் அவர் தந்தையை மன்றாடியதோடு, தம் சீடர்களையும் விழித்திருந்து மன்றாட வேண்டியனார். அது சாவையும் துணிந்து ஏற்கும் பலம் கேட்பதாகும்.
இயேசுவின் ஆழ்துயரங்களுக்குப் பல காரணங்கள் உண்டு. 1. உறவும் ஊரும் தன்னைப் புரியவில்லை 2. உடன் சீடர்களும் உணரவில்லை 3. ஆளும் வர்க்கத்தின் கூட்டுச் சதி; 4. சாமானிய மக்களும் திசை திருப்பப்படல் 5. தமது தாய் மற்றும் சீடர்களின் அடுத்தகட்ட வாழ்வு 6. தாம் எதிர்கொள்ளவுள்ள உடல் - உள – அவமானமிக்கச் சித்திரவதைகள் 7. தந்தையும் கைவிட்டு விட்டாரோ எனும் எண்ணம். இவை எல்லாம் சேர்ந்து இயேசுவைத் துக்கத்தின் பாதாளத்தில் வீழ்த்தின. இதுமாதிரியான துயரங்கள் ஒன்றாய் நின்று நம்மையும் வீழ்த்துகையில் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் நகர்ந்தால் நம் கடவுள் நம்மோடு. ஒவ்வொரு துன்பமும் நம் வாழ்வையும் பணியையும் ஊக்கப் படுத்துகின்றன.
இறைவா! என்னதான் துயரம் வந்தாலும் உம் துணை நம்பித் துணிந்து என்னை இழக்கும் மனவுறுதி தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்