தேடுதல்

கர்தினால் Pierbattista Pizzaballa கர்தினால் Pierbattista Pizzaballa   (ANSA)

காசாவில் மறுசீரமைப்பு மற்றும் மக்களை மீண்டும் கட்டி எழுப்புவது அவசியம்!

கர்தினால் Pizzaballa : தொடர் இருளில் இருக்கும் மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கும் அனைவருடனும் திருஅவை இணைந்து செயல்பட வேண்டும்.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

காசாவில் இத்தருணம் மிகவும் வலி நிறைந்தது, நீண்ட நாட்களாகவே நாங்கள் இரவில் வாழ்கிறோம் என்றும், ஆனால் இந்த இரவுகள் விரைவில் முடிவடையும் என தான் நம்புவதாகக் கூறிய எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa அவர்கள், நன்மை செய்ய  நினைக்கும் அனைவருடனும் திருஅவை இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இஸ்ரேல், காசா, மற்றும் மேற்கு கரை பகுதிகளின் நிலைமை குறித்து வத்திக்கான் வானொலிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறிய கர்தினால் அவர்கள், போரினால் காசா நகரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், பலியானவர்கள் ஏராளம் என்பதால், சரியான புள்ளிவிவரங்களை அளிப்பது கடினமென்றும், இதில் பொதுமக்களின் உயிரிழப்புகள் அதிகம் என்பது உண்மை என்றும் தெரிவித்தார்.

இச்சூழலில் காசாவின் தற்போதைய நிலைகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கர்தினால் Pizzaballa அவர்கள், காசா தற்போது வடக்கு, தெற்கு அதாவது, இரஃபா மற்றும் காசா நகரங்களுக்கு இடையில் பிரிந்துள்ளதாகவும், முன்பு வடக்கிலிருந்து மனிதாபிமான உதவிகள் வந்ததுபோல் இப்போது வர இயலாத சூழல் உருவாகியுள்ளதால், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்திருப்பதாகவும், இதை பேச்சுவார்த்தையின் வழியாக முடிவுக்குக் கொண்டுவர அரசியல் கட்சிகளுக்கிடையே உண்மையான விருப்பம் இருப்பதாகத் தனக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.

இச்சூழலைக் கடந்து சுமூகமான வாழ்வை மக்களுக்காக எவ்வாறு  கட்டியெழுப்ப முடியும் என்ற கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் Pizzaballa அவர்கள், போர் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இதனுடைய பாதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட  அதிர்ச்சியின் விளைவுகளைப் புரிந்துகொள்ள கால அவகாசம் வேண்டுமென்றும், மறுசீரமைப்பு மற்றும் மக்களை மீண்டும் கட்டி எழுப்புவது அவசியமான ஒன்று என்றும், அதை உறுதியாகத் தான் உணர்வதாகவும் தெரிவித்தார்.  

மேலும், யாரும் போரை விரும்பவில்லை என்றும், ஆனால் அதை தடுக்க இயலாத சூழல் உள்ளது என்றும் தன வேதனையை வெளிப்படுத்திய கர்தினால் Pizzaballa அவர்கள், ஒவ்வொரு நிலப்பரப்பும் பதட்டமாகவே உள்ளதால், இது மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், லெபனானும் காசாவாக மாறும் ஆபத்து உள்ளதாகக்  கூறினார்.

இந்த ஆபத்துகளுக்கிடையே, கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கை பற்றிய கேள்விக்கு பதிலளித்த கர்தினால் அவர்கள், கிறிஸ்தவர்கள் ஒரு தனிக்குழு அல்ல; அவர்களும் மற்ற அனைவரோடும் சேர்ந்துதான் வாழ்கிறார்கள் என்றும், காசாவிலும் மேற்கு கரைப் பகுதிகளிலும் நிலைமை மோசமாக இருப்பதால் பொருளாதாரம், மற்றும் வேலைவாய்ப்புகள் முடங்கிப்போய் குடியேற்றங்கள் அதிகமாகியிருப்பது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இத்தருணத்தில் அனைத்துலக சமுகத்தின் பங்களிப்பு எதுவாக இருக்கவேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் அவர்கள், அமைதியை ஏற்படுத்துவது என்பது வெகுதொலைவில் உள்ள குறிக்கோளாகத்  தனக்குத் தோன்றுவதாகவும், அனைத்துலகச் சமூகம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நிகழும் மோதலைத் தடுக்க முதன்மையாக செயல்பட வேண்டும் என்றும், உறுதியான போர் நிறுத்த உடன்பாட்டிற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இத்தனைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனிதரின் நம்பிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் அவர்கள், நீண்ட நாட்களாகவே இருளில் வாழும் எங்களின் இக்கட்டானச் சூழல்களில் திருஅவை பங்கெடுக்க வேண்டுமென்றும்,  நன்மை செய்ய முயலும் அனைவருடனும் இணைந்து குறிப்பாக, தடைகள் வரும்போது அதைத்  தகர்த்தெறிய திருஅவை கரம் கோர்க்கவேண்டுமென்றும், அது நமது நம்பிக்கையின் அடிப்படையில் அமைய ஒவ்வொருவரும் முயல வேண்டுமென  கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2024, 12:08