தேடுதல்

பெத்லகேமின் குழந்தைகள் மருத்துவமனையில் கர்தினால் Zuppi பெத்லகேமின் குழந்தைகள் மருத்துவமனையில் கர்தினால் Zuppi  

குழந்தைகளின் துன்பம் என்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது

காசாவில் குழந்தைகளுக்கு சாத்தியமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

பெத்லகேமில் கடந்த 71 ஆண்டுகளாக  இயங்கிவரும் காரித்தாஸ் குழந்தைகள் மருத்துவமனையை ஜூன் 15ஆம் தேதியன்று நேரில் சென்று பார்வையிட்ட இத்தாலியின் Bologna உயர்மறைமாவட்டப் பேராயரும், இத்தாலிய ஆயர்கள் பேரவையின் தலைவருமான கர்தினால் Matteo Zuppi அவர்கள், நடந்துவரும் வன்முறைகளுக்கு மத்தியில் குழந்தைகள் அனுபவித்து வரும் துன்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும், காசாவில் போர் நிறுத்தம் அவசியம் வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

குழந்தைகளைச் சந்தித்தபோது மருத்துவமனையின் செய்தி அலுவலகத்தைச் சேர்ந்த ஷிரீன் காமிஸ் அவர்கள் கர்தினாலிடம் உரைக்கையில், போரினால் மக்கள்  தங்கள் குழந்தைகளை சிகிச்சைக்காக அழைத்து வருவதில் ஏற்படும் கடினமானச் சூழல்களையும், போர் துவங்கிய முதல் மூன்று மாதங்களில், ஏறக்குறைய 7000 குழந்தைகள் இஸ்ரேலிய சோதனைச் சாவடிகளைக் கடந்து அவர்களுக்கான மருத்துவ பராமரிப்புக்களைப் பெற முடியாமல் போன சூழல்களையும் விளக்கினார்.

மேலும், இந்தப் போர் ஏற்கனவே உள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது என்றும், தடைபட்டுப்போன சுற்றுலா மற்றும் புனிதப் பயணங்கள் மூலம் வருமானம் இழந்த பல குடும்பங்களால் முறையான மருத்துவ வசதிகளைப் பெற முடியவில்லை என்றும் கர்தினால் Zuppiயிடம் விளக்கினார் ஷிரீன் காமிஸ்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் கூறிய  கர்தினால் அவர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மருத்துவமனை ஊழியர்களையும் சந்தித்துப் பேசினார்.

போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் துன்பங்களை, இரக்கத்துடனும் அக்கறையுடனும் சந்திக்கும் இடமாக இம்மருத்துவமனை அமைந்திருப்பதாகக் கூறிய கர்தினால் Zuppi அவர்கள், குழந்தைகளுக்கான தேவைகளை அவர்கள் உரிமையுடன் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களின் துன்பம் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, இதைப் பிறருக்கு  உணர்த்திட நாம் உழைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அக்டோபர் மாதத்தில் இஸ்ரேலிய குழந்தைகளின் இறப்பையும், கடந்த எட்டு மாதங்களாக காசாவில் பாலஸ்தீனிய குழந்தைகளின்  உயிரிழப்புகளையும் மேற்கோள் காட்டிய கர்தினால் அவர்கள், மோதல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளையும் நினைவுகூருவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், காஸா மருத்துவமனைகளில் போரினால் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே நீக்கப்படும் துயரமான அனுபங்களை நோயாளிகளிடமிருந்து கேட்டறிந்த கர்தினால் Zuppi, இக்குழந்தைகளுக்கு சாத்தியமான எதிர்காலத்தை உருவாக்க நாம் அனைவரும் உழைக்கவேண்டும் என்றும், அவர்களின் வலி நிறைந்த கண்களை உற்று நோக்கும்போது நம் கடமைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார்.

மேலும், வெறுப்பு, வன்முறை மற்றும் பிறரின் துன்பங்களை அக்கறையுடன் மதிக்கத் தவறுதல் போன்றவை அனைத்தும், குழந்தைகள் மத்தியில் மேலும் வன்முறைகள் அதிகரிக்க வழிவகுக்கின்றன என்றும், குறிப்பாக, அப்பாவி உயிர்களைப் பறிக்கின்றன என்றும் தன் எண்ணத்தைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் அவர்கள், இந்த வலிகளைப் புரிந்துகொண்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஒன்றுபட்ட அன்புடன் எதிர்கொள்வதும், அவர்களுடன் உடனிருந்து உதவி செய்வதும் காலத்தின் கட்டாயம் எனவும், போர் நிறுத்தத்திற்காகவும் அதற்கான உரையாடலைத் துவங்குவதற்கான சாத்தியக் கூறுகளுக்காகவும் மனதார வேண்டுவதாகவும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2024, 14:44