தேடுதல்

இரயில் விபத்து இரயில் விபத்து   (AFP or licensors)

இரயில் விபத்தில் சமயங்களை மீறிய மக்களின் உதவும் நல்லெண்ணம்

எங்களுடைய இரயில்களில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்படும். இது போன்ற விபத்து நேரிடும்போது பலர் காயமடைவதற்கு வாய்ப்புள்ளது.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மோசமான இரயில் விபத்து குறித்து வத்திக்கான் வானொலி நேர்காணலில் உரையாற்றிய கொல்கொத்தா உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு தாமஸ் டி'சோசா அவர்கள், இந்நிகழ்வு மக்களிடையே உண்மையான ஒத்துழைப்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியதாகவும், வெவ்வேறு மத நம்பிக்கை கொண்ட மக்கள் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஒருவருக்கொருவர் உதவியதாகவும் தெரிவித்தார்.

கடந்த திங்கள்கிழமையன்று, மேற்குவங்க மாநிலத்தில் சரக்கு மற்றும் பயணிகள் இரயில்கள் ஒன்றோடு ஒன்று  மோதிக்கொண்ட விபத்தில் 25 உடல்கள் இடிபாடுகளுக்கு இடையே  மீட்கப்பட்டதாகவும் 50-ம் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு மோசமான விபத்து என்று குறிப்பிட்ட பேராயர் டி'சோசா அவர்கள், விபத்து  நடந்த நாள் இஸ்லாமிய மக்களின் பக்ரீத் திருவிழா நாள், அவர்கள் அனைவரும் தொழுகையில் இருந்த நேரம், ஆனாலும் விபத்து சத்தம் கேட்டதும் விரைவாக தங்கள் தொழுகையை முடித்துவிட்டு வந்து மீட்புப் பணியில் உதவியதாகவும், இரயில்வே மீட்புக்குழுவினர் வருவதற்கு முன்பே கிராம மக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.

தில்லியிலிருந்து அரசுப் பிரதிநிதிகளும், மாநிலத்தின் முதலமைச்சரும் உடனடியாக விபத்து நடந்த பகுத்திக்குச் சென்று பார்வையிட்டதாகக் கூறிய பேராயர் டி'சோசா அவர்கள், எங்களுடைய இரயில்களில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பிக் காணப்படும் என்றும், அதனால், இது போன்ற விபத்துக்கள் நேரிடும்போது, பலர் காயமடைவதற்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட துயரமான சூழல்களில் ஒருவருக்கு ஒருவர் உதவும் மக்களின் நல்லெண்ணம் தெளிவாகத் தெரிகிறது என்று கூறிய பேராயர்,  மக்கள் தங்கள் சொந்த நலனுக்காகப் பிறரை காப்பாற்றவில்லை என்றும், சூழலுக்கு ஏற்றவாறு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்திருக்கிறார்கள் என்றும், இதுவே மனித சமுதாயத்தின் அழகாகவும், விபத்து நடந்த இடத்தில் இத்தன்மை தெளிவாகத் தெரிந்ததாவும் கூறினார்.

மேலும், இரயில் விபத்தில் உயிரிழந்த அனைவரின் ஆன்ம இளைப்பற்றிக்காக செபிப்பிதாகக் கூறிய பேராயர் டி'சோசா அவர்கள், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பவும் இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்தார்.

நேர்காணலின் இறுதியில் வத்திக்கான் வானொலிக்கு நன்றி தெரிவித்த பேராயர் அவர்கள், உலகின் ஒரு மூலையில் நடப்பது பிறரைப் பாதிக்கிறது என்றும், நாம் அனைவரும் அவ்வழியில் தொடர்புடையவர்கள் என்றும், இந்த அக்கறைக்காகவும், உடனிருப்புக்காகவும் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2024, 15:16