தேடுதல்

 காசாவில் போர் பாதிப்புகள் காசாவில் போர் பாதிப்புகள்   (AFP or licensors)

போரை நிறுத்த துணிவுள்ள தலைவர்கள் தேவை!

அடிப்படை உரிமைகளையும், தேவையான மனிதாபிமான உதவிகளையும் மக்கள் இழந்தால், அனைவரும் ஏழைகளாக்கப்படுவர்.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்காகவும் குறிப்பாக, பிணையக்கைதிகளை விடுவிக்கவும், மனிதாபிமானப் பணியாளர்களுக்காகவும் நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர் அயர்லாந்து ஆயர்கள்.

இப்போரினால் அப்பாவி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருப்பதாகத் தெரிவித்த ஆயர்கள், மனிதாபிமான நிறுவனங்களைச் சார்ந்த ஊழியர்களின் தன்னலமில்லா உயிர்காக்கும் பணியில், காசாவிற்கு வழங்கப்படும் முக்கிய உதவிகள்  தடையின்றி கிடைக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் நிகழும் உயிரிழப்பைத் தடுக்க இது வழிவகுக்கும் என்றும் கூறினர்.

Trócaire என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் தரவுகளை மேற்கோள் காட்டிய ஆயர்கள், இப்போரினால் இதுவரை 37,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 15,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 83,000க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும், 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பதாகவும் தங்கள் வேதனைகளை தெரிவித்தனர்.

இந்தப் போர் 'மனிதகுலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்' என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய அயர்லாந்து ஆயர்கள், அடிப்படை உரிமைகளையும், தேவையான மனிதாபிமான உதவிகளையும் மக்கள் இழந்தால், அனைவரும் ஏழைகளாக்கப்படுவர் என்று வேதனை தெரிவித்தனர்.

மனிதாபிமான நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முயற்சிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னெடுப்பை வரவேற்ற ஆயர்கள், இப்புனித பூமியின் மக்களை, மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களை வழிநடத்த தகுந்த தலைவர்கள் தேவை என்றும், இப்பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவந்து மக்களின் துயர் துடைக்க, அவர்களின் மாண்பை மதிக்கும் மற்றும் அவர்களின் முன்னுரிமைக்காக உழைக்கும் துணிவுள்ள தலைவர்கள் தேவை என்றும் வலியுறுத்தினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2024, 15:44