தடம் தந்த தகைமை - கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது என்றார் இயேசு (லூக் 16,13).
சீடத்துவத்தின் படிநிலைகளுள் முதன்மையானது பணிவிடையாளராவது. அடுத்ததாக அப்பணிவிடையைக் கடவுளுக்குரியதாக மாற்றுவது. பணிவிடையாளர் என தன்னை ஒருவர் பகிரங்கப்படுத்திவிட்டு, தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தனக்குச் சாதகமானவர்களுக்கும் அதனைத் தொடர்வாரெனில் அது பணிவிடையல்ல, பாசாங்கு. அவ்வாறே பணிவிடை வழியாகத் தன் வசதி, வாய்ப்பு, வருமானம், செல்வாக்கு போன்றவற்றைப் பெருக்கி சுகபோகத்தில் புரள்வது இயேசுவின் பார்வையில் இழிவானது. பணிவிடை, பணத்தை ஏமாற்றி சேர்ப்பதற்கான வழியல்ல. அது தன்னைப் பணிவான பணிகளால் பலியாக்குவது. கடவுள் பெயரால் பணியாளராகி, தன் பணிவிடையைப் பணக்காரர்களுக்கும், பதவி நாற்காலிகளுக்கும், பணம் புரளும் நிறுவனங்களுக்கும் புரிகையில் பணி இலக்கு மாறுகிறது. பணிக்காக அழைத்தவர் புறக்கணிக்கப்படுகிறார். கடவுளுக்கான பணி என்பது சமூக விளிம்பில் தூக்கி எறியப்பட்டு வாழ்வில் எழ இயலாமல் வீழ்ந்து கிடப்போர்க்கானது. பிறரது பாரம் சுமக்கும் எவரும் இவ்வுலகில் பயனற்றவர் அல்ல.
இறைவா! வெறுமைப்படுத்தலில் எனை முழுமைப்படுத்தி உம் பணியாளாய் உயிருள்ளவரை வாழ வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்