மெய்தி கிறிஸ்தவர்கள் சார்பாக குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு!
ஜெயந்த் ராயன், வத்திக்கான்
மெய்தி இன சிறுபான்மை கிறிஸ்தவர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் நம்பிக்கையை பின்பற்றுவதில் எவ்வகையிலும் இடையூறு ஏற்படாது என்பதற்கு இந்திய அரசும்,மாநில அரசும் தேவையான பாதுகாப்பையும் வாக்குறுதியும் வழங்க வேண்டும் என்றும், மதச் சுதந்திரம் என்பது மதச் சார்பற்ற இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்பதை உறுதிசெய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளது மணிப்பூர் அனைத்துக் கிறிஸ்தவக் கூட்மைப்பு.
மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தின் கிறிஸ்தவக் குழுக்கள் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கூட்டாக ஜூன் 26, இப்புதனன்று, சமர்ப்பித்த கோரிக்கை மனுவில், பூர்வ இந்து மற்றும் மெய்தி இன மக்களிடையே வாழும் சிறுபான்மை மெய்தி கிறிஸ்தவவர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்த வேண்டுமென்றும், ஏறக்குறைய 35,000 மெய்தி இன கிறிஸ்தவர்கள் இதனால் துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்கோரிக்கை மனுவில் மெய்தி இன கிறிஸ்தவர்கள் தங்கள் இனத்தைச் சார்ந்த மக்களிடமிருந்தே வன்முறையை எதிர்கொள்வதாகவும், கலவரம் மற்றும் வன்முறைகள் துவங்கியதிலிருந்து, 360-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 249 வழிபாட்டுத் தலங்கள் மெய்தி சிறுபான்மை கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்த மெய்தி சிறுபான்மை கிறிஸ்தவர்கள் இன்னும் கிறிஸ்தவத்தை தங்கள் நம்பிக்கையாக கடைபிடிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து அவர்கள் அச்சுறுத்தலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர் என்றும் அக்கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், வழிபாட்டுத் தலங்களை மீண்டும் கட்டியெழுப்பவும், மக்களிடையே ஒற்றுமையை மீட்டெடுக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டி குடியரசுத்தலைவரை வலியுறுத்தும் அக்கோரிக்கை மனு, இந்த தேவாலயங்களின் புனரமைப்பு நெகிழ்ச்சியின் அடையாளமாக செயல்படும் என்றும், இம்முயற்ச்சி பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநாட்டும் என்றும் கூறுகிறது.
மெய்தி கிறிஸ்தவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியது என்று குறிப்பிட்ட அருள்பணியாளர் ஒருவர், அவர்கள் இந்து சமய மெய்தி இன மக்களுக்கும், குக்கி இன மக்களுக்குமிடையே சிக்கித் தவிக்கிறார்கள் என்றும், ஒரு குழு அவர்களின் இனத்திற்காக அவர்களைத் தாக்குகிறது, மற்றொன்று அவர்களின் நம்பிக்கைக்காக அவர்களைத் தாக்குகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், தன் கருத்தை UCA செய்தியிடம் பகிர்ந்துகொண்ட அவ்வருள்பணியாளர், மத்திய மாநில அரசுகள், மெய்தி சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தாவிட்டால் அவர்கள் தங்கள் நம்பிக்கையைக் கடைப்பிடித்து வாழ்க்கையை தொடர முடியாது என்றும் கூறினார்.
இக்கோரிக்கை மனுவின் நகல்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்