தேடுதல்

இந்திய ஆயர்கள் இந்திய ஆயர்கள் 

அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க வேண்டுகோள்

அனைத்து குடிமக்களுக்கும் சுதந்திரம், நீதி, சமத்துவம், மற்றும் சகோதரத்துவத்தை உறுதி செய்யவும், அரசியலமைப்பு சார்ந்த மதிப்பீடுகளை நிலைநிறுத்த விடாமுயற்சியுடன் செயல்படவும் கத்தோலிக்க இந்திய ஆயர்கள் பேரவை அரசுக்கு அழைப்பு.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

அரசியலமைப்பு சார்ந்த மதிப்பீடுகளின்படி அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்துவதன் மூலம், அனைவரையும் உள்ளடக்கிய புதிய பதவிக்காலமாக இவ்வாட்சி அமைய வேண்டும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள், கடந்த ஜூன் 9ஆம் தேதி மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்ற திரு நரேந்திர மோடி அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நடந்து முடிந்த இந்திய பாரளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பட்ட அறுதிப் பெரும்பான்மை கிடைக்கப்பெறாத நிலையில், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 293 இடங்களைப் பெற்ற பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த திரு நரேந்திர மோடி அவர்கள், மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்ட அறிக்கையில், அனைத்து குடிமக்களுக்கும் சுதந்திரம், நீதி, சமத்துவம், மற்றும் சகோதரத்துவத்தை உறுதி செய்யவும், அரசியலமைப்பு சார்ந்த மதிப்பீடுகளை நிலைநிறுத்தவும் விடாமுயற்சியுடன் செயல்படவேண்டும் என்றும் புதிய கூட்டணி  அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தத் தேர்தல் மக்களாட்சி நெறிமுறைகளின் வலிமையை எடுத்துக்காட்டுவதாக தெரிவித்துள்ள ஆயர்கள், இக்கூட்டணி அரசு இந்திய சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காகவும், குறிப்பாக விளிம்பு நிலை மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்காக உறுதியுடன் பணியாற்றுவது அவசியம் என்றும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அனைத்து அரசியல் கட்சிகளின் ஆர்வமான பங்கேற்பை பாராட்டிய ஆயர்கள், இத்தேர்தல்  இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் துடிப்பை வெளிப்படுத்துவதாகக் கூறினர்.

2014ஆம் ஆண்டில் கிறித்தவர்களுக்கு எதிராக 147 வன்முறைகள் நடைபெற்றுள்ளதையும், இவ்வெண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 599 ஆக உயர்ந்துள்ளதையும் தெரிவிக்கும் பதிவுகள், வடகிழக்கில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாகாலாந்து, மேகாலயா மற்றும் மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜகவின் கூட்டணி கட்சிகளால் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற இயலாமல் போனதும், மற்றொரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏற்பட்ட தோல்வியும் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறைகளால் பாரதிய ஜனதா அரசின் மீது மக்கள் கோபமடைந்திருப்பதையும்  வெளிப்படுத்துகின்றன என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

இது இந்திய மக்களாட்சித் தத்துவத்தின் வெற்றி என்றும், முகம் தெரியாத இந்திய வாக்காளர்களின் வெற்றி என்றும் பார்க்கப்படும் இத்தேர்தல் அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ ஆட்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது எனவும் அரசியல் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2024, 14:27