விடை தேடும் வினாக்கள் - நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், “நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்” என்றார் (யோவா 6:66-69).
நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?”
இயேசு தன் சீடர்களை நோக்கி உருக்கத்துடன் கேட்ட இந்தக் கேள்வியை இன்று நம்மை நோக்கிக் கேட்பதாக எடுத்துக்கொண்டோமானால், நம் பதில் என்னவாக இருக்கும்?. இன்றைய நாள்களில் பல்வேறு காரணங்களுக்காக இறைவனைவிட்டு, ஆலய வழிபாடுகளைவிட்டு, இறைமதிப்பீடுகளை விட்டுப் பிரிந்துபோகும் மனிதரின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்கும் இளையோரின் எண்ணிக்கை குறைகிறது. இறைபக்தி இல்லாமல், செபம் இல்லாமல், உலக நாட்டங்களில் ஈடுபட்டு வாழும் மனிதர் அனைவரும் இயேசுவை விட்டுப் பிரிந்து செல்கின்றனர். இந்த ஒரு பின்னணியில்தான் நம் கடமை குறித்த கேள்வி எழுகின்றது.
திபேரியக் கடலுக்கு அருகே இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்தபின், அவர் ஆற்றிய நீண்ட உரையைக் கேட்டு, 'இவரைப் பிடித்துச் சென்று அரசராக்கி விடலாம்!' என முன்வருகிறார்கள் மக்கள். ஆனால், இயேசு கூறிய, “எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்”, என கூறியதை பலரால் ஜீரணிக்க முடியவில்லை. இது ஒரு மிதமிஞ்சிய பேச்சாக பலருக்குத் தெரிந்தது. 'இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று சொல்லி அவரிடமிருந்து விலகிச் செல்கின்றனர் பலர். அப்போதுதான் தன் நெருங்கிய சீடர்களை நோக்கி, நீங்களும் போய் விடப்போகிறீர்களா? என்ற கேள்வியை முன்வைக்கிறார் இயேசு.
என்னவொரு வேடிக்கையான நிலை. தங்களுடைய வயிற்றுக்கு உணவு கிடைக்க வேண்டும் என நினைத்து, அவரை அரசராக்க நினைத்த மக்கள், அவர் அவர்களுடைய ஆன்மாவுக்கு உணவு தருகின்ற பேரரசர் என்று கண்டவுடன், அவரை விட்டு விலகிச் செல்கின்றனர்!'
கண்களைக் கசியவைக்கும் வார்த்தைகளான, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களா!” என்பதை இயேசு முன்வைக்கும்போது, நாம் எதற்காக இயேசுவின் பின்னால் செல்கிறோம் எனும் கேள்வி நமக்குள் தானாகவே எழுகின்றது. நமது வாழ்விலே பல வேளைகளில் இயேசுவின் போதனைகளை ஏற்றுக்கொள்வது மிகக் கடினம் என்றோ, அல்லது இதைக் கடைப்பிடிப்பது இயலாது என்றோ நாம் எண்ணியதில்லையா? நிச்சயமாக எண்ணியிருக்கிறோம். இயேசுவின் போதனைகள் பலவும், எடுத்துக்காட்டாக, மன்னிப்பைப் பற்றிய அவரது போதனை, கண்ணால் இச்சையுடன் நோக்குவதே விபச்சாரத்துக்குச் சமம் என்றது, அனைத்தையும் துறந்துவிட்டு என்னைப் பின் செல் என்றது போன்றவை மிகக் கடினம் என்று தோன்றியிருக்கின்றன. இத்தகைய நேரங்களில் நாம் என்ன செய்திருக்கிறோம்?.
மனித வாழ்க்கையில் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தருணங்கள் அவ்வப்போது எழுவதுண்டு. தங்கள் வாழ்க்கைத் துணை பற்றி, ஒரு குறிப்பிட்ட படிப்புத் துறை பற்றி, நிலையான ஒரு தொழில் செய்ய விரும்புவோர் முன்னோக்கிய பாதை பற்றி, இப்படி பல உறுதியான முடிவுகள் எடுக்கப்பட்ட வேண்டியிருக்கிறது. அதுபோலவே, இயேசுவைப் பின்செல்வோரும் தங்கள் வாழ்க்கை முறை பற்றி உறுதியான முடிவெடுக்க அழைக்கப்படுகிறார்கள். இயேசுவை ஏற்பதா வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்க வேண்டிய தருணம் அன்று வந்தது. அப்போது பலர் இயேசுவை விட்டுச் சென்றுவிட்டார்கள். அவ்வாறு சென்றவர்களைக் கட்டாயப்படுத்தித் தம்மோடு இருக்க இயேசு அழைக்கவில்லை. மாறாக, தம்மோடு நெருங்கிப் பழகி, தம் போதனைகளின் உள்பொருளை அறியக் கொடுத்துவைத்த தம் ''பன்னிரு சீடரையும்'' நோக்கி இயேசு கேட்கிறார்: ''நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'' (யோவா 6:67) என்று.
இயேசுவின் போதனை, அவர்தம் சீடர்களின் கருத்துக்களையும் பொதுமக்கள் சிந்தனையையும் புரட்டிப்போடுவதாக அமைந்த நேரங்கள் இருந்தன. மக்களின் பொதுவான சிந்தனை ஒரு போக்கில் இருக்கவே, இயேசுவின் போதனை அவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்ததுண்டு. தம்மையே மக்களுக்கு உணவாக அளிக்கப்போவதாக இயேசு கூறிய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்கினார்கள் என்பதை நாம் அறிகிறோம். ஏன், இயேசுவோடு கூடியிருந்து அவரோடு நெருங்கிப் பழகிய அவருடைய சீடர்கள் கூட இயேசு தம் உடலையும் இரத்தத்தையும் அவர்கள் உண்ணவும் பருகவும் வேண்டும் என்று கூறியதை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டினார்கள். அப்போது பல சீடர்கள் இயேசுவிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டார்கள். அவருடைய போதனை அவர்களுக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. இப்பின்னணியில்தான் இயேசு தம் நெருங்கிய நண்பர்களாக இருந்த பன்னிரு திருத்தூதர்களையும் நோக்கி ''நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'' என்று கேட்கிறார். இக்கேள்வியில் ஒருவித வேதனை தெரிவது நமக்குப் புரிகிறது.
'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு எல்லார் பெயராலும் பதிலளிக்கிறார் பேதுரு. அவர் அளித்த பதில் இயேசுவில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. ''ஆண்டவரே, யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன'' என பேதுரு அளித்த பதில் நம் இதயத்திலிருந்தும் உதடுகளிலிருந்தும் எழ வேண்டும். நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் இயேசுவிடம் இருப்பதால் அவருடைய போதனைக்கு நாம் எப்போதும் செவிமடுக்க வேண்டும். இயேசுவை நம்பி, அவரைப் பின்செல்வதாகக் கூறிய பன்னிரு சீடர்கள் தங்கள் உறுதிப்பாட்டிலிருந்து தடுமாறிய நேரங்கள் இருக்கத்தான் செய்தன. யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்தார்; பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தார்; எல்லாரும் இயேசுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்றறிந்ததும் அவரைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டார்கள். இவ்வாறு உறுதியற்ற நிலையில் இருந்த சீடரை இயேசு தூய ஆவியின் வல்லமையால் உறுதிப்படுத்தினார். அவர்களும் துணிந்து இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவிக்கலாயினர். இயேசுவுக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கவும் முன்வந்தார்கள்.
'ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன' என்று பேதுருவால் எப்படிச் சொல்ல முடிந்தது, என்பது குறித்துச் சிந்திப்போம்? பன்னிருவர் சார்பாக பேசும் பேதுரு கொண்டிருந்த விசுவாசம், இயேசுவின் மீதான உறுதியான நம்பிக்கை, இங்கு வெளிப்படுகிறது. நம்பிக்கை என்பது கண்களால் பார்ப்பது அல்ல. கண்களை மூடியவுடன் பார்ப்பது. கண்களை மூடி அல்லது, கண்களைக் கடந்து பார்ப்பது. நம்பிக்கைப் பார்வை இருந்தால்தான் எந்த செயலும் சாத்தியம். இதையே பவுல், 'நாங்கள் காண்பவற்றை அல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை' (2 கொரி 4:18) என்கிறார். இந்த வார்த்தைகளை இங்கு உண்மையாக்குகிறார், சீடர்களின் தலைவர். ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்?. உம்மைப் பின்பற்றுவது, புரிந்து கொள்வது கடினமானதாக இருந்தாலும், உமது வார்த்தைகள்தான் எங்களை வாழவைக்கும் என்று அவரிடமே அடிபணிகிறார்.
இயேசு நம் அனைவருக்கும் நிலைவாழ்வில் பங்களித்துள்ளார். இத்தகைய அரும் பேற்றினைப் பெற்றுக் கொண்ட நாம் வேறு யாரைத் தேடிச் செல்ல முடியும்? நம் வாழ்வின் ஆழ்ந்த வேட்கையை நிறைவேற்றுபவர் இயேசு. நம் இதயத்திலிருந்து எழுகின்ற தாகத்தைத் தணிக்கின்றவர் அவர். இவ்வாறு, இயேசு நம் வாழ்க்கையை நிறைவுசெய்வதால் அவரிடமே நாம் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டும். அவரிடமிருந்தே நாம் கடவுளின் சக்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இயேசுவே கடவுளின் அருளை நம் இதயத்தில் பொழிந்து நம் வாழ்வின் வேட்கையைத் தணிப்பவர்.
வயிறார உணவு கொடுத்தவரே, ஆன்மீக உணவு பற்றிப் பேசியபோது, மக்கள் கூட்டம் மட்டுமல்ல, பல சீடர்களும் தடுமாறினர், தடம் மாறினர். இயேசுவுக்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியது. நாமும் இயேசுவின் போதனையைக் கேட்டு அதன்படி நடக்கும்போது எதிர்ப்புகள் எழலாம். அவற்றைப் பொருட்படுத்தாமல் இயேசுவின்மீது கொண்ட உறுதியான நம்பிக்கையில் நிலைத்திருந்தால் ''நிலைவாழ்வை''க் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்று மகிழ்வோம் என்பது உண்மை.
ஒருவர் பின் ஒருவராக ஏராளமானோர் தன்னை விட்டு விலகிப் போவதைக் கண்ட இயேசு, தன்னுடைய நம்பிக்கைக்குரிய சீடர்கள் பன்னிரண்டு பேரையும் திரும்பிப் பார்த்து, ‘நீங்களும் போய்விட எண்ணுகிறீர்களா?’ என்று கேட்டபோது, ‘இல்லை ஆண்டவரே ! வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் இருக்க நாங்கள் யாரிடம் போவோம்?’ என அவர்கள் உறுதியுடன் சொன்னார்கள். அந்த உறுதி இன்று நம் தலைமுறையினரிடம் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் சொல்லப் பார்ப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்